Archive for November 14, 2008

வேதாள நகரம் – 1. துவக்கம்

      Imitation is the best form of flattery  என சொல்வார்கள்.  ஒரு கெட்ட காரியம் செய்வதற்குமுன் இந்த பழமொழியை சொல்லியே செய்வார்கள்.  நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா?  உண்மையில் ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே இதை செய்கிறேன்.  உங்கள் கருத்துகள் எனக்கு மிகவும் முக்கியம். 

     இது ஒரு நடந்த கதையாக கூட இருக்கலாம்.  நடக்காத கதையாகவும் இருக்கலாம்.   ஆனால் இது ஒரு கதை. வெட்டிக் கதை எதுக்கு, கதைய சொல்லு என்கிறீர்களா?

     கௌபாய் சித்திரக் கதைகள் பல படித்திருப்பீர்கள்.  அவைகள் தற்போது வழக்கொழிந்து போனதால், அவற்றை மீண்டும் நினைவூட்ட இந்த வேதாள நகரம் உதவும். இந்த காவியத்தில் குறிப்பிடப்படும் பெயர்கள் கற்பனை பெயர்களே.  தற்செயலாகவோ, வேண்டுமென்றோ யாரையும் குறிப்பிடுபவை ஆகாது.

      அட்டகாசமாக இருக்கிறது என வேதாள நகரம் என தலைப்பு வைத்துவிட்டேன்.  இப்போது எவ்வாறு வேதாளத்தை இதில் இழுப்பது என தீவிர சிந்தனையில் இருக்கிறேன்.  எது எப்படியோ கதைய ஆரம்பிக்கிறேன். எல்லோரும் என் பின்னால் வாங்க.

———————————————————————————–

        கதைக்கு செல்லும் முன் கதை நடக்கும் காலக்கட்டத்தை தெரிந்து கொள்வது அவசியம்.

       1700 கால அமெரிக்கா.  பல்வேறு இனத்தைச் சார்ந்த செவ்விந்தியர்களும், தங்க வேட்டையர்களும், பத்து டாலருக்கு எமனையே சுட்டுக் கொல்லும் கயவர்களும், தங்கத்தை தேடி அங்கங்களை இழந்த பயணிகளும் நிறைந்த காலகட்டம் அது.  செவ்விந்தியர்களும், வெள்ளையர்களும் ஒருவர் கழுத்தை மற்றவர் கொலை வெறியோடு கவ்வ காத்துக் கொண்டிருந்த காலம் அது.  பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் இல்லையென்பதால் அதை பொற்காலம் என்று சொல்லிவிட முடியாதபடி சில அரசியல்வாதிகளும் நடமாடிய காலகட்டம். ஒரு மாதிரி குன்சா உங்களுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.  சரி, வாங்க, அடுத்த பாராவுக்கு போவோம்.

      வட அமெரிக்காவின் தென் பகுதியில் மெக்ஸிகோ எல்லைக்கு  தென் கிழக்கில் உள்ளது டூமில்குப்பம்.  ஆரம்பத்தில் தங்க வேட்டையர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நகரமானது, பின்னர் களவாணிகள், மொள்ளமாறிகள், முடிச்சவிக்கிகள் போன்றோரால் நாறடிக்கப்பட்டது.   அந்த ஊரின் வாசலில் அந்த ஊரைப்பற்றி ஒரு ஹைகூ எழுதப்பட்டிருந்தது. 

                                                          எதிர்த்து

                                                          பேசினா

                                                          டூமில்.

 

      இப்படிப்பட்ட குப்பத்தில் நல்ல மக்களும் இல்லாமல் இல்லை.  20:40 என்ற விகிதத்தில் பொறுக்கிகள் நல்ல மக்கள் விகிதச்சாரம் இருந்து வந்தது.  ஷெரீப் மற்றும் அவர் டெபுடி ஆகிய இருவரால் அந்த நகரத்தின் சட்ட ஒழுங்கை சரியாக பராமரிக்க இயலவில்லை. 

       கயவர்கள் வைத்ததே அங்கு சட்டமாக இருந்தது.  புதியதாக யாரும் அங்கே ஷெரீப் பதவியை ஏற்றுக் கொள்ள பயந்து இருந்ததால், பழைய ஷெரீப்பே தொடர்ந்து பதவி வகித்து வந்தார்.  அவருக்கு வயது 79.  காது சரியாக கேட்காது.  வெகு வேகமான செயல்கள் எதையும் அவரால் செய்ய முடியாது.  குற்றம் நடந்த இடத்திற்கு அவரால் ஒரு மணி நேரம் கழித்தே வர இயலும்.  மாலை வேளைகளில் சரியாக கண்ணும் தெரியாது.  இந்த காரணங்களால் அவரை உயிரோடு அந்த நகரத்து ரவுடிகள் விட்டு வைத்திருந்தார்கள்.

