Archive for February 7, 2009
நான் கடவுள் – திரை விமர்சனம்
முதல் வாரமே தமிழ் படம் பார்க்கக் கூடாது என புதிய வருட தீர்மானம் நிறைவேற்றியிருந்தேன். தமிழக அரசு நிறைவேற்றும் தீர்மானங்கள் போல் விதி விலக்குகள் கொடுக்கலாம் என முடிவு செய்து பாலாவின் நான் கடவுள் படம் இன்று திரையரங்கத்திற்கு சென்று பார்த்தேன்.
நிறைய எதிர்பார்ப்புகளுடன் சென்றதால், படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது ஒருவித ஏமாற்றமே இருந்தது. நிறைய பேருக்கு அப்படிதான் இருக்குமென நம்புகிறேன். படம் பார்த்து விட்டு நிறைய நேரம் யோசிக்கும்போது இன்னும் அதிகம் ஏமாற்றமாக இருக்கிறது.
படத்தின் கதை. ஜெயமோகனின் நாவலான ஏழாவது உலகத்தின் கதை மாந்தர்களுடன் ஒரு அகோரி வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? அதுதான் கதை. பிச்சைகாரர்களின் இருண்ட உலகத்தை பற்றி தமிழில் வெளிவரும் முதல் படம் இதுவாகதான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் வெகுஜன அம்சங்களுடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலா.
இந்த திரைப்படம் வருவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களால் படத்தின் தொகுப்பில் தளர்வுகள் நிறைய தென்படுகின்றன. குறிப்பாக படத்தின் ஆரம்ப காட்சிகள் மற்றும் இறுதிக் காட்சிகள். ஆர்யாவை அகோரி சாமியார் வேடத்தில் ஒன்ற வைக்க நிறைய முயற்சிகளை இயக்குநரும் நடிகரும் முயன்றிருக்கிறார்கள். அந்த உழைப்பு நன்றாகவே தெரிகிறது. ஆர்யா தொழில்முறை நடிகர். நிறைய உழைத்திருக்கிறார். ஆனால் இத்திரைப்படத்தில் மற்ற சக பாத்திரங்கள் மிக அநாயசமாக நடித்திருக்கிறார்கள். ரூத்ரனின் அப்பாவாக வரும் பாத்திரத்தை தவிர. இந்த பெருமையெல்லாம் இயக்குநருக்குதான் செல்ல வேண்டும்.
படத்தின் வசனங்களை (அனைத்தையுமா என்று கேட்டால் கேள்விக்குறிதான்) எழுதியவர் ஜெயமோகன். நறுக்கு தெறித்த, வட்டார மொழியில் உரையாடல்கள் வந்திருக்கின்றன. சிறந்த வசனத்திற்கான விருது கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டாம், ஜெயமோகன். இன்னும் வில்லு மற்றும் சக்கரக்கட்டி படத்தின் வசனங்கள் தான் முதல் மற்றும் இரண்டாமிடத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
இதர கதை நாயகர்களில் மனதை கவர்பவர்கள். கவிஞர் விக்கிரமாதித்யன். மிக சிறப்பான உடலசைவு. உங்கள் கவிதையை போல நடிப்பும் நன்றாக உள்ளது. குருவி ரொட்டி சாப்பிடும் குழந்தை. அதன் பார்வையை படமாக்கிய ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சன். அட்டகாசமாக சிரிக்கும் அந்த சிறுவன். மொட்டைத் தலை குரூர வில்லன். வெட்க சிரிப்பு சிரிக்கும் எருக்கு. கண்பார்வை இல்லாத பூஜா. இன்னும் சில பாத்திரங்கள் விட்டு போயிருக்கலாம். விளிம்பு நிலை மனிதர்களாக இவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்புத் திறன் மிகச் சிறப்பாக உள்ளது. இந்த படத்தில் நடித்த பிறகு இவர்களின் வாழ்க்கை முறை சீராக இயக்குநர் பாலா உதவியிருப்பார். இதுவரை அதை வெளியில் சொல்லவில்லையென்றாலும் அதற்கான பாராட்டையும் அவருக்கு அளித்தாக வேண்டும்.
உலகப் புகழ் பெற்ற இந்திய சென்சாருக்கு பயந்து நிறைய காட்சிகளை (உதாரணத்திற்கு அகோரியின் லஞ்ச்) இலைமறை காயாக காட்டியிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை காணும் கலைக் கண்களில் எத்தனை ஜதை கண்களுக்கு இலையை விலக்கி பார்த்து புரிந்துக் கொள்ள போகிறது என தெரியவில்லை. இந்த படத்தை பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் இந்த படத்தை பற்றிய சலிப்பினையே ஏற்படுத்தும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
பாலா, இளையராஜா,ஆர்தர் ஏ வில்சன், ஜெயமோகன் இவர்களின் கூட்டு முயற்சியில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் பார்த்த பிறகு நமக்கு ஏற்படும் உணர்வுகளால் மனம் கனத்து ஒருவித சலிப்புடன் வெளிவர நேரிடும். இதனால் இத்திரைப்படம் வணிக ரீதியாக பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனினும் இது போன்ற புதிய களனை தேர்ந்தெடுத்து, மிக நேர்த்தியான கதை மாந்தர்களை உலவ விட்டதற்காக இத்திரைப்படத்தினை கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தே ஆக வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வில்லு 2க்கு தயாராகுங்கள்.
பின்னிணைப்புகள் :
கதை நாயகர்களில் ஒருவரான அந்த அழகிய பாப்பாவை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருப்பதை படிக்க மதுபாலா.
‘நான் கடவுள்’ படத்தின் நீளம் எதற்காகவோ வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. காசியில் எடுக்கப்பட்ட பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிகிறேன். இந்த படம் தயாரிப்பாளரால் டிவிடியாக வரும்போது நீக்கப்பட்ட பல காட்சிகளை இணைத்தால் ஒருவேளை இந்த படம் தெரிவிக்க விரும்பும் உணர்ச்சிகளை பார்வையாளர்கள் புரிந்து கொள்ள இயலலாம்.
நடிகர் ஆர்யா இந்த படத்திற்கு முன் ஒரு Boyish Hero ஆக அறியபட்டார். இந்த படம் அவருக்கு ஒரு மெச்சூரிட்டியை ஏற்படுத்திக் கொடுக்குமென்றால், அந்த மூன்று வருடங்கள் ஒன்றும் அவருக்கு பொருட்டில்லை என நினைக்கிறேன். இதற்கு அவரின் அடுத்த திரைப் படத்தை பார்க்கும்போதுதான் தெரியும்.
இத்திரைப்படத்தில் வரும் காட்சிகளில் மறைபொருள் பற்றி முழுக்க எழுதினால் பார்வையாளருக்கு நிறைய சலிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அக்காட்சி வருவதற்கு முன்னே அவரின் மனது ஒருவித பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கும். அட, ஜெயமோகன் ஒரு இந்துத்துவ வாதியப்பா. இது போன்ற தவறான அபிப்பிராயங்களை உருவாக்கி விடக்கூடும்.
விமர்சனம் எழுதும் திரைப்படத்தினை உலகத் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு தப்பிட்டு எழுதுவது தற்சமயம் ஒரு புதிய வகை திரை விமர்சனம் எழுதும் வகையாக இருக்கிறது. அதனை தவிர்த்து இருக்கிறேன்.
Recent Comments