Archive for April 11, 2009
Accepted – திரை விமர்சனம்
ப்ளஸ் 2 முடித்தவுடன் அடுத்தது நம் உள்ளூணர்வு என்ன படிக்க வேண்டும் என்று சொல்வதை கேட்காமல் மற்றவர்களின் விருப்பத்திற்கிணங்க இன்ஜினியரிங் நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை பார்த்திருப்போம். ஒரே பள்ளியில் படித்த நண்பர்களுக்குள் சில மோதல்கள் நடக்கும்காலமும் இதுவே.
பன்னிரெண்டு வருடங்கள் ஒன்றாக படித்து நல்ல நண்பர்களாக இருந்து இன்ஜியனரிங் படிக்கும் காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு முறையில் படிக்க ஆரம்பிக்கும் காலம் மிகக் கொடுமையான காலம். என்னைவிட அவனுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்திருக்கிறது என மெல்லிய பொறாமை அரும்பும் காலம்.
நாம் விரும்பிய கல்வி நிறுவனத்தில் நமக்கு இடம் கிடைக்காவிட்டால் நமக்கு ஏற்படும் துயரம் இருக்கிறதே. அதை அனுபவித்தால் தான் தெரியும். நானும் அனுபவித்திருக்கிறேன். பிரபல மருத்துவ கல்வி நிலையம் என்னுடைய விண்ணப்பத்தினை நான் ப்ளஸ் டூவில் காமர்ஸ் படித்திருப்பதால் நிராகரித்த போது மனம் உடைந்தே போனேன். 🙂
இது போன்ற நிகழ்வுகளை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் விவரிக்கும் படம் தான் இது. சில நகைச்சுவைகள் மெல்லிய வரம்பு மீறலுக்குள் இருக்கும் என்பதால் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்க வேண்டிய படம். (சொன்னால் கேட்கவா போகிறீர்கள்?)
பர்ட்ல்பி கேயின்ஸ் என்னும் மாணவன் தன்னுடைய உயர்நிலைப் பள்ளியில் குறும்புகள் செய்து படிப்பினை முடித்து, மேற்படிப்பிற்காக நிறைய கல்லுரிகளுக்கு விண்ணப்பித்துள்ளான். ஆனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் அவனுடைய விண்ணப்பத்தினை நிராகரித்து விடுகின்றன.
தான் மேற்படிப்பு படிக்க போவதில்லை என அவன் தன் குடும்பத்தினரிடம் பல்வேறு சார்ட்கள் மூலம் இரவு உணவின் போது விளக்க முற்படும் கட்டம் மிகவும் சுவையானது. ஆனால் அவனின் பெற்றோர்கள் அவன் மேற்படிப்பு படித்தே ஆகவேண்டும் என வற்புறுத்துகிறார்கள்.
அவனின் நண்பனும் கணினி புலியுமாகிய ஹெர்மன்னுக்கு அவன் விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்து விடுகிறது. பெற்றோர்களின் வற்புறுத்தல் தாங்க முடியாமலும், அனைத்து கல்வி நிறுவனங்களும் அவனுடைய விண்ணப்பத்தினை நிராகரித்துவிட்ட நிலையில் அவனுக்கு வேறு வழியே தெரியவில்லை.
இவனே ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்குகிறான். நிறுவனத்தின் பெயர் South Harmon Institute of Technology (S.H.I.T).
பெற்றோர்கள் நம்ப வேண்டுமென்பதற்காக தன் நண்பன் ஹெர்மனிடம் ஒரு இணைய தளத்தினை உருவாக்க சொல்கிறான். ஒரு க்ளிக்கில் அட்மிஷன் என்பதுதான் ஸ்லோகன். இவனின் சில நண்பர்களும் இது போன்ற நிராகரிப்பை பெற அவர்களையும் சேர்த்துக் கொள்கிறான்.
பெற்றோர்கள் அந்த கல்வி நிறுவனத்தை பார்க்க வேண்டும் என சொல்கிற போது பொய்யை டெவலப் செய்ய ஒரு பாழடைந்த மனநிலை மருத்துவ நிலையத்தை வாடகைக்கு எடுத்து பெயிண்ட் அடித்து கல்வி நிறுவனமாக மாற்றி விடுகிறார்கள்.
ஒரு வழியாக அவர்கள் எல்லோரையும் சமாளித்து வழியனுப்பி விட்டு அப்பாடா என நிம்மதியாக உட்காருகையில் வாசல் கதவு தட்டப்படுகிறது.
போய் பார்த்தால் ஒரு புதிய மாணவன் தான் இந்த நிறுவனத்தில் அட்மிஷன் கிடைத்திருப்பதாக சொல்கிறான். இவன் திகிலடைய, பின்னால் 200-க்கு மேற்பட்ட மாணவர்கள் நிற்கிறார்கள்.
அந்த இணைய தளம் அதனுடைய ஸ்லோகனுக்கு ஏற்ப விண்ணப்பித்த அனைவருக்கும் அட்மிஷனை கொடுத்திருக்கிறது.
அந்த நிறுவனத்தை அவன் எப்படி வெற்றிகரமாக நடத்துகிறான், இதனால் அருகில் இருக்கும் மற்றொரு கல்வி நிறுவனம் கொள்ளும் சந்தேகம், அதனால் வரும் நீதி விசாரணையை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதுதான் மீதிப் படம்.
படம் முழுவதும் நகைச்சுவை விரவிக் கிடக்கிறது. இந்த படத்திற்கு இணைய தளங்கள் நெகடிவ் விமர்சனங்களை அளித்துள்ள போதிலும் படம் அருமையான நகைச்சுவை படம்.
கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்கள் தங்களுடைய பாடங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என சொல்லும்போது ஒரு மாணவன் தன்னுடைய எண்ணத்தால் ஒரு இலக்கை சிதறடிப்பதே நோக்கம் என சொல்கிறான். முதலில் அதிர்ந்தாலும், Best of Luck என சொல்லி முயற்சி செய் என சொல்கிறான். படம் முடிகையில் அவன் அடுத்த கல்லுரி முதல்வரின் காரை வெடிக்க வைத்து ‘நான் சொன்னேன்ல’ சொல்லும்போது படம் முடிகிறது.
கல்லுரி நகைச்சுவை என ஒரு படங்களில் ஒரு வகை உண்டு. அது போன்ற படங்களில் இது மிகவும் சிறந்த படம் எனலாம்.
Recent Comments