Archive for November 9, 2008
The 13th Warrior – திரை விமர்சனம்
இந்த திரைப்படம் 1999-ஆம் வருடம் வெளிவந்தது. இவ்வளவு வருடங்கள் கழித்து ஏன் திரை விமர்சனம் என்றால், அத்திரைப்படம் என் மனம் கவர்ந்த நாவலாசிரியர் சமீபத்தில் மறைந்த (நவம்பர் 4ம் நாள் 2008) மைக்கேல் கிரைட்டனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். நாவல்களின் நடுவே பல தொழிற்நுட்ப விவரங்களை கதையை சற்றும் தொய்வுறா வகையில் புகுத்துவது அவரின் சிறப்பம்சங்களில் ஒன்று. அவருடைய ஆரம்பகட்ட நாவல்கள் எல்லாமே திரைப்படமாக்கப்பட்டவை. அவருடைய புகழ் உலகெங்கும் பரவ ஆரம்பித்தது ஜுராசிக் பார்க்குக்கு பிறகு தான் என்றாலும், அவர் நாவல்களில் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்ட திரைப்படம் இது என நான் கருதுவதால் இத்திரைப்படத்தினை பற்றி பேச விரும்புகிறேன்.
மைக்கேல் கிரைட்டனின் ஈட்டர்ஸ் ஆப் தி டெட் (The Eaters of the Dead) என்ற நாவலின் திரைவடிவம் தான் ஜான் மெக்டையர்ன் இயக்கிய The 13th Warrior. பேவுல்ப் கதையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போல் எழுத முடியுமா என்ற கேள்விக்கு மைக்கேல் கிரைட்டனின் பதிலே மேற்சொன்ன நாவல். ஒரு நாகரிகமான உலகிலிருந்து காட்டுமிராண்டித்தனமான உலகிற்கு ஒரு மனிதனின் பயணமும், அங்கு அவன் புரியும் சாகசங்களுமே தான் கதை.
அரபிய ராஜ சபையை சேர்ந்த அஹமத் இபின் பேத்லான் காலிபாவை (சுல்தான் அல்லது மன்னர் என வைத்துக் கொள்ளலாம்) கோபப்படுத்தியதால் அவர் நாடுகடத்தப்படுகின்றார். அவர் தன் நண்பரோடு ஒரு பாலைவனத்தை கடந்து செல்கையில், பாலைவனக் கொள்ளையரின் கூட்டம் அவர்களை துரத்துகிறது. அவர்களுக்கு தப்பி அவர்கள் ஒடுகையில், தீடிரென கேட்ட ஒரு சங்கொலி காரணமாக அவர்களை துரத்தி வந்த பாலைவன கொள்ளையரும் நடுங்கி திரும்பி ஒடுகின்றனர்.
அந்த சங்கொலி வைகிங் கப்பலில் இருந்து வந்தது என அறியும் அவர்கள், அவர்களுடன் தங்குகின்றார்கள். ஒவ்வொரு வைகிங் வீரனும் பயமறியாதவன். யுத்தக் களத்தில் மரணமடைவதே அவர்களுக்கு சொர்க்கம் என சிறு வயதிலேயே புகட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் வம்சத்தில் கோழைகளே கிடையாது. அவர்களை பற்றிய பல விவரங்களை கதாநாயகன் தெரிந்து கொள்கின்றான்.
ஒருநாள் ஒரு தொலைதுார பகுதியிலிருந்து ஒரு துாதுவன் வந்து, அவர்கள் நாட்டினை ஒரு மர்ம கும்பல் தாக்குகின்றதாகவும், அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று அவர்களிடம் கோரிக்கை விடுகின்றான். வைகிங் வீரர்களும் அவர்களிடமுள்ள குறி சொல்லும் கிழவியிடம் நிமித்தம் கேட்கையில் பன்னிரெண்டு வீரர்களும், பதிமூன்றாவதாக வேறு கலாச்சாரத்தை சேர்ந்த ஒருவனும் அவர்களோடு சேர்ந்து இந்த வேட்டைக்கு செல்ல வேண்டுமென்று சொல்கின்றாள். பதிமூன்றாவது வீரனாக நமது அரபு கதாநாயகன் தேர்ந்தெடுக்கப்படுகின்றான்.
வேண்டா வெறுப்பாக இவர்களுடன் கிளம்பி செல்லும் கதாநாயகன் பல இன்னல்களுக்கு நடுவில் அவர்கள் மொழியை கற்று, அந்த நாட்டுக்கு செல்கின்றான். மலையடிவாரத்தில் அமைந்துள்ள அந்த நாட்டை பனி மூட்டமானது மலையிலிருந்து வந்து சூழ்ந்து கொள்ளும் நேரங்களில் அந்த மிருகக் கூட்டம் பனிமூட்டத்துடன் வந்து அவர்களை தாக்குகின்றது என தெரிந்து கொள்கிறார்கள்.
அந்த நாட்டை காப்பாற்ற தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. வைகிங் வீரர்களால் காப்பாற்றப்படுவது அந்த நாட்டில் உள்ள பிரபுகள் சிலருக்கு பிடிக்க வில்லை. அவர்கள் சில உள்குத்து வேலைகள் செய்கின்றார்கள். அதனையெல்லாம் முறியடித்து எவ்வாறு அந்த நாட்டை காப்பாற்றுகின்றார்கள் என்பது தான் கதை.
படத்தின் கடைசியில் வைகிங் வீரர்களுக்கும், அந்த மிருக கும்பலுக்கும் நடக்கும் போர்க்காட்சிகள் மிக பிரமிக்கத் தக்க வகையில் படமாக்கப்பட்டிருக்கின்றன. வைகிங் வீரர்களின் வீரம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்த பட்டிருக்கும். ஒரு அரபு ராஜதந்தரியாக இருந்த கதாநாயகன் அவர்களுடன் சேர்ந்து தானும் ஒரு மிகச் சிறந்த வீரனாக மாறி கடைசியில் மீண்டும் தன் நாட்டுக்கு திரும்புவதுடன் படம் முடிகிறது.
பேவுல்ப், ஓடிஸி போன்ற சாகச காவியங்களுக்கு நிகரான கதை இது என சொல்ல இயலாது என்றாலும், அது போன்ற கதையை இரண்டு மணி நேரத்திற்குள் சரியாக சொல்ல முடியாது. இந்த திரைப்படத்தின் திரைக்கதையையும் மைக்கேல் கிரைட்டனே எழுதியிருப்பார். நாவலுக்கும் படத்திற்கும் சிறிய அளவில் வித்தியாசங்கள் இருந்தாலும், கதாசிரியரே அத்திரைக்கதையை எழுதியிருக்கிறார் என்பதால் அவற்றை பெரிய அளவில் பொருட்படுத்த வேண்டியதில்லை. அரபிய ராஜதந்திரியாக அந்தோனியா பான்ட்ராஸ் நடித்த திரைப்படம். இயக்குநர் டை ஹார்ட் வரிசை படங்களை இதற்கு முன் இயக்கியிருப்பவர்.
—-என் மதிப்பிற்குரிய கதாசிரியர் மைக்கேல் கிரைட்டனின் நினைவிற்காக.
Recent Comments