Archive for November 26, 2008

பெய்யென பெய்யும் மழை

     ஆறு மாதங்களுக்கு முன் ஒரு உணவகத்தில் ஒரு ஆங்கிலேயரை சந்திக்க நேர்ந்தது.  மொழிப் பிரச்சினை காரணமாக எழுவிருந்த ஒரு சங்கடமான தருணத்தை தவிர்க்க அவருக்கு உதவி செய்ய நேர்ந்தது.  பேசிக் கொண்டிருக்கையில், அவர் இங்கிலாந்தில் என்ஜீனியர் என்றும், ஆப்பிரிக்க நாடுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சுற்றுலா வந்திருப்பதாக சொன்னார்.

       கால்பந்தில் ஈடுபாடு எனக்கு உண்டு என்பதால், இருவருக்குமே பேச நிறைய விஷயம் கிடைத்து விட்டதால், நிறைய பேசிக் கொண்டிருந்தோம்.  ஒரு கட்டத்தில் இங்கிலாந்தை போல் என் நாட்டிலும் மழை தவறாமல் பெய்தால், எங்கேயே போயிருப்போம் என குறிப்பிட்டேன்.

       சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு அவர் மெல்ல பேசத் தொடங்கினார் ‘உங்கள் நாட்டில் குறிப்பிட்ட சில நகரங்கள் தவிர வேறு எந்த நகரமுமே கன மழையை உத்தேசித்து கட்டமைக்கப் படவில்லை.  ஒரு நகரம் என்றும் புதிதாக இருக்க சாக்கடைகள் (Drainage) முக்கியம்.  நீங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை.  அதை மிகுந்த அறுவெறுப்புடன் எதிர்கொள்கிறீர்கள் என்பது பார்க்கும்போது தெரிகிறது.    மழையை நீங்கள் எதிர்கொள்ளும் விதமும் சரியில்லை என உணர்கிறேன்.’

      அதுபற்றி அப்போது நான் பெரிதாக எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.  பிறகு டேவிட் பெக்காமை பற்றி நான் சொன்ன கமெண்டிற்கு அவர் மிகவும் உற்சாகமாக பதில் சொல்ல தொடங்கிவிட்டார்.

       தற்போது ஐந்து நாட்களாக பெய்து வரும் மழையை பார்க்கும்போது இதைப் பற்றி தெளிவான பார்வை எதுவுமே நம்மிடம் இல்லை என்றே தோன்றுகிறது.  செய்தித்தாட்களில் மழை பற்றி அக்டோபர், நவம்பர் மாதம் வரும் செய்திகள் எல்லாமே கீழ்கண்டவாறே இருக்கும்.

     புயல் சின்னம் தோன்றி, மழை ஆரம்பிக்கும் 12 மணிநேரத்திற்கு முன் –  வங்கக் கடலில் புயல் சின்னம், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு.

     பலத்த மழை பெய்யும்போது – புயல் தற்போது 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கரையை கடக்கும் வரை பலத்த மழை பெய்யும்.  

      2.  ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்புகின்றன. சென்னை புழலேரியில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது

    3.  ஆற்றோரங்களில் வெள்ளம் வர வாய்ப்பு.  மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல கலெக்டர் அறிவுறுத்தல்.

    4. மிதக்கிறது சென்னை. 

    5. பலத்த மழைக்கு  6 பேர் பலி.

  மழை முடிந்த பின் –  மழை சேதங்களை அமைச்சர் பார்வையிட்டார்.  வெள்ள நிவாரண நிதியாக 100 கோடி மத்திய அரசிடம் கோரியுள்ளார்.

      யோசித்து பாருங்கள்,  வருட வாரியாக இது போன்ற செய்திகளையே நாம் தினசரிகளில் பார்த்து வருகிறோம்.  தென் இந்தியாவில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 340 நாட்கள் நாம்  பகல் பொழுதில் வெயிலை சந்தித்து வருகிறோம்.  மீதியுள்ள 25 நாட்களிலும் கன மழை ஏதேனும் ஒரு 5 நாட்கள் மட்டுமே பெய்யும். அப்படியும் கணக்கில் கொண்டால் தொடர் மழை ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்து நாம் பார்த்ததில்லை.   ஒருவேளை அதற்கு மேல் நீடித்தால் என்ன செய்வது? 

     தமிழ்நாட்டில் வாழும் நாம் உள்ளூர மழையை சந்திக்க தயாராக வில்லை என்றே தோன்றுகிறது.  நகரங்களும் பலத்த மழையை தாங்கும் வண்ணம் கட்டமைக்கப்படவில்லை.  எது நேர்ந்தாலும் வருடத்தில் ஒரு ஐந்து நாட்கள்தான்.  அதற்கு போய் ஏன் இவ்வளவு கவலை என அரசாங்கமும் மறந்துவிடுகிறது.  

    ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வெள்ள சமயத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கையேடுகள் உண்டு.  யார் யாருக்கு என்னென்ன பணிகள் என பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும்.  வெள்ள வடிகால்கள் என ஒவ்வொரு முக்கிய ஆறுகளுக்கும் உண்டு.  அவை சரியாக பராமரிக்கப்படாமல் சீரடைந்து கிடக்கின்றன.  ஒரு சாதாரண மழை நீர் கூட சரியாக வடிகால் இல்லாமல் தேங்கி அதனால் பலவித உபாதைகள் எழுகின்றன.

