Archive for November 16, 2008
வேதாள நகரம் 2. மூன்று குதிரை வீரர்கள்
அதோ, மூன்று இலட்சிய குதிரை வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். யார் அந்த வீரர்கள்? அநியாயம் எங்கு நடந்தாலும் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காமல் அந்த இடத்தை காலி செய்யும் சூரர்கள் அவர்கள். அவர்களே இந்த காப்பிய நாயகர்கள். இவர்களின் சாகசங்களை காப்பிரைட் முறையில் நான் மட்டுமே எழுத உரிமை உண்டு என்றும், மற்றவர்கள் இது போன்று முயற்சி செய்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் எனவும் இக்கட்டத்தில் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவர்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கலாமா? யோசிக்காதீங்க, நானே பதிலை சொல்லிடறேன். அவசியம் தெரிந்து கொண்டேயாக வேண்டும்.
அதோ, பச்சை சட்டையும், நீல கால்சட்டையும் அணிந்து கம்பீரமாக வந்துக் கொண்டிருக்கிறாரே, அவர் பெயர் விஷ்வா. முழுப் பெயர் விஷ்வா நாதனியேல் ஜும்போசோ. சுருக்கமாக விஷ்வா. அவரை பச்சை மின்னல் என அவரது நண்பர்கள் அழைப்பார்கள். எதிரிகள்? வேண்டாம், சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்காது. மின்னல் வேகத்தில் துப்பாக்கியை எடுப்பதால் அவருக்கு இந்த பெயர். அவரின் தோட்டாக்கள் இலக்குகளை தாக்குமா என்பது கேள்விக்குறிதான்.
ஒருமுறை, மெக்ஸிகோவில் உள்ள டமுக்குவீரன்பட்டியில் ஒரு ஒத்தைக்கு ஒத்தை சவாலில் இவர் மின்னல் வேகத்தில் துப்பாக்கியை எடுத்து எதிராளியை நோக்கி இரண்டு தோட்டாக்களை அனுப்பி வைத்தார். பத்தடி துாரத்தில் இருந்த எதிராளியை அத்தோட்டாக்கள் தாக்காமல் அவருக்கு வடமேற்கில் ஒரு மேசையில் சமத்தாக ஆட்டுக்கால் பாயா குடித்துக் கொண்டிருந்த ஒரு கிழவரின் கைகளை தவறாமல் தாக்கின.
தன் தோட்டாக்களின் இலக்குகளை பார்த்து மிரண்டு போனாலும், நம் வீரர் அதனை மறைத்துக் கொண்டு, தன் எதிராளியை நோக்கி ‘பாயாவிற்கு நேர்ந்த கதி உனக்கும் நேர வேண்டுமா?’ என கேட்டதற்கு எதிராளி தன் தோல்வியை ஒத்துக் கொண்டு ஓடி ஒளிந்தான். அடிப்பட்ட கிழவருக்கு கொலைவெறிக் கொண்ட இரு மகன்கள் உண்டு என்பதை கேள்விப்பட்ட நம் கதாநாயகன் தன்னுடைய வெற்றிவிழாவை அங்கு கொண்டாடமால் உடனே அந்த ஊரை விட்டு வெளியேறினார். இவர் ஒரு பார்ட்டைம் கவிஞரும் கூட என்பது அவரது எதிரிகளுக்கும் தெரியாத ஒரு விஷயமாகும்.
இவரை தொடர்ந்து வரும் இன்னொரு வீரரின் பெயர் சதீஷ். இவரின் முழுப்பெயர் சதீஷ் ப்ளோரன்ஸ்கோ டக்கர். சுருக்கமாக சதீஷ். இவர் விஷ்வாவை போல் மின்னல் வேகத்தில் துப்பாக்கியை எடுப்பவரல்ல என்றாலும், மிகத் தீர்க்கமான முடிவுகள் எடுக்கக் கூடியவர். ஒரு துப்பாக்கி சண்டையில் தான் கலந்து கொள்ளவேண்டுமா என்று பலவிதமான கோணங்களில் ஆராய்ந்து கலந்துகொள்ள முடிவு செய்கையில் அந்த சண்டையே முடிந்து போய் இருக்கும்.
இவர் தனது இளமைகாலங்களில் ஒரு மலையோர கிராமத்தில் மருத்துவ சேவை செய்து வந்தவர். இவரின் திறமையை உணர்ந்த மக்கள் ஆயுதங்களுடன் இவரை தேடி வர, தன்னலமற்ற தன் சேவையை அவர்கள் புரிந்து கொள்ள வில்லையே என வருந்தினாலும், கடும்வேகத்தில் குதிரையில் ஏறி அந்த கிராமத்தை விட்டு தன் மருத்துவப் பெட்டியுடன் வெளியேறி உயிர் தப்பினார்.
ஒருமுறை தன் நண்பரான விஷ்வாவிற்கு லேசான தலைவலி வர, அதற்கு இவர் கொடுத்த மருந்தினால் அவரின் தலைவலி உடன் குணமாகி அவருக்கு விஷக் காய்ச்சல் வந்து ஒரு மாதமாக உயிருக்கு போராடி பின்னர் அவர் பிழைத்தார். அதற்கு பிறகு அவர் செய்த முதல் வேலை, எக்காரணம் கொண்டும் அந்த மருத்துவப் பெட்டியை அவர் திறக்கக் கூடாது என சொல்லி அந்த பெட்டியை பூட்டி சாவியை தன் வசம் வைத்துக் கொண்டார். சதீஷ் அவரின் தலைவலி குணமடைந்ததை சுட்டிக் காட்டியும் விஷ்வாவின் கல்மனம் மாறவில்லை.
