Archive for December 21, 2008
சித்திரங்களின் இரசிகன் II – மை நேம் இஸ் பில்லா
நான் மூன்றாவது அல்லது நான்காவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் இரஜினி காந்தின் பில்லா படம் வெளியாகியது. மிகுந்த பரபரப்பை உருவாக்கிய படம். என் வகுப்பில் படிக்கும் அனைவரும் அந்த படத்தை பார்க்க வேண்டுமென்ற பரபரப்பில் இருந்தோம்.
ஆறாவது படிக்கும் ஒரு அண்ணன் எங்கள் வகுப்பிற்கு ஒருநாள் தான் அந்த படத்தை பார்த்து விட்டதாக கூறியபோது, ஒலிம்பிக் போட்டியில் ஒரு டஜன் தங்கங்களை வாங்கி வந்த ஒரு சிங்கத்தை பார்ப்பது போல அவரை பார்த்து வியந்து போனோம். படத்தின் கதையை கூற அவர் மிகவும் பிகு பண்ணினார். அவர் சில காட்சிகளை பற்றி பட்டும் படாமலும் கூற ஆரம்பித்தார்.
‘இரசினி துப்பாக்கியால பட்டுபட்டுன்னு நுாறு பேரை சுடுவார் தெரியுமா?’ ஒவ்வொரு காட்சியை விவரிக்கும் போதும் தெரியுமா என்ற கேள்வியுடனேயே முடித்தார்.
‘துப்பாக்கியால நுாறு பேர ஒரு தடவையில சுட முடியுமா?’ இந்த கேள்வியை கேட்டது நான்.
‘அப்ப முடியாதுன்னு சொல்றீயா?’ என ஒருவித தன்னம்பிக்கையுடன் கேட்டார். உலகம் உருண்டை என்று சொன்னபோது கலீலியோவை இந்த உலகம் எப்படி பார்த்ததோ அதேபோல் வகுப்பே என்னை ஒருவித வெறியில் பார்த்தது.
‘பொதுவா முடியாது தான். ஆனா இரஜினியால முடியும்’ என சொல்லி சமாதான புறாவானேன்.
அந்த அண்ணன் என்னை முறைத்துவிட்டு மேலும் சில காட்சிகளை விவரிக்க தொடங்கினார். அந்த படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆவல் எங்களுக்கு அதிகரித்தது. பொதுவாக இரஜினியை நாங்கள் அப்போது ஒருவித சூப்பர் மேன் போலவே பார்த்துக் கொண்டிருந்தோம். படத்திலும் அம்மாதிரியான சித்தரிப்புகள் தான் வரும். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அண்ணன்களும் அதே போல் நம்பினர். அப்போது மறு துருவமாக இருந்த கமல் ஹாசனை யாருக்கும் அவ்வளவாக பிடிக்காது. காரணங்கள் : அவர் படங்களில் இருபத்தைந்து அல்லது முப்பது ஆட்களையே அடிப்பார். துப்பாக்கியை சரியாக கையாள தெரியாது. முக்கிய காரணம் அவர் படங்களில் கதாநாயகிகளுடன் அவர் நடந்து கொள்ளும் முறை எங்களுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.
மாணவர்களுக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்ற ஒரு தவறான கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால் பில்லா படத்தை பார்க்க வேண்டுமென்பதற்காக அப்போதே நாங்கள் போலி வாக்குறுதிகளை கொடுக்க ஆரம்பித்தோம். எல்லோரும் வீட்டில் காலாண்டு தேர்வில் முதல் ரேங்க் வாங்குவதாக வாக்குறுதி அளித்தோம். சிலர் வீட்டில் நம்பினார்கள். சிலர் வீட்டில் அது மிகுந்த நகைச்சுவை அளிக்கும் வாக்குறுதியாக நம்பப்பட்டது. எது எப்படியோ, எல்லோரும் ஒரு வாரக்கடைசியில் பில்லா பார்த்து விட்டோம்.
திங்கள் கிழமை பள்ளி திறப்பதை எண்ணி வாழ்க்கையிலே முதன்முதலாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம். பில்லா படம் எங்கள் வாழ்க்கை முறைகளை வெகுவாக மாற்றியது. நாங்களும் பில்லாவானோம். அப்போது வழக்கத்தில் இருந்த சில பிரசித்தி பெற்ற வாசகங்கள் :
‘பில்லா வீட்டுக் கணக்கு செய்யமாட்டான்.’
‘பில்லாவுக்கு உன் இரப்பரை தரியா? உனக்கு ஏற்கெனவே ஒரு பென்சில் குடுத்துருக்கேன். மறந்துறாத’
‘பில்லா டியுசனுக்கு போகமாட்டான்.’
