நம் சிறிய வயதில் மாயாஜால கதைகளை தாத்தா, பாட்டியிடமிருந்து கேட்டிருப்போம். கேட்ட கதைகளை அசைப்போட்டுக் கொண்டே இரவு நேரத்தில் சிந்தித்துக் கொண்டிருப்போம். அந்த சாகச இளவரசனுக்கு நம்மால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என மனதில் கற்பனைகள் ஊறிக் கொண்டிருக்கும்.
கோட்டை என்பது எப்போதும் ஒருவித பத்திரத் தன்மையை மக்களுக்கு கொடுப்பது. ஒரு கோட்டையை சுற்றி கிராமங்கள் அமைவதும் அதனால்தான் என நினைக்கிறேன். சில நேரங்களில் கோவில்களை சுற்றியும் கிராமங்கள் அமைவதுண்டு. மனித சமுதாயம் எப்போதும் ஒருவித பத்திரமின்மையை பற்றி நினைத்துக் கொண்டே இருக்கிறது.
கோட்டைகள், போர்கள் என நம் மனதில் உள்ள பிம்பங்களை திரைப்படத்தில் பார்க்கும்போது ஒருவித ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும். அந்த காலத்தில் சரித்திர படங்களின் லட்சணம் அப்படி. அந்த கதைகள் நம் மனதில் இன்னும் இருந்தாலும் அந்த கற்பனை ஊற்றுகள் அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் வற்றிப் போய் விடும் நிலையே தற்சமயம் இருக்கிறது.
இது போன்ற சமயங்களில் இத்தகைய படங்களை எடுப்பதற்கு மிகுந்த மனத்திடம் வேண்டும். இந்த திரைப்படத்தினை இயக்கியவர் ஹயஒ மியஸகி ( Hayao Miyazaki). பொதுவாக ஒரு இயக்குநரின் திரைப்படங்களில் மாஸ்டர்பீஸ் என ஒரு திரைப்படத்தினை மட்டுமே குறிப்பிட முடியும். இவரின் சித்திர படங்களை பார்த்தால் அது மிகவும் கடினமான காரியம் என்பது தெரியும்.

படத்தின் போஸ்டர்
படமானது ஒரு கற்பனை ஊரில் ஆரம்பிக்கிறது. அங்கே மனதிற்கு பிடிக்காத ஒரு வேலையை செய்துக் கொண்டிருக்கும் சோபி என்னும் பெண். அவள் கடைக்கு வரும் ஒரு சூனியக்காரி அவளின் பேச்சை தவறாக எண்ணி அவளை வயதானவளாக ஆக்கி சபித்துவிடுகிறாள்.
மனம் நொந்து அந்த ஊரைவிட்டு மலைப்பாங்கான இடத்திற்கு செல்லும் சோபியை நோக்கி பனிமூட்டத்திற்கு நடுவே ஏதோ ஒரு பிரமாண்டமான ஒன்று வருகிறது. மெள்ள, மெள்ள பனித்திரை விலக ஒரு கோட்டை அவளை நோக்கி நடந்து வருகிறது. கற்பனையின் உச்சகட்டம் இது.
எவ்வித வார்த்தைகளாலும் வர்ணிக்கமுடியாத கட்டம் இது. கோட்டை என்பது எப்போதுமே ஒரே இடத்தில் இருப்பது. அதைச் சுற்றித்தான் காட்சிகள் அமையும். கோட்டையே நகருவது என்ற கற்பனையை சுற்றி பின்னப்பட்டிருப்பதே இந்த சித்திரப்படம்.

நடக்கும் கோட்டை
அந்த கோட்டையானது ஹொல் என்ற இளம் மந்திரவாதிக்கு சொந்தமானது. இளம்பெண்களின் இதயத்தை தின்பவன் என்ற வதந்தி அவனைப் பற்றி உண்டு. அந்த கோட்டைக்கு சக்தியை அளிப்பது கல்சிபர் என்கிற தீப்பிசாசு.
அந்த கோட்டையில் தங்கும் சோபி சந்திக்கும் சாகசங்கள்தான் மீதிக் கதை. உண்மையிலேயே ஹொல் கெட்டவனா? அவனின் மனதில் உள்ள இரகசியம்தான் என்ன? அவனுக்கும் தீப்பிசாசுக்கும் உள்ள இரகசிய ஒப்பந்தம்தான் என்ன? சூனியக்காரியின் சாபத்தை அவனால் நீக்க முடிந்ததா? கதையை சொன்னால் படத்தின் சுவாராஸ்யம் குறைந்து விடுமா? சான்ஸே இல்லை.
அந்த நடக்கும் கோட்டையை ஒரு ஆற்றின் கரையில் நிறுத்தி தேநீர் அருந்தும் காட்சி போல் நிறைய கவிதை மயமான காட்சிகள் இந்த சித்திர படத்தில் உண்டு. ஆங்கில நாவலின் மூலக்கதை ஒரு சிறந்த ஜப்பானிய சித்திரக் கதை இயக்குநரால் படமாக்கப்பட்டிருக்கிறது. IMDB யில் இதற்கு 8.1/10 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் சிறந்த 250 படங்களில் இதற்கும் இடம் இருக்கிறது.
ஜப்பானிய மொழியில் ஆங்கில துணையெழுத்துகளுடன் பார்த்தேன். வேறு விதமான வெர்ஷன்கள் கூட வந்திருக்க கூடும். இணையத்தில் எப்படி கிடைக்கிறது என தெரியவில்லை. சித்திர படங்களில் முதல் 10 என்ற கணக்கீடு இப்போது எடுக்க நேர்ந்தால் கண்டிப்பாக இப்படத்திற்கு ஒரு இடம் உண்டு. அமெரிக்காவில் பெரிய அளவில் இந்த திரைப்படம் ஏன் கண்டுக்கொள்ளப்படவில்லை என ஆச்சரியப்படுகிறேன்.
தவறவிடக்கூடாத ஒரு சித்திர படம்.
April 10, 2009 at 11:19 pm
Recent Comments