      டெபுடி, ஷெரீப் அளவுக்கு வயதானவர் கிடையாது. அவருக்கு வயதோ 36. ஆனால் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.  பௌர்ணமி, அமாவசை அன்று ஏதேனும் பிரச்சினைகள் நடந்தால் மக்கள் அவரிடம் வந்து சொல்ல பயந்தனர்.  அன்றைய தினங்களில் அன்னார் ஒரு மாதிரியாக இருப்பார்.

     அந்த ஊரே ஜானி பீரோ என்ற கயவனின் கட்டுப்பாட்டில் இருந்தது.  அவனின் முழு பெயர் ஜானி ‘ஸ்டீல்’ பீரோ.  தன் அள்ளக்கைகளை கொண்டு அவன் அந்த குப்பத்து ராஜாவாக இருந்தான். அந்த ஊர் மக்களெல்லாம் அவன் மீது தீராத பயத்தில் இருந்தார்கள்.  அந்த ஊரில் எந்த அநியாயம் நடந்தாலும் அது அவன் சம்பந்தப்பட்டதாகதான் இருக்கும். 

      ஷெரீப் அன்றைய தினம் மெல்ல தன் அலுவலகத்தை விட்டு வெளியே மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தார்.  டூமில் என்ற சத்தம் பக்கத்து தெருவில் உள்ள ஹோட்டல் ஜல்சாவிலிருந்து கேட்டது. 

      இரத்த வெள்ளத்தில் ஒரு வாலிபன் நடுத்தெருவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். ஷெரீப் மெல்ல அவனை நெருங்கி,

‘ஏண்டாம்பி, ஏன் நடுத்தெருவிலே இப்படி படுத்துக்கிட்டு இருக்கே?  வீட்டுக்கு போவலையா?’

’ஷெரீப்,  என்ன ஜானி பீரோ சுட்டுட்டான். நான் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கேன்.’

‘அப்டியா, உடம்பெல்லாம் ஒரே தக்காளி சாஸா இருக்கு? முதல்ல அத துடச்சுட்டு வீட்டுக்கு போப்பா.’

‘யோவ், செவிட்டு முண்டம், ஜானி பீரோ என்ன சுட்டுட்டுடான்யா.’

‘ஆமா, மிஸஸ் மனோகரோட தவிட்டு அண்டாவை காணோம்னுதான் விசாரிக்க போய்கிட்டு இருக்கேன். வரட்டுமா?’

 ஷெரீப் ‘குடிகாரபய’ என முனகிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

 ‘ஐயோ, இவனோட அநியாயத்த தட்டிக் கேட்க இங்க யாருமே இல்லையா?’ என கதறிக் கொண்டே தன் கடைசி மூச்சினை அந்த இளைஞன் விடுகின்றான்.

       அந்த ஊரிலிருந்து ஒரு நாள் பயண தொலைவில் மூன்று குதிரை வீரர்கள் அந்த குப்பத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்கள்.  அந்த செயல் வீரர்களின் பெயர்கள் முறையே கலீல், விஸ்வா, சதீஷ்.  அநியாயத்தை ஒழித்து நியாயத்தை நிலைநாட்டும் சாகச காரர்கள் அவர்கள் என தனியாக சொல்ல வேண்டுமா?  கண்ணில் வெறி, மனதில் உறுதி, வயிற்றில் பசியோடு அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். 

                                                                                                   தொடரும்……………………..

November 14, 2008 at 4:28 pm 18 comments

14-11-2008

       அமெரிக்க சந்தை ஒரு பள்ளத்தில் இறங்கி மீண்டும் மீண்டிருக்கிறது.  அதன் தாக்கம் தற்போதைய ஆசிய சந்தைகளில் தெரிகிறது.  நேற்று நமது சந்தை விடுமுறை என்பதால், அந்த தாக்கம் இன்றும் நம் சந்தையில் எதிரொலிக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.

       நமது சந்தை இன்று கடுமையான Selling Pressure சந்திக்கக்கூடும்.  குறைந்த பட்சம் 100 புள்ளிகள் இறங்க வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன்.  இன்று வாரத்தின் கடைசி நாள் என்பதாலும், இன்றைய அமெரிக்க சந்தை மீண்டும் ஏற்றத்தில் முடியு வாய்ப்பு குறைவு என்பதாலும் இன்றைய நமது சந்தை ஊசலாட்டம் ஆட வாய்ப்பு உண்டு.

     துவக்கத்தில் ஏற்றத்தில் துவங்கினாலும், நாளடைவில் அதன் நிலைகளிலிருந்து நழுவி மீண்டும் இறங்க வாய்ப்பு இருக்கிறது.  நமது சந்தையின் தற்போதைய வலுவான சப்போர்ட் 2200 என்ற நிலைகளில் இருக்கிறது.  அந்த நிலைகளில் தான் முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு முனைப்பு காட்டுகின்றனர்.

    Be Careful and Watch!

November 14, 2008 at 5:33 am 4 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
November 2008
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930