Archive for March 14, 2009
2015 இந்தியா – கொசுக்களை காப்போம்
2015-ம் ஆண்டில் இந்தியாவில் அதிக விற்பனையாகும் ஆங்கில தினசரியில் வெளியான முக்கிய செய்தியின் தமிழாக்கம் :
‘இந்தியாவில் கொசுக்களின் இனவிருத்தி அறவே குறைந்து கொசுக்கள் அழியும் உயிரினப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்து ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லி இந்திய அரசாங்கத்தை கேட்டுள்ளது. நமது நிருபர் குழு சேகரித்த விவரங்களின்படி, இந்திய அரசாங்கம் தொடர்ந்து கொசுக்களை ஒழித்த வண்ணம் தான் உள்ளது என்றும், இந்நிலைமை நீடித்தால் கொசு என்ற இனமே இல்லாமல் போய்விடும் என்ற திடுக்கிடும் விவரத்தினை கண்டறிந்துள்ளார்கள். ’
இந்த கொசு அழிப்பை குறித்து பெல்ஜிய நாட்டை சேர்ந்த குண்டர் பஸ்டர் எழுதிய ‘The Rise and Fall of Mosquito’ என்ற 100 பக்க புத்தகம் (விலை ரூ.4,800-) இந்தியாவின் சிந்தனைவாதிகளால் மிகவும் சிலாகிக்கப்பட்டு வருகிறது. இந்த புத்தகத்தின் காம்ப்ளிமென்ட் காப்பியை பெற்ற ஒரு பிரபல மருத்துவர் இந்த புத்தகமானது பல்வேறு விஷயங்களின் மீது ஒரு தெளிவினை உண்டாக்குகிறது என்ற குழப்பமான தகவலை வெளியிட்டார்.
‘மஸ்க்கி – மை பிரண்ட்’ என்ற தலைப்பில் பாலிவூட்டின் பிரபல இயக்குநர் கொசுவிற்கும் ஒரு சிறுவனிற்கும் உள்ள நட்பை பற்றி விளக்கும் படம் ஒன்று எடுக்கப்போவதாக கூறியிருக்கிறார். கதை நாயகனிற்காக நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கிறார்கள், தகுந்த கொசு அகப்பட்டவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் தெரிவிக்கிறது ஒரு திரைப்பட்சி.
இது குறித்து இந்திய அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலிருந்து :
‘கொசு, மக்கள் இரண்டுமே இந்த அரசாங்கத்தின் இரு கண்கள். கொசு தற்போது அழிவு நிலையில் இருப்பதால் அரசாங்கம் அந்த அப்பாவி ஜீவராசியின் அழிவினை தடுக்க கடுமையான சட்டத்தினை அமுல் படுத்தப் போகிறது. ’
கொசுக்களை அழிவினை தடுக்க புதிதாக M.O.S.A (Mosquitto Act) என்ற புதிய சட்டத்தினை கொண்டு வந்திருக்கிறது. கொசுக்களை அழிப்பவர்கள் மீது இச்சட்டம் பாயும் என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நடந்த அதி இரகசிய சட்ட அமைச்சக கூட்டத்தில் முதலில் இந்த சட்டமானது S.A.M.O.S.A. (Special Anti Mosquitto Act) என கொண்டுவரப்பட்டதாகவும், அங்கே டீ கொடுக்க வந்த பையன் கெக்கெ பிக்கென்னு சிரிக்க ஆரம்பித்ததால் அது M O S A என ஆக்கப்பட்டதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புது டெல்லியில் இருக்கும் பிரபல பல்கலைக் கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் திரு குப்தா அவர்கள் மனிதர்கள் ஒரு வகையான மனப்பிரமையில் எப்போதுமே இருக்கிறார்கள் என்றும், மனிதன் தன் பத்திரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக எவ்வளவு தொலைவு போய்விட்டான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த கொசு அழிப்பு என்றும் குறிப்பிட்டார். டைனோசர் அழிவிற்கு கூட மனிதர்கள் தான் காரணம் என தான் நம்புவதாக கூறினார்.
இது குறித்து மற்றொரு பேராசிரியர் திரு சந்திரா அவர்களிடம் கேட்டபோது, திரு குப்தா கூறிய கருத்துகளை தான் ஏற்றுக் கொள்ள வில்லையென்றும், டைனோசர் காலத்தில் மனிதர்கள் வாழவில்லை என்றும், அவர் ஒரு மாங்கா மடையர் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
இவரின் கருத்துகளை பேராசிரியர் குப்தாவிடம் தெரிவித்தபோது அவர் அதிர்ச்சியடைந்து, பேராசிரியர் சந்திராவின் பிறப்பினை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் சந்தேகம் எழுப்பினார்.
பிரபல வட இந்திய கட்சி ஒன்று தமது அடுத்த தேர்தல் பிரச்சாரத்தினை கீழ்க்கண்ட ஸ்லோகனை வைத்தே தொடங்க போவதாக அறிவித்துள்ளது :
‘ஓ மேரா மஸ்கிட்டோ, ஆ தேரா விஸ்கிட்டோ’
Recent Comments