Archive for November 7, 2008

இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் VIII

      “நானும் என் மனைவியும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்கிறாம்.  இதற்கிடையில்தான் நடிகை …………..என்பாரின் நட்பு கிடைத்தது.   ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதை வைத்திருக்கின்றோம்.  ஆம். தனியாக சில தடவை சந்தித்திருக்கிறோம்.  இது தனிப்பட்ட விஷயம். இதுபற்றி இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை.”

 

      “நமது ஜனாதிபதி சொல்லின் செல்வர் திரு ஜார்ஜ் புஷ் அவர்களின் சீரிய தலைமையில் நல்லாட்சி நடந்து வரும் இந்த நேரத்தில் மின் தடைகள் பற்றி சில பத்திரிகைகள் தவறாக செய்திகள் பிரசுரித்துக் கொண்டிருக்கின்றன.  தற்போது நம் நாட்டில் ஏற்படும் இரு மணி நேர மின் தடை சிறிது நாட்களுக்கு மட்டுமே இருக்கும்.  ஆப்பிரிக்கா நாடுகள், இந்தியா போன்ற நாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த இரு மணி நேர மின் தடை ஒரு பெரிய விஷயமே அல்ல என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். “

    

     ஒரு அமைச்சர் அல்லது செகரட்டரி  ஒரு நடிகையுடன் சுற்றுகிறார் என்ற செய்திக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர் அல்லது செகரட்டரி முதல் பாராவில் உள்ளவாறு விளக்கம் தெரிவித்தால் அதனை அமெரிக்கர்கள் தனிப்பட்ட வாழ்க்கை என பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.   அந்த நடிகையுடன் பழகுவதற்கு அவர் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகம் செய்தால் மட்டுமே பிரச்சினை எழும்.  இவ்வாறாக அவர் தன் நிலையை கூறிய உடன் அந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும்.

       அமெரிக்காவில் சில நாட்களாக ஒரிரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டு, அதற்கு தொடர்புடைய அமைச்சர் அல்லது செகரட்டரி இரண்டாவது பாராவில் உள்ளவாறு விளக்கம் கொடுத்திருந்தால், அவரின் அரசியல் வாழ்க்கை அன்றோடு அஸ்தமனம் ஆயிருக்கும்.  அவரால் திரும்ப ஒரு சிறிய கிராம கவுன்சில் மெம்பராக கூட சேர முடியாது. அவர் உள்ள கட்சியின் தலைவருக்கு தீராத ஒரு தலைவலி ஏற்பட்டிருக்கும்.  ஆட்சியே கவிழக் கூட நேரிடும்.  பத்திரிக்கைகள் தயவு தாட்சண்யம் காட்டாமல் வறுத்து எடுத்துவிடும்.

      நமது நாட்டிலோ முதல் வகை விளக்கங்கள் அபூர்வம்.  அதற்கேற்றபோல் சம்பவங்கள் நடக்கின்ற போதிலும் இது குறித்து அரசியல்வாதிகள் யாரும் விளக்கம் அளிக்க மாட்டார்கள்.  அவ்வாறு மீறி அளித்தாலோ நமது பத்திரிக்கைகளுக்கு ஒரே குஷிதான்.  கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு அவர்கள் எவ்வாறு சந்தித்தித்தார்கள், அவர்கள் குடும்பத்தில் என்ன கருத்து வேறுபாடுகள், அவரின் மனைவி ஏன் அவரை பிரிந்தார் இது போன்ற தேசிய முக்கியத்துவம் உடைய கேள்விகளுக்கு துப்பு துலக்க கடுமையான போட்டிகளில் இறங்கும்.  அவரின் தனிப்பட்ட வாழ்க்கை காற்றில் பறக்க விடப்படும்.  அவர் கட்சியில் இருந்து விலக்கப்படும் சூழ்நிலைக்கு ஆளாவார்.  சிறிது காலம் தான்.  இந்த விவகாரங்கள் எல்லாம் ஆறி போனவுடன் மீண்டும் அவர் கட்சிப் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.  அதற்குள் பத்திரிக்கைகள் அடுத்த விவகாரத்திற்கு போயிருப்பார்கள்.

        மின்தடை சம்மந்தமான இரண்டாவது வரி அறிக்கை தினமும் நாம் கேட்பது. வாடிக்கையான ஒரு தகவல் அறிக்கைதான்.  அதைப்பற்றி பத்திரிக்கைகள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடாது.  இதற்கு என்ன காரணங்கள் என மக்களுக்கு தெளிவாக அறிவிக்க வேண்டுமா?  அதை படித்துவிட்டு அவர்கள் என்ன செய்ய போகின்றார்கள்?  இதற்கு காரணம் என ஆளும் தரப்பில் கூறப்படுவது சென்ற அரசு சரியாக மின் உற்பத்தி செய்யவில்லை என்பதே.  இன்னும் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும்.  நம்புங்கள்.  நம்பி விடுவோம்.

      பொறுப்பற்ற அறிக்கைகளை அமைச்சர்கள் பத்திரிக்கைகளுக்கு அளிக்கும்போது நாம் பார்ப்பது அதில் சூடான செய்திகள் ஏதெனும் உள்ளதா? யாரையேனும் தாக்குகின்றாரா என்பதைதான்.  பொறுப்பற்ற அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நம்மை என்ன சொல்வது?       ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதை மறைக்க முடