Archive for November 15, 2008
வன்முறை நமக்கு பழகிய ஒன்றுதானே!
‘என்ன வேணும்?
‘இட்லி ஒரு பிளேட் சூடா இருக்குமா?
(ஆறிப்போன இட்லி வருகிறது) ‘ஏம்பா, இட்லி சூடாவே இல்லையே?
‘வேற என்ன சாப்டுறீங்க?
‘சாதா தோசை ஒன்னு சொல்லு’
இந்த மாதிரி உரையாடல்கள் எல்லா நகரத்தின் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள உணவகங்களில் கேட்டிருப்போம். நாமே சொல்லியிருப்போம். இதுவும் நம் மேல் திணிக்கப்படும் ஒருவித வன்முறைதான். எதுக்கு பிரச்சினைன்னு இந்த அடிப்படை வன்முறையிலிருந்து விலகி போய்விடுவோம்.
அதுபோல், தனியார் பேருந்து நடத்துநர் ‘மசமசன்னு நிக்காம சட்டுன்னு இறங்கு’ என எரிச்சலில் கத்துவதையும் சகித்துக் கொள்கிறோம். தேவையில்லாத பிரச்சினையை வளர்த்திக் கிட்டு நிக்கணும் என்று நம்முடைய சகிப்புத் தன்மைக்கு சப்பைக்கட்டும் கட்டி விடுகிறோம்.
சட்டக் கல்லுாரியில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்கும் அதேபோல் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நம்முடைய உணர்வுகளை தெரிவித்தோம். காவல்துறைக்கும் நிறைய அர்ச்சனைகள். நான் காவல் துறைக்கு பரிந்துக் கொண்டு வரவில்லை. ஆனால் அவர்களது நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு நடுநிலைமையோடு நம் கருத்துக்களை தெரிவித்திருக்க வேண்டுமல்லவா?
நான் அந்த இடத்தில் காவல்துறை உடையில் இருந்தால், நானும் அந்த சம்பவத்தினை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருப்பேன் என நினைக்கிறேன்.
காரணம், சட்டக் கல்லுாரியின் வளாகத்தில் மாணவர்களுக்கிடையே நடக்கின்ற வன்முறை சம்பவத்தினை எப்படி தடுக்க முடியும்? காதலர் தேசம் படத்தில் கே டி குஞ்சுமோன் வந்து தடுப்பாரே அப்படியா? எல்லாரும் கை கொடுத்து சமாதானமாக போயிடுங்கன்னா? நடக்கின்ற வன்முறையை தடுக்க நீங்களும் வன்முறைதானே பிரயோகிக்க வேண்டும்? அப்போது தொலைக்காட்சி கேமராக்களில் மாணவர் மீது போலீஸார் அராஜகம் என்ற வகையில் செய்திகள் வெளியாகும். அந்த கிளிப்பிங்களை பார்க்கும் நமக்கும் அவ்வாறே தோன்றும். சம்பவ இடத்திற்கு வந்துட்டோம் எப்படியும் தற்காலிக பணிநீக்கம் கிடைக்கும், பின்ன எதுக்கு தடுத்துக்கிட்டு என்ற மனநிலைக்கு வருவதை தவிர வேறு ஏதாவது மாற்றுநிலை இருக்கிறதா? அது மட்டும் இல்லாமல், மேலதிகாரிக்கிட்ட அர்ச்சனைகள் வேறு போனஸாக கிடைக்கும். காவல் துறையை பொறுத்த மட்டில் கீழ்படிதல் மிகவும் முக்கியம். தமிழ் படத்தில் நாம் பார்க்கின்ற மாதிரி கதாநாயகன் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது போல எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் நடக்காது. உளவு துறை எச்சரித்தும் ஏன் தடுக்கவில்லை என்ற கேள்விகளுக்கு இனிமேல்தான் விடைகள் கிடைக்கும். அதற்குள் மாணவர், காவல்துறை என்ற இரு பக்கங்கள் மீதும் பல்வேறு விதமான நிலைகள் எடுக்கப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது.
தமிழ் கதாநாயகன் போல சீறி ஒன்மேன் ஆர்மி போன்ற உட்டலாக்கடி வேலைகள் எல்லாம் கதைக்காவாது. குறைந்தது ஒரு மாதத்திற்கேனும் இந்த வன்முறை சம்பவங்கள் பற்றி ஊடகங்களில் வெளிவரும். அடுத்தது புதிய சம்பவம். அவ்வளவுதான். நான் படித்தவரை எல்லோரும் நடந்த சம்பவங்களுக்கு கூடுதலாகவே உணர்ச்சிப்பட்ட மாதிரி தோன்றியது. மிகக் கடுமையான வார்த்தைகளை பாதிக்கப்பட்டோர் மீதுள்ள அக்கறையினால் எழுதியிருந்தார்கள்.
அவ்வாறு நாம் உணர்ச்சிகளின் வசத்தில் இருக்கும்போது, வலது, இடது போன்ற நிலைகளை எடுத்து விடுவோம். அவ்வாறான நிலை எடுக்கும்போது, இந்த பக்கத்தில் இருப்பவர்கள், அந்த பக்கத்தில் இருப்பவர்களை கடுமையான கருத்துகளால் எதிர்ப்பினை தெரிவிப்பார்கள். நடுநிலையோடு எழுதும்போது என்ன பிரச்சினை என்றால், இரு பக்கங்களிலிருந்தும் தாக்குதல்கள் வரும். உன்னுடைய மகனுக்கு இந்த நிலைமை வந்தால் நீ சும்மா இருப்பாயா என்ற கேள்விகளை எப்படி சமாளிப்பது? நமக்கு எப்போதுமே சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை என இரு வகையான வாழ்க்கைகளை வாழ்ந்து வருகிறோம். இவை இரண்டையும் எவ்வாறு வாழ்கின்றோம் என்பது பற்றி நிறைய எழுதலாம்.
ஆனால், இதுபோன்ற சம்பவங்களை தொலைக்காட்சியில் காட்டுவதால் பின் விளைவுகள் எப்படியிருக்கும் தெரியுமா?
‘மச்சான், ……………..காலேஜ்ல நடந்ததை பாத்தியா? சும்மா கில்லி மாதிரி அடிச்சான்க இல்ல’
‘அடப்போடா, நீ …………………..காலேஜே பாக்கலியே. எல்லோருமே இரும்புக் கம்பிதான். மரக்கட்டையே இல்லன்ன பாத்துக்கோயேன்.
‘………….. காலேஜ்ல நடந்ததான் பாக்க முடியல. நாலு பேர் போய் சேந்துட்டாங்க இல்ல. பெரிய பிரச்சினைன்னு டிவி காரனுங்க கூட பயந்துகிட்டு போய் படம் எடுக்கல. போய் எடுத்துருக்கணும். நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டாங்கப்பா.
இது போன்ற மோசமான வன்முறைகளுக்கும் பழகி விடுவோம்.
Recent Comments