Archive for November 22, 2008
வேதாள நகரம் 4. கடற்கொள்ளையர்
‘வேதாள நகரமா?
‘சின்ன வயசில கேட்ட கதை. அந்த மாதிரி எதுவுமே கிடையாது.’
‘நீங்க பள்ளிக்கு போய் படிச்சிருக்கீங்களா?’
‘நான் ஒரு தபா வாத்தியார் நாற்காலிக்கு கீழே டைனமட் வைச்சேங்கிற ஒரு அற்ப காரணத்தை காட்டி என்ன பள்ளிக்கூடத்தை விட்டு துரத்திட்டாங்க. அதல்லாம் உனக்கு எதுக்கு பெரிசு? மேட்டருக்கு வா’
‘நான் சொல்லப் போற விஷயம் ரொம்ப இரகசியமானது. இதைக் கேக்குறதால உங்க உயிருக்கே ஆபத்து வரலாம். நானும் ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டேங்கறதால, என் மனசுக்குள்ள பூட்டி வைத்திருக்கிற இரகசியத்தை யாருக்கிட்டயாவது பகிர்ந்துக் கொள்ள வேண்டுமென்னு தான் உங்களையெல்லாம் கூப்டேன்.
‘பெரியவரே, எதா இருந்தாலும் சட்டுன்னு சொல்லுங்க. ஏகப்பட்ட ஜோலி கிடக்குது எங்களுக்கு’
‘வீரர்களே, இது ஒரு பொக்கிஷம் சம்பந்தப்பட்டது.’
‘இந்தா, தண்ணி குடி, பெரிசு. பொறுமையா சொல்லு. நைட் முச்சுடம் வேணா இங்க நாங்க உக்காந்து இருக்கோம். மனுசாள் தானே முக்கியம்.’
‘என் மனசுல இருக்கறது சொல்றேன். குறுக்கே பேசாம கேட்டுகோங்க. குறுக்கே பேசுனா எனக்கு கோவையா வராது அதான். இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு கடல் வழி கண்டு பிடிச்சவரு வாஸ்கோடகாமான்னு வரலாறு பேசுது. உங்க முகத்துல படிச்ச களைன்னு எதுவும் தெரியல. இருந்தாலும் உங்க யாருக்காவது வரலாறு பற்றி ஆர்வம் இருந்து அது சரியில்ல இது சரியில்லன்னு நடுவில சொன்னா செவிட்டுலயே அறைவேன். அந்த பட்டு வழிய (Silk Route) அதுக்கு முன்னாடியே ஒரு ஸ்பெயின் நாட்டு பிரபு தனக்கு சொந்தமான கப்பலை அனுப்பி அந்த வழியை கண்டுபிடிச்சுட்டார். அதில் நல்ல இலாபம் வரும் என அவர் கருதியதால், இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. வரலாற்றிலும் இந்த நிகழ்ச்சி பதியப்பட வில்லை. டாய், இன்னுமோ கேள்வி கேக்கனும்னு நினைக்கிற, பேசுனா அறைவேன், மூடிக்கிட்டு முழுக்கதையும் கேளு. முதல் பயணத்தில் தென்னிந்தியாவை அடைந்த அவரது கப்பல், அங்கிருந்து மிக ஜாக்கிரதையாக ஒரு பெட்டியை ஏற்றிக் கொண்டு ஸ்பெயின் திரும்ப துவங்கியது. நம்ப தகுந்த சில வட்டாரங்களின்படி, தென்னிந்தியாவில் கப்பல் கிளம்புகின்ற இரவில் கப்பலின் கேப்டன் தன்னுடைய பாதுகாப்பில் ஒரு பெட்டியை பலத்த பாதுகாப்புடன் தன்னுடைய அறையில் வைத்ததாக சொல்லக் கேள்வி.
‘அதுல என்ன இருந்துச்சி, பெருசு’
‘என்ன இருந்துச்சின்னு தெரியல. ஆனா விலை மதிப்பு இல்லாத ஒன்று தான் இருந்திருக்க வேண்டும். உயிரைவிட முக்கியமாக அப்பொருள் காப்பாற்றப்பட வேண்டும் என கப்பல் கேப்டனின் ஆணை.
‘நீங்க சொல்றத வைச்சு பார்த்தா கப்பல் ஒழுங்கா ஊர் போய் சேருல போல இருக்கே.
‘ஆமா, சுத்து வழியில போனதுனாலே அள்ளக்கை கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு அந்தக் கப்பல் ஆளானது. அதிலிருந்து மீண்டாலும், நிறைய பேர் அதில டிக்கெட் வாங்கிட்டாங்க. இன்னொரு தாக்குதலை அந்த கப்பல் தாங்காதுன்னு அந்த கேப்டன் கடலில் கலக்கும் ஒரு நதியின் வழியே கப்பலை திருப்பிட்டான். அந்த நதி வழியே நுழைந்த கப்பல் திரும்பவும் கடலுக்கு போகவேயில்லை.
‘எந்த நதி, எந்த இடம்ன்னு ஏதாவது தகவல் உண்டா?
