Archive for November 21, 2008
வேதாள நகரம் 3. மர்ம கிழவன்
மூன்று இலட்சிய குதிரை வீரர்களும் ஹோட்டல் ஜல்சா வாசலில் இறங்கினர். அங்குள்ள பாருக்கு சென்று அமர்ந்தனர். இந்த ஊரில் குளிக்கலாமா என்ற தீவிர சிந்தனையில் ஆழ்ந்தனர். அப்போது ஜானி பீரோ அந்தப் பக்கமாக கடந்து சென்றான்.
அவனை பார்த்ததுமே சதீஷ்க்கு ஒரு இனம் புரியாத பாசம் அந்த கயவன் மேல் ஏற்பட்டது. உடன் விஷ்வாவிடம், ‘விஷ்வா, நம் குழுவில் அவரையும் சேர்த்துக் கொள்ளலாமா? பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியா தெரியுது’ எனக் கூறினார்.
விஷ்வாவின் பெரியப்பாவின் சகலை ஒரு பெரிய சாகச குதிரை வீரர். எல்லா சாகசங்களையுமே தன்னந்தனியாக தான் செய்வார். அது முடிந்தபின் ‘நான் ஒரு தன்னந்தனிக்காட்டு ராஜா…..’ என்ற ரீதியில் ஒரு பாட்டு ஒன்னை எடுத்து விடுவார். இவருக்கும் அவரை மாதிரியே ஆக வேண்டுமென்று ஆசை. கூட இருக்கும் இவர்களை எவ்வாறு கழட்டிவிடுவது என தெரியவில்லையால் இவர் ஒரு குழுவாக சுற்ற நேர்ந்தது. சதீஷின் பேச்சை கேட்ட விஷ்வாவுக்கு பளிச்சென்று ஒரு எண்ணம் உதயமாயிற்று.
உடனே, விஷ்வா மிக கனிவுடன் ‘சதீஷ், எனக்கு உன்னோட எண்ணம் புரிகிறது. நாமெல்லாம் இலட்சிய குதிரை வீரர்கள். நம் குழுவில் அவர் சேரமுடியாது. ஆனால் நீ விரும்பினால் அவருடன் சேர்ந்து கொள்ளலாம். நான் தடுக்க போவதில்லை. என்ன சொல்றே’ என கேட்டார்.
உடன் சதீஷ் ‘என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள், விஷ்வா. நான் எப்படி உன்னை பிரிவது குதிரை தன் வாலை பிரியுமா, வாத்து மீனை பிரியுமா’ என பலவாறு உதாரணங்கள் சொல்லி அவர்களை சோதித்து, ‘நான் உன்னை எக்காலத்திலும் பிரியமாட்டேன், விஷ்வா’ எனக் கூறி கண்கலங்கினார்.
அதைக் கண்ட கலீலும் கண் கலங்கினார். தன் திட்டம் பலிக்கவில்லை என அறிந்த விஷ்வாவும் கண் கலங்கினார். மூன்று இலட்சிய குதிரை வீரர்களும் கண் கலங்கினார்கள். இதனை படித்துக் கொண்டிருக்கிற வாசகர்களும் இதை போய் நாம் படிக்கிறேமோ என கண்கலங்கினார்கள்.
அப்போது புதுசா வந்திருக்கிற இந்த பசங்களா நாம காட்டுற காட்டுல அவங்க ஊர விட்டே ஒடினும்னு நினைத்துக் கொண்டு அவர்களின் மேசைக்கு வந்த ஜானி பீரோவிடம், கலீல் ‘யோவ், மூன்று சிக்கன் பிரியாணி கொண்டாய்யா’ என கூறினார்.
‘நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது.’
‘மூன்று சிக்கன் பிரியாணி கொண்டுவறத்துக்கு உன் குல கோத்திரம்ல்லாம் நாங்க தெரிஞ்சுக்கணுமா, ஜல்தியா எடுத்துட்து வா’
‘உங்க யாருக்குமே என் கேரக்டர் பத்தி தெரியாது’
‘வாஸ்தவம்தான். யாருய்யா நீ? போய் வேலைய பாப்பியா’
உடன் சதீஷ் குறுக்கிட்டு, ‘கலீல், யாரையும் தவறாக பேசாதே. அய்யா, நீங்கள் அப்படியே சிக்கன் 65யும் மூன்று பிளேட் எடுத்துட்டு வர முடியுமா’ என அன்புடன் கேட்டார். கடுப்பாகி ஜானி பீரோ அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அப்போது கலீல், ‘இவன் போற வேகத்தை பார்த்தா சீக்கிரமே சிக்கன் பிரியாணி வந்துறும்னு நினைக்கிறேன்’ என தன் நம்பிக்கையை தெரிவித்தார்.
தன் அறைக்கு சென்ற ஜானி பீரோ ‘செழி’ என அலறினார்.
