Archive for November 8, 2008
Quantum of Solace – திரை விமர்சனம்
அமெரிக்காவிற்கு சிஐஏ, பிரிட்டனுக்கு எம்ஐ 6 போல நமக்கு ரா (Research and Analysis Wing) என வெளிநாட்டு புலனாய்வு துறை இயங்கி வருகிறது. இதில் வேலை செய்யும் ஏஜென்ட்கள் எல்லோரும் நம்பகதன்மையோடு இருக்க வேண்டும். இதில் வேலை செய்த திரு.இரபிந்தர் சிங் என்னும் ஒரு அலுவலர் இந்திய இரகசியங்களை தொடர்ந்து அமெரிக்காவிற்கு விற்றுக் கொண்டு டபுள் ஏஜென்டாக செயல்பட்டு வந்தார். இரகசியங்கள் அம்பலமானது தெரிவதற்குமுன் நேபாளம் வழியாக அமெரிக்காவிற்கு பறந்து சென்று விட்டார். அமெரிக்க-இந்திய உறவுகளில் இது ஒரு கசப்பு அத்தியாயமாக கருதப்பட்டாலும், திரை மறைவில் இரு நாடுகளுமே இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றன.
அவ்வாறு தப்பி ஓடிய அந்த உளவாளி அமெரிக்காவில் ஏதோ ஒரு இடத்தில் புதிய அடையாளங்களுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கலாம். அவருடைய வாழ்க்கை என்றுமே நிம்மதியோடு இருக்காது. நம் உளவுத்துறை பார்வையில் அவர் என்றெனும் பட நேரிடலாம். நம் உளவு துறையும் அவரை தேடிக் கொண்டே இருக்கும். வேறு நாடுகளின் உளவுத் துறைகளுக்கு நம் உதவி தேவைப்படும் பொருட்டு, இது போன்ற துரோகிகளை காட்டிக் கொடுப்பதும் உண்டு. துரோகிகளின் சரித்திரங்கள் மறக்கப்படுவதில்லை. மன்னிக்கப்படுவதுமில்லை.
இது போன்ற நரக வாழ்க்கை உடைய உளவாளிகளின் வாழ்க்கை திரைப்படங்களில் மிகவும் பணக்காரத் தன்மையோடவே காட்டப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு முன் இருந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் (சீன் கானரி, ரோஜர் மூர், பியர் பிராஸ்னன்) ஜேம்ஸ் பாண்ட் என்னும் பிரிட்டிஷ் உளவாளி மிகவும் இரசனை மிகுந்தவராகவும், எதிரிகளை பந்தாடும் போது அலட்டிக் கொள்ளாதவராகவுமே காட்டப்படுகிறார்.
டேனியல் க்ரெய்க்-ன் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ராயல் ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் முதல் முதலாக தொடர் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து வந்தது தான் க்வான்டம் ஆப் சோலஸ். இந்த படத்திலும் அனைத்து வில்லன்களும் முடியவில்லை. ட்ரையலாஜி ஜேம்ஸ் பாண்ட் படமாக எடுப்பார்கள் போலும்.
சென்ற படமான கேசினோ இராயலை ஒரு தடவை பார்த்து விட்டு செல்லுங்கள். அதைத் தொடர்ந்தே படம் ஆரம்பிக்கிறது. க்வான்டம் என்னும் இயக்கத்தை பற்றி தெரிந்துக் கொள்வதற்காக அதன் ஆள் ஒருவனை பிடித்து காருக்குள் அடைத்து ஜேம்ஸ் கிளம்புகையில் ஒரு அற்புதமான கார் சேஸ் சீனுடன் படம் துவங்குகிறது. பிரிட்டனின் உளவுத் துறையிலும் அவர்களுக்கு ஆள் இருப்பது அங்கே அதிர்ச்சிகரமாக தெரிய வருகிறது. அந்த துரோகியை துரத்தி சென்று கொல்லும் அட்டகாசமான காட்சி அடுத்த சில நிமிடங்களில் வருகின்றது.
இதற்கு மூலகாரணமான க்வான்ட்ம் என்ற அமைப்பை பற்றி துப்பு துலக்க ஜேம்ஸ் பாண்ட் சில நாடுகளுக்கு செல்கிறார். ஏழை நாடுகளை சர்வதேச நிறுவனங்கள் எவ்வாறு சுரண்டுகின்றன என்பதை படத்தில் காட்டும் விதம் கொடூரமாக இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணே இவருக்கு உதவி செய்யும் இன்னொரு உளவாளியாக வருகிறார்.
இந்த அமைப்பின் முக்கிய கையான வில்லனை ஜேம்ஸ் பாண்ட் பிடித்து அவனிடமிருந்து உன்னை கொல்ல மாட்டேன் என்ற உத்திரவாதத்துடன் உண்மைகளை வாங்கிக் கொண்டு பாலைவனத்தின் நடுவே அவனைவிட்டுவிட்டு அவனுக்கு ஒரு பாட்டில் ஆயிலை மட்டும் கொடுத்து விட்டு விடுவதோடு படம் முடிகிறது.
பொதுவாக, ஜேம்ஸ் பாண்ட் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அழகிகளை மாற்றுவார். பெரிய அளவில் உணர்ச்சிவசப்பட மாட்டார். அவருக்கு பெரிய அளவில் நேரடி சண்டைக் காட்சிகள் இருக்காது. அனைத்தையும் தவிடுபொடி ஆக்கிய படம் இது. இறந்து போன தன் காதலியை நினைத்து பழி வாங்கும் நோக்கத்துடன் இதில் வருகிறார். ஒவ்வொரு சண்டை காட்சி முடிந்த போதிலும் கோட் சூட் என கசங்காமல் வரும் மற்ற ஜேம்ஸ் பாண்ட் மாதிரி இல்லாமல், அடித்து நொறுக்கி, இவரும் படம் முழுக்க டேமேஜ் ஆன மாதிரியே தெரிகிறார். வெளியே அமைதியாக இருந்தாலும் கொந்தளிக்கும் மனத்துடன் இருக்கும் கதாபாத்திரம் அவரால் மிகச் சிறப்பாக பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது.
உளவாளிகளின் நடமாட்டங்கள் பற்றி ஒரு இருண்ட பக்கங்களை பார்த்த மாதிரியான உணர்வு படம் முழுக்க நிரவி இருக்கிறது. அதற்கேற்ப ஒளிபதிவும், இசையும் படத்திற்கு துணை புரிகின்றன. படம் சலிப்பை ஏற்படுத்துவதே இல்லை. மிக வலுவான திரைக்கதை. நறுக்கான உரையாடல்.
மற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களை போல இல்லாமல் வித்தியாசமாக இருந்தாலும், பார்க்க நன்றாக இருக்கிறது. புதிய முயற்சி, கண்டிப்பாக பாருங்கள்.
Recent Comments