‘பில்லாவுக்கு சரக்கு எடுத்துட்டு வந்திருக்கீயா?’ இந்த கேள்வி எங்கள் பள்ளி வாசலில் நாகப்பழம், நெல்லிக்காய் விற்கும் ஒரு தாத்தாவிடம் கேட்கப்படும் கேள்வி. அவரும் எங்களை பில்லா என மதித்து சரக்கு வந்துருக்கு பில்லா என ஒவ்வொருவரிடம் சொல்லி தன் வருமானத்தை பெருக்கினார்.
சில எட்டாம் வகுப்பு மாணவர்களால் சென்சார் செய்யப்படும் அளவில் சில வாக்கியங்கள் புழங்கப்பட்டன. பில்லாவின் புகழை தாங்க இயலாத எங்கள் வகுப்பு ஆசிரியர் ஒருநாள் பொங்கி எழுந்து எல்லோருக்கும் வில்லனானார். அப்போது சொல்லப்பட்ட ஒரே பிரசித்தி பெற்ற வாக்கியம் :
‘நான் பில்லா இல்ல, இல்ல, இல்ல சார், சார், சார் அடிக்காதீங்க……….அம்மா’
பொதுவாக சிறுவர்களுக்கு சூப்பர் ஹீரோக்களைதான் பிடிக்கும். கமல் ஹாசன் எங்கள் மத்தியில் அப்போது இரசிக்கப்படாததற்கு காரணமும் அதுவே. வெகு சில இயக்குநர்கள் இயக்கத்தில் மட்டுமே நடித்ததால், எம் ஜி ஆரால் சூப்பர் ஹீரோ ஆக முடியவில்லை. எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் அது போன்று முதன் முதலில் அறிமுகம் ஆனவர் இரஜினிகாந்த் மட்டுமே. அவர் குணசித்திர வேடங்களில் நடித்த படங்கள் எல்லாமே ஏறக்குறைய திரையரங்கிலிருந்து திருப்பியனுப்பப்பட்டன.
சிவாஜி படம் வரையில் அவர் தன்னுடைய சூப்பர் ஹீரோ தோற்றத்தை மாற்றிக் கொள்ளவில்லை. பொதுவாக நீண்ட காலத்திற்கு ஒருவரே அவ்வாறு நடிக்க முடியாது அல்லவா? பேட் மேனையே இதனால்தான் போட்டு தள்ளிட்டார்கள். இப்போது சூப்பர் ஹீரோக்களின் காலம் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. எந்த கதாநாயகனும் அறிமுகமாகம்போது சூப்பர் ஹீரோவாகவே அறிமுகம் ஆகிறார். ஒரே அடி, அந்த நகரத்தில் மின்சாரம் மங்க வேண்டும், அடியாட்கள் ட்ரான்ஸ்பார்மரில் மோதி பொறி பறக்க வேண்டும். இதைத்தான் இன்னமும் மக்கள் (முழு வளர்ச்சியடைந்த ஹோமோசேபியன்கள்) இரசிக்கிறார்கள்.
என்னுடைய சிறு வயதிலிருந்தே இந்த இரசனை மாறவில்லை. இதனை இரசிக்க தற்போது யாரும் வெட்கப்படுவதில்லை. ஆனால், சிறுவயதில் படித்த சித்திர கதைகளை தற்போது படிக்கிறேன் என சொல்லுவதற்கு இன்னும் நிறைய பேர் வெட்கபடுகிறார்கள். அது அவர்களை Immature என மற்றவர்கள் நினைக்க வைக்கும் என நம்புகிறார்கள்.
சித்திர கதைகளை சிறு வயதில் படித்து இரசித்திருக்கிறோம். ஆனால், அவற்றின் தரம் இப்போது எங்கேயோ போய்விட்டது. சித்திர கதைகள் மற்றும் திரைப்படங்கள் என்பதை இரு கோடுகளாக ஒரு கிராப் (Graph) வரைபடத்தில் குறிக்க முடிந்தால், ஒன்று கீழிலிருந்து மேல்நோக்கியும், மற்றொன்று நேர்கோடாகவே இருக்கும். இப்போது வெளிவரும் ஒரு சித்திர கதையினை நீங்கள் படித்தால், உங்கள் இளமைக் காலங்களில் நீங்கள் படித்ததை விட முன்னேற்றம் (சித்திரத்திலும், கதை அமைப்புகளிலும்) அடைந்ததாகவே இருக்கும் என நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்.
Recent Comments