Archive for December 9, 2008
வேதாள நகரம் – 08 மர்ம கும்பல்
நோவடியிலிருந்து அறுபது மைல்கள் தொலைவில் வந்து கொண்டிருக்கிறது ஒரு கோச் வண்டி.
‘நாம் எப்போது நோவடி போய் சேருவோம்?’
‘இன்னும் நான்கு மணி நேரத்திற்குள் போய் சேர்ந்து விடுவோம், அம்மா.’
‘நல்லது. பொழுது சாய்வதற்குள் நான் அங்கு இருக்க வேண்டும். புரிந்ததா?’
‘அதற்குள் போய்விடலாம், அம்மா.’
——————————————————————————————————————————————–
சண்டைத் திடலின் உள்ளே விஷ்வாவும், சின்ன அணிலும் நின்று கொண்டிருக்கிறார்கள். சின்ன அணிலை பார்த்து நேசத்துடன் ஒரு புன்னகையை விஷ்வா வீசினார். பதிலுக்கு சின்ன அணிலிருந்து ஒரு உறுமல் எழுந்தது. இவ்வளவு கிட்டத்தில் அதாவது ஐந்தடி தொலைவில் சின்ன அணிலை பார்க்கும்போது விஷ்வாவின் உடல் ஆஃப் பண்ணாத போர்ட் மோட்டார் கார் போல உதறிக் கொள்ள ஆரம்பித்தது.
கடைசி நேர சிந்தனைகள் மனதில் ஒட ஆரம்பித்தன. ஒரு ஒசி பீருக்கு ஆசைப்பட்டு, அது புதையல் ஆசையில் முடிந்து, இப்போ நம் கதையே முடியப் போகிறதே. அடுத்தப் பிறவி என்றிருந்தால், நல்ல வாட்டசட்டமான நண்பர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஒற்றைக்கு ஒற்றை என்றாலே சண்டைதானா, இதை தீர்ப்பதற்கு வேறு நிறைய முறைகள் உள்ளனவே. பல்லாங்குழி, தாயப்பாஸ், பரமபதம், ஒடிப்பிடிச்சு இது போன்ற விளையாட்டுகள் நடத்தி அதில் யார் ஜெயித்தது என தேர்ந்தெடுக்க மாட்டார்களா?
‘வீரர்களே, அருகில் வாருங்கள். அந்த புனித துணிச்சுருளை எடுத்து வாருங்கள்.’
புனித துணிச் சுருள் என்பது ஒரு பழைய துணிச் சுருளாக, ஆறடி நீளத்தில், நிறைய எம்பிராய்டரி செய்யப்பட்டதாக இருந்தது. அந்த துணிச் சுருளில் சில இடங்களில் இரத்தக் கறை இருந்தது நம் சுத்த வீரனின் இரத்தத்தை உறைய செய்வதாக இருந்தது.
‘வீரர்களே, இந்த துணிச் சுருளின் ஒவ்வொரு முனையையும் உங்கள் வாயில் கவ்விக் கொண்டு இந்த மரண விளையாட்டில் ஈடுபடுங்கள். எக்காரணம் கொண்டும் துணிச் சுருளை வாயிலிருந்து நழுவ விடக்கூடாது. வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?’
‘இதை துவைக்கவே மாட்டீங்களா?’
——————————————————————————————————————————————–
நோவடியில் உள்ள ஒரு விடுதி.
‘செழிக்கண்ணு, இனி இந்த அறையை விட்டு நாம வெளியே போகவே கூடாது. அந்த கும்பல் இங்கேதான் வந்து தங்கும். அவங்க புதையலை தேடி போகும்போது யாருக்கும் தெரியாம நாம அவங்கள பாலோ பண்ணணும். நாம பாலோ பண்ணுறது யாருக்குமே தெரியக்கூடாது.’
‘நமக்கு கூடவா?’
——————————————————————————————————————————————–
மரணத்தைப் பற்றி நாம் எல்லோருமே ஒரு கட்டத்தில் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறோம். ஒரு சிறிய பிரச்சினை வந்தாலும், அதிலிருந்து மரணம் வரை நம் மனம் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. ஆனால் உண்மையிலேயே உயிர் போகிற பிரச்சினை என்றால் நம் மூளை மிக வேகமாக சிந்திக்க ஆரம்பித்து, அந்த மரணத்திலிருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என பல புதிய எண்ணங்களை தோற்றுவிக்கும். நம் கதாநாயகனை பொறுத்த வரையில் மரணம் அவன் எதிரில் ஒரு துணிச் சுருளை வாயில் கவ்விக் கொண்டு, சிக்ஸ்டீன் பேக்குடன் நின்றுக் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் மின்னலென ஒரு எண்ணம் விஷ்வாவின் மூளையில் உதயமாயிற்று. வாயில் கவ்வியிருந்த துணிச் சுருளை ஒரு ஒரமாக கவ்விக் கொண்டு, சண்டைத் திடலுக்கு வெளியே கேட்காமல் சின்ன அணிலுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.