செழி என்று அழைக்கப்படும் செழி யங் ஜில்லர் என்ற கதாபாத்திரம் கதைக்குள் நுழையும்முன் அவரைப் பற்றி அறிந்துக் கொள்வோம். மிகப் பெரிய வில்லன் ஆக வேண்டும் என்ற இலட்சியத்துடன் அவர், ஜானி பீரோவிடம் அப்ரன்டிஸ் ஆக வேலை பார்த்தார். ஒரு அழகான பெண்ணுடன் ஒரு அறையில் தனியாக இருக்கும்போது, அந்தப் பெண் ஏதாவது விளையாடலாமா எனக் கேட்டால் கொஞ்சம் கூட தயங்காமல் செஸ் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அப்பாவி. அவர் ஒரு கவிஞர் என்பது அவருக்கே தெரியாத ஒரு விஷயம்.
அவரை அழைத்து ‘என்ன போய் சிக்கன் பிரியாணி எடுத்து வர சொல்றான்ங்க’ எனக் கூறி ஜானி பீரோ கொதித்தார். செழியும் ‘அதானே, இன்னிக்கு மட்டன் தான் போட்டுறுகாங்கன்னு நீங்க பட்டுன்னு சொல்ல வேண்டியதானே பாஸ்’ என மறுமொழி பகர்ந்தார்.
‘இவர்கள் மேல் ஒரு கண் இருக்கட்டும்’ என ஜானி பீரோ கூறியதற்கு, செழி தன் வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டு ‘சரி பாஸ்’ என கூறினார்.
‘எதுக்கும் ஜாக்கிரத்தையா இரு. இவனுங்க ஒரு ரேஞ்சா பேசுறான்ங்க. ரேஞ்சர்களாக கூட இருப்பான்ங்க’
‘சரிங்க பாஸ். நான் போய் சாப்புட உங்களுக்கு மட்டன் பிரியாணி கொண்டு வரவா?’
மடார்.
நமது இலட்சிய குதிரை வீரர்கள் பேசிக் கொண்டிருப்பதை ஒரு இருட்டு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதான உருவம் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு பின், அவர்களை தன்னுடன் அமர முடியுமா என கேட்டது. ஒசி பீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நமது கதாநாயகர்கள் அவருடன் அமர்ந்தனர்.
‘நான் ஒரு நாடோடி. என் வாழ்க்கையின் பெரும் பகுதியை பயணத்திலேயே செலவழித்து விட்டேன். இப்போது என் உடம்பில் தெம்பில்லை. இந்த ஊரில் தான் என் கடைசி காலம் கழியப்போகிறது என எனக்கு தோன்றுகிறது. என் மனதில் ரொம்ப நாளாக அழுத்திக் கொண்டிருக்கிற ஒரு இரகசியத்தை உங்களிடம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது. அதனால்தான் கூப்டேன்.’
‘பெரியவரே, வெயிட்டரை கூப்பிட்டு மூணு பீரு ஆர்டர் பண்ணட்டுமா?’
‘வேண்டாம்பா, நாம பேச போற விஷயங்கள யாருமே கேட்க கூடாது’
‘ஏன் பெரியவரே, எங்க கிட்ட சொல்லுனும்னு தோணுச்சு’
‘உங்களை பாத்தா பெரிய வீரர்கள் மாதிரி இருந்துச்சி’
உடனே சதீஷ், ‘பெரியவரே, இரவில் உங்களுக்கு கண் சரியாக தெரியாதா’ என ஆதுரத்துடன் கேட்டு அவரின் இரு கால்களிலும் பலத்த மிதிகள் வாங்கினார்.
ஓசி பீர் பார்ட்டி இது கிடையாது என தெரிந்தவுடன் கலீல் மிகுந்த சோகமானார். விஷ்வா அவர்களை தடுத்து பெருசு என்னதான் சொல்லுதுன்னு கேப்போம் என அவர்களை சமாதானப்படுத்தினார்.
‘வேதாள நகரம் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?’
தொடரும்……………………….
21-11-2008
அமெரிக்க சந்தை ஆரம்ப சரிவிலிருந்து மீளும் என நம்பினேன். அது போல் மீண்டு 440 புள்ளிகளில் சரிந்திருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமை. சூப்பர் காம்பினேஷன்.
நீண்டகால முதலீட்டாளர்கள் இன்று தங்கள் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த துவங்கலாம். இந்த வாரக் கடைசியில் ஏதாவது அரசுகள் செய்யும் என நான் மட்டுமல்ல இந்த உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.
உலக சந்தைகளின் தலைமைப் பொறுப்பினை தற்போது வரை வகித்துக் கொண்டிருப்பது அமெரிக்க சந்தையே. இது போன்ற சரிவுகளை தடுக்க முடியாத பட்சத்தில் அந்த தலைமை பதவி ஆசிய சந்தைகளுக்கு போய்விடும் என்ற பயம் அவர்களுக்கு உள்ளூர உண்டு. அந்த ஆசிய சிங்கங்களில் நமக்கு தற்போது இரண்டாமிடம் என்றாலும், முதலிடத்திற்கு வர நிறைய நாள் தேவைப்படாது.