மூன்றாவது குதிரை வீரரின் பெயர் கலீல். இவரின் முழுப் பெயர் கலீலியோ கும்மாங்கோ போட்ஸ்வானா. கட்டழகுடைய காளை இவர். சிக்ஸ் பேக் கொண்ட பாடி என சொல்ல இயலாது. போர் பேக் கொண்ட பாடி இவருடையது. ஒரு நகரத்திற்கு இவர் செல்கையில், அங்கு வசிக்கும் ஒரு சீமாட்டியின் காதல் வலையில் சிக்கினார். அந்த சீமாட்டின் கணவன் அந்த காதல் வலையை எரித்து, இவரையும் எரிக்க எண்ணி துரத்திய போது, மைனர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என பெருந்தன்மையாக அந்த நகரத்தைவிட்டு விலகினார்.
இவரின் எதிரிகள் இவரை சாட்டையடி வீரர் என்றே சொல்வார்கள். இவர் சாட்டையை எடுத்து சண்டையை துவங்கினால், எதிரிகளை விட இவருக்கும், இவரின் நண்பர்களுக்குமே காயம் அதிகமாக இருக்கும். இந்த காரணங்களால் இவரது சாட்டை ஆழமான கிணற்றில் தண்ணீர் சேந்துவது, குதிரையை கட்டிப் போடுவது போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
இந்த மூன்று இலட்சிய வீரர்களும் சந்தித்த விவரங்கள் ‘குள்ளநரிகளுக்கு கும்மாங்குத்து’ என்ற காப்பியத்தில் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒரு மாலை நேரத்தில் டூமில்குப்பத்தின் எல்லைக்குள் வந்த இந்த வீரர்கள் எல்லை வாசலில் இருந்த போர்டை பார்த்து புன்முறுவல் செய்தனர். அதைப் பார்த்த விஷ்வா ‘நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க, எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு’ என சொல்லி அவர்களை அனுப்பி விட்டு, அந்த போர்ட்ல இவரின் கவிதை ஒன்றை செதுக்கினார்.
நிலா
சப்பாத்தி
துப்பாக்கி
என எழுதிவிட்டு, இத படிச்சுட்டு இந்த ஊருக்காரங்க எல்லாம் சுவற்றில தலையை முட்டிக்கிட்டும்னு விஷமமாக சிரித்துக் கொண்டே அந்த குப்பத்தில் நுழைந்தார்.
குப்பத்தில் நுழைந்த இவர்களை ஷெரீப் எதிர்கொண்டார்.
‘யாருப்பா அது? ஆறு பேரு கூட்டமாக வரீங்க. பேரு என்னடாப்பா?’
‘ஷெரீப், நாங்களெல்லாம் அநியாயம் எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் வீர்ர்கள்’
‘உனக்கு இவ்ளோ பெரிய பேராப்பா? உன் பேரு என்னடாப்பா? கொஞ்சம் சத்தமா சொல்லு’
‘விஷ்வா, இந்த மாதிரி ஷெரீப் இருந்தா ஊரு முழுக்க காலிப் பசங்களா இருப்பான்களே. இது வேலைக்காவது நாம்ப அப்டியே யு டர்ன் போட்டு திரும்பிடலாம்பா’
‘சதீஷ், நாம களைச்சு போயிருக்கோம். குதிரைகளும் களைச்சு இருக்கு. இன்னிக்கு நைட்டு தங்கிட்டு காலையில யாருக்கும் தெரியாம ஒடிடலாம், என்ன சொல்ற கலீல்’
‘எந்த பிரச்சினை வந்தாலும் என் சாட்டை சமாளிக்கும், என்ன சொல்றீங்க’ என கலீல் சொல்லி இருவராலும் முறைக்கப்பட்டார்.
‘ஏம்பா, ஷெரீப் மேல ஒரு கெட்ட வாசனை வரல. இந்தாளு எப்ப குளிச்சானோ தெரியலயே’
‘சதீஷ், பெரியவங்கள அப்டியெல்லாம் பேசக்கூடாது. நாம்பளே போன தீபாவளிக்குதானே குளிச்சோம்.’
‘சரிப்பா, இந்தாளு எந்த தீபாவளிக்கு குளிச்சானோ, ஷெரீப், இங்க தங்க ஹோட்டல் இருக்கா?’
‘அந்த தெருவுல ஹோட்டல் ஜல்சான்னு ஒன்னு இருக்கு அங்க போய் தங்குங்க’
‘பேரா கிளுகிளுப்பா இருக்குப்பா. ஷெரீப், நீங்களும் இன்னிக்கு குளிக்கப் பாருங்க’
‘அட எங்கப்பா, இன்னிக்கு காலயிலிருந்து வயிறு போய்க்கிட்டு இருக்கு. இன்னும் டாய்லட் போகல்ல. இப்பதான் டாய்லட் போகலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க’
உவ்வே
உவ்வே
உவ்வே
இவர்கள் வாந்தியெடுப்பதை இரு விழிகள் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தன.
தொடரும் ……………………………
Recent Comments