‘மிஸ்ஸிப்பி ஆற்றின் உப ஆறானா வைதேகி ஆற்றின் வழியே சென்றது. தற்போது அந்த ஆறு வற்றிபோய் அது இருந்த தடமே இல்லாம போயிடுச்சி. அந்த ஆற்றின் வழியே சென்ற கப்பல் அங்கு பாழடைந்து, மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு நகரத்தில் நின்றது என கேள்வி.
‘ஆரம்பத்தில வேதாள நகரம்ன்னு சொன்னீங்களே? அந்த நகரத்திற்கு வேதாள நகரம்ன்னு எப்படி பேரு வந்துச்சி?
‘அந்த ஸ்பானிய கப்பலின் பெயர் வேதாளம் (The Phantom)’ எனச் சொல்லி அந்த கிழவர் பெருமூச்சு விடுகிறார். இந்த கதாசிரியரும் ஒரு வழியாக வேதாளத்தை கதையில் கொண்டுவந்து சேர்த்துவிட்டதையொட்டி அவரும் பெருமூச்சு விடுகிறார். இது எங்கே போய் முடிய போகிறதோ, இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த துயரத்தை தாங்க வேண்டுமென்று வாசகர்களும் பெருமூச்சு விடுகின்றார்கள். மூன்று இலட்சிய வீரர்களும் இன்னும் இந்த கதாசிரியன் எப்படியெல்லாம் நாம்ப இமேஜ டேமேஜ் பண்ணப் போறான்னு தெரியலையேன்னு பெருமூச்சு விடுகின்றார்கள்.
‘இதெல்லாம் உனக்கு எப்டி தெரிஞ்சுது பெரிசு?
‘அந்த கப்பல் பாழடைந்த நகரத்திற்கு வரும்போதே கப்பலில் இருந்த பெரும்பாலன பேரு போய் சேந்துட்டாங்க. இவர் மட்டுந்தான் பாக்கி. இவரு கப்பல பத்திரமா யார் கண்ணுலயும் படமா ஒளிச்சு வைச்சு, பக்கத்து நகரத்திற்கு போய் சேர்ந்தார். அந்த நகரத்துல இருந்த லோக்கல் பொண்ணுக்கிட்ட கசமுசா பண்ணி, அங்கேயே செட்டில் ஆயிட்டாரு.
‘இதெல்லாம் உனக்கு எப்டி தெரியும் பெரிசு?
‘அவரு தான் எங்க அப்பா.
‘கப்பல் எங்க இருக்குதுன்னு உனக்கு தெரியுமா?
‘எங்க அப்பா செத்ததுக்கு அப்றம் அவரு அறையை குடஞ்சதுல எனக்கு இந்த விவரங்களெல்லாம் கிடச்சுடு
‘ஏன் பெரிசு, அவரு சாவச்சொல்ல ஏதாச்சும் முக்கியமான விஷயம் ஏதாச்சும் உன்கிட்ட சொன்னாரா?
‘ஆமா, சொன்னாரு, அப்ப அது எனக்கு சரியா புரியல.
‘என்ன சொன்னாரு, பெரிசு?
‘மவனே, நான் உன்னோட அப்பான்னு நீ ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருக்கே, நான் அவனில்லை அப்டின்னு சொன்னாருப்பா.’
‘பெரிசு, அந்த கப்பல் இன்னும் வேதாள நகரத்துலய இருக்கு?
‘ஆமாப்பா’
‘அங்கே எப்டி போறது?
‘எங்கிட்ட வரைபடம் இருக்கு. ஆனா, இதுல ஒரு பிரச்சினை இருக்கு. அந்த ஸ்பெயின் பிரபுவோட சந்ததியில வந்த பிரபுவும் இதை தேடிக்கிட்டு இருக்காரு. ’
‘அட, நாங்க பார்க்காத வில்லனா?
———————————————————————-
ஒரு பெரிய மாளிகை அது. ஒரு குதிரை வீரன் மிக பணிவாக அந்த அறைக்குள் நுழைகிறான். மெல்லிய இருள் அந்த அறையை சூழ்ந்து இருக்கிறது.
மிக மெல்லிய குரலில் ‘எஸ்கோபாரை கடைசியாக டூமில்குப்பத்தில பார்த்ததாக நம் ஆட்கள் சொல்லுகின்றார்கள், பிரபு’
அந்த அறையில் கணப்புக்கிடையில் உட்கார்ந்திருக்கும் உருவத்திடமிருந்து ஒரு வித சீற்றத்துடன் ’வேதாளம் என் தாத்தாவின் கப்பல். அதிலுள்ள பொருட்களும் அவரை சார்ந்தவை. அவனை கண்டுபிடித்து அந்த வரைபடத்தை அவனிடமிருந்து பறித்துக் கொண்டு வா’
‘சரி, மகா பிரபு’
அவ்வீரன் வெளியே வந்து தன் நண்பர்களிடம் ‘அலெக்ஸாண்டர் மகாப்பிரபு எஸ்கோபாரிடமிருந்து அந்த வரைபடத்தை எப்படியாவது பறித்துக் கொண்டு வரவேண்டுமென ஆணையிட்டுள்ளார், வாருங்கள் போகலாம்’
இருளை கிழித்துக் கொண்டு அந்த குதிரை வீரர்கள் கிளம்பினர்.
தொடரும்
Recent Comments