     அதனை சரிசெய்ய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதில்லை.  அப்புறம், சாலைகள்.  தேசிய நெடுஞ்சாலையை தவிர வேறு எந்த உள்ளூர் சாலைகளும் மழையில் அடித்துச் செல்லப்படுவதை எத்தனை தடவை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம்.  வெள்ள நிவாரண பணிகள் செவ்வனே நடைபெற சீரான போக்குவரத்து முக்கியம்.  சாலைகளே அடித்துச் செல்லப்படும் போது, என்ன வெண்டைக்காய் நிவாரணப் பணிகள்.  சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை நமது தினசரிகள் அது சாலைகளின் தவறே ஒழிய, அரசின் தவறில்லை என்ற வகையில் செய்திகள் வெளியிடும். 

      ஆற்றின் அருகே வீடுகள் கட்ட இஷ்டப்படி நகராட்சிகள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.  வருடத்தில் பெரும்பாலான நாளில் ஆற்றில் தண்ணீர் வருவதில்லை.  வரவும் வராது என்ற ‘நீண்ட கால’ திட்ட அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மழைக்காலத்தில் முதலில் பாதிக்கப்படுவது அங்கு வசிக்கும் மக்கள்தான்.  பிறகு வழக்கம்போல் நிவாரணம் கொடுத்து அந்த வருட ஆட்டம் முடிந்து அடுத்து வரவிருக்கும் வருடத்திற்கான ஆட்டம் நீண்ட இடைவெளியில் உள்ளது என வேறு வேலைக்கு போய்விடுவார்கள்.

            ஒரு பிரச்சினைக்கு  தீர்வு என்னவென்று தெரியாமல் எழுதினால் நாமும் அந்த பிரச்சினையின் ஒரு அங்கமாகி விடுவோம் (சிவ் கெரா எளிமையாக சொன்னதை மிக கடினமாக மொழி பெயர்த்திருக்கிறேன்).  சொல்லப்படாத தீர்வுகள் எதுவுமே இல்லை என்பது தான் உண்மை.  இயற்கை பேரிடரை தடுப்பதற்கு திட்டங்கள் இருக்கின்றன.  அது தொடர்பான கையேடுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எப்போதுமே இருக்கும்.  செயல்முறை படுத்துவதில் ஏற்படும் நடைமுறை இடைஞ்சல்களை மட்டும் நீக்கினால் போதும்.

      தற்போது ஐந்து நாட்களாக பெய்து வரும் மழைக்கு தமிழகமே மிதக்கிறது என செய்தி வந்தவண்ணம் உள்ளன.  உண்மை நிலவரமும் அதுதான்.  ஒருவேளை இந்த மழை தொடர்ந்து இன்னும் ஐந்து நாட்கள் பெய்தால் என்னவாகும்?  அது எப்போதுமே ஆட்சியாளர்களின் தவறில்லை, மழையின் தவறுதானே!

November 26, 2008 at 5:37 pm 6 comments

26-11-2008

     அமெரிக்க சந்தை Thanksgiving Day 27-ஆம் நாளில் கொண்டாடுகிறது.   அவர்களுக்கு முக்கிமான பண்டிகை அது.  நாமும் கொண்டாட வேண்டும்.  ஏனெனில் இரண்டு நாளுக்கு அவர்களின் சந்தையை மூடி விடுவார்கள். 

      தற்போது ஆசிய சந்தைகள் ஒரளவு ஏற்றத்தில் இருக்கின்றன. குறிப்பாக சீனச் சந்தை, இதை எழுதும்போது.  சீன சந்தை ஏற்றத்தில் இருப்பது நம் சந்தைக்கு ஒரு நல்ல செய்தி.

      நாளையுடன் ப்யூச்சர்ஸ் முடியும் நாள் என்பதால், இந்த இரு தினங்களுக்கு சந்தை பல்வேறு விதமான ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. 

     இன்றைய சந்தை எப்படி வேண்டுமானாலும் முடியலாம் என்றாலும், 50 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் முடிய வாய்ப்பு உண்டு என்று நான் நினைக்கிறேன். 

     ஐந்து நாட்களாக தொடர் மழை. இந்த மழையை தாங்க முடியாமல் தமிழகமே தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்றால் அடிப்படையாக ஏதோ நம்மிடம் தவறு இருக்கிறது என நினைக்கிறேன்.   இதைப் பற்றி விரிவாக எழுதலாம் என நினைக்கிறேன்.

Good Morning to You All!

Post Market:

     ‘கண்ணா, மாருதி காருக்கெல்லாம் நாம ஆசைப்படக்கூடாதுடா, நாம ஏழைங்க’ என்ற டயலாக் இப்போது அமெரிக்க பெற்றோர் நிறைய சொல்வதாக கேள்விப்படுகிறேன்.  அமெரிக்க பொருளாதாரமே அவர்களின் வரவுக்கு மேலான செலவை மையமாக வைத்து எழுப்பப்பட்டுள்ளது.  அது குறைகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கும்போது,  பொருளாதார நெருக்கடி முற்றுகிறது என்பதற்கான ஒரு ஆரம்பம் என எடுத்துக் கொள்ளலாம்.

       இன்றைய அமெரிக்க சந்தை இறக்கத்துடன் தான் முடியும் என தோன்றுகிறது.  ஐரோப்பிய சந்தைகளும் இன்று இறங்குமுகமாகவே முடிந்தன.  நம் சந்தை 90 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது.  நாளை இறங்குமுகமாக முடிய வாய்ப்பிருக்கிறது.  அமெரிக்க வீழ்ச்சியை ஆசிய சந்தைகளும் நாளை எதிரொலிக்கும் என நினைக்கிறேன்.

       2200, here we come!

November 26, 2008 at 6:35 am 4 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
November 2008
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930