‘சின்ன அணிலு, உனக்கு ஏன் இப்படி ஒரு பேர் வைச்சாங்கன்னு யோசிச்சியா? நான் யோசிச்சேன்பா. உன் உடம்புல எல்லா பார்ட்டும் பெருசா இருக்கறச்ச உனக்கு ஏன் சின்ன அணிலுன்னு பேரு வைச்சாங்க.’
சின்ன அணிலின் கண்களிலிருந்து பொறி பரக்க ஆரம்பித்தது. அவனின் தாடைகள் இறுகி, உறுமல் எழுந்தது.
‘நானும் இங்கே நிறைய பேருக்கிட்ட விசாரிச்சேன். யாருக்குமே தெரியலை. அப்பால, உன்னோட கேர்ள் ப்ரெண்டுக்கிட்ட போய் கேட்டேன்னு வைச்சுகோயன். அவ தான் சரியா அதுக்கு விளக்கம் சொன்னா.’
இப்போது சின்ன அணிலின் உடல் ஆஃப் செய்யாத அசோக் லேலண்ட் லாரி போல் குலுங்க ஆரம்பித்தது.
‘அவ சொல்றா. உன் உடம்புல எல்லா பார்ட்டும் பெருசா இருந்தாலும், ஒரு பார்ட் மட்டும் சின்ன அணில் சைசில் இருக்குன்னு. அதனாலேதான் உனக்கு சின்ன அணில்ன்னு பேரு வந்துச்சின்னு. என்ன, நான் சரியா தானே பேசிக்கிட்டு இருக்கேன்.’
கோபத்தை அடக்க, பற்களை அரைத்துக் கொண்டு விஷ்வாவை நோக்கி கன வேகத்துடன் வரும்போது, அவன் வாயில் வைத்திருந்த பழைய துணிச் சுருளானது துண்டாகி கீழே விழுந்தது.
உடன் விஷ்வா, ‘நான் ஜெயிச்சுட்டேன். என்னை காப்பாத்துங்க. நான் ஜெயிச்சுட்டேன். என்னை காப்பாத்துங்க’ என கூவியவாறே சண்டைத் திடலை விட்டு வெகு வேகமாக வெளியேறினார்.
‘நல்லது வீரனே, சின்ன அணில் தன் வாயில் வைத்திருந்த துணிச் சுருளை நழுவ விட்டதால், நீ வெற்றி பெற்று விட்டாய். சின்ன அணில் எப்போதும் தோற்பவன் அல்ல. உங்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. கிராமத்தை விட்டு நீங்கள் எந்த நேரத்திலும் வெளியேறலாம். ’
——————————————————————————————————————————————–
‘அவன் ஜெயித்து விட்டான். அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.’
‘சிறிது தொலைவு செல்லட்டும். பிறகு நமது அடுத்த திட்டத்தை செயல்படுத்துங்கள்.’
‘அப்படியே செய்து விடுகிறோம்.’
——————————————————————————————————————————————–
நமது இலட்சிய குதிரை வீரர்கள் மற்றும் எஸ்கோபாருடன் அந்த கிராமத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறுகிறார்கள்.
சிறிது தொலைவு சென்றதும், கலீல், ’விஷ்வா, அங்கே பார்த்தாயா? இருபது குதிரை வீரர்கள் அங்கே நம்மையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். ’
‘அவர்கள் நிற்கும் தோரணையை பார்த்தால் நம் இரசிகர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. ’
முன்னால் நிற்கும் குதிரை வீரனின் சைகையை தொடர்ந்து அவர்கள் சுட ஆரம்பித்தார்கள்.
சதீஷ், ‘வேகமாக இந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவோம். குதிரைகளை நோவடிக்கு விரட்டுங்கள், சீக்கிரம்.’
நமது இலட்சிய வீரர்கள் ஆபத்தை பார்த்ததும் குதிரையில் ஏறி சிட்டென பறந்தனர். ஆனால் அவர்களுக்கும், அந்த மர்ம கும்பலுக்கும் இடைவெளி குறுகிக் கொண்டே வந்தது.
(…………………………………………………………….தொடரும்…………………………………………)
Recent Comments