சரி, இன்றைய கதைக்கு வருவோம். மிகுந்த சோகத்துடன் கூடிய ஒபனிங் சீனில் ஆரம்பிக்க வாய்ப்பு உண்டு. க்ளைமாக்ஸும் அப்படியேதான் இருக்கும். முழுக்க முழுக்க ஒரே அழுக்காச்சியா இருக்கும். 10 சதவீதத்தை கரடிகள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த மாதிரி துவங்கி நிறைய நாட்கள் ஆன நிலையில் இன்று முயற்சி செய்வார்கள்.
இதனை தடுக்க ம்யூட்சுவல் நிதி நிறுவனங்கள் முயலலாம். முயலுமா? காலையில் ஒரு நண்பருக்கு போன் செய்து இந்தியன் ப்யூச்சர் எல்லாம் எப்படி இருக்கு என்று கேட்டதற்கு, அவர் வெறுப்புடன் ப்யூச்சரே இல்லை, சார் என பதில் சொல்கிறார்.
இந்த வாரத்தை பற்றி சுருக்கமாக இந்த மாலை எழுதுகிறேன்.
Today’s the Great Hunting Day for the Investors! Never Miss It!
By the way, Good Morning! hmmmmmmmm
Post Market:
அழுகாச்சியா தொடங்கும் என எதிர்பார்த்த எல்லோரையும், ஆனந்த அழுகாச்சிக்கு உள்ளாக்கி விட்டது சந்தை. காலை 8.30 மணிக்கு இறங்குமுகமாக இருந்த ஆசிய சந்தைகள் அனைத்தும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மிக வேகமாக உயர்ந்து விட்டன. ஆனால் சீன சந்தை மட்டும் ஒரளவு எச்சரிக்கையுடன் இந்த போக்கிற்கு உட்படாமல் இருந்ததை குறிப்பிட வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் அபூர்வமானவை. ஒவ்வொரு முறையும் இது போன்ற நிகழ்வுகளை சந்தைகள் கொடுக்கும் போது அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான், ஆனா இன்னும் நிறைய இருக்குடா தம்பி என சந்தை எனக்கு கற்றுக் கொடுப்பதாகவே நினைத்துக் கொள்வேன். இன்றைய தினம் தவறான கணிப்பினை வெளியிட்டுள்ளேன். அதற்கு நான் சொன்ன காரணங்களை சந்தை நிராகரித்து விட்டது. வேறு என்னென்ன காரணங்கள் என பார்ப்போம்.
இறங்குமுகமாக தொடங்கிய நம் சந்தை ஆசிய சந்தைகள் மீண்ட வேகத்தினை பார்த்து வெகு வேகமான சரிவிலிருந்து மீள தொடங்கியது. கடந்த ஏழு நாட்களாகவே தொடர்ந்து சரிவினையே சந்தித்து வந்ததால், இன்றைய அமெரிக்க சந்தை மீண்டும் மேலேழும் என்ற நம்பிக்கை, இவைகள் நடந்தால் திங்கட்கிழமை சந்தைகள் மீண்டும் 2800 என்ற நிலைக்கு மேல் முடிய வாய்ப்பு இருக்கின்றது என்ற டெக்னிகல் விவரங்கள் போன்றவையால் சந்தையில் வெகு வேகமாக ஷார்ட் கவரிங் ஆரம்பித்தது. பின்னர், அவை முடிந்த பிறகு மீண்டும் ஒரு சரிவு, பின்னர் ஐரோப்பிய சந்தைகள் உற்சாகமான ஆரம்பத்தால் மீண்டும் மேலேறுதல் என பலவிதமான ஆட்டங்களை ஆடியது சந்தை. இது ஒரு அபூர்வமான நிகழ்வு. 100 புள்ளிகள் மேலேறி கீழிறிங்குதல் சற்று பெரிய இடைவெளியில் ஆடுவது அபூர்வம் என்றே நினைக்கிறேன்.
இந்த வாய்ப்பினை கையில் உள்ள பங்குகளை விற்க உபயோகப்படுத்திக் கொண்டேன். நான் ரிலையன்ஸ் கம்யுனிகேஷ்ன்ஸ் பங்கினை 196 விலையில் வாங்க சொல்லியிருந்தேன். அதனை திங்களன்று விற்று லாபத்தை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், சந்தை மேலும் இறங்க வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன். அமெரிக்க சந்தை புதிய பள்ளத்தை நேற்று தொட்டிருக்கிறது. அதனால் இன்று ஒரு சிறிய ஏற்றம் இருக்கவும் வாய்ப்பு உண்டு. உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில் உற்சாகமாக தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறங்குமுகமாகவே முடிந்துள்ளது என்பதை நினைவில் வையுங்கள்.
அடுத்த வாரம் சந்தையின் மிக முக்கியமான நிலைகளை நிர்ணயிக்கும் வாரம். இந்த வார சந்தையை பற்றி நாளைக்கு எழுதுகிறேனே!
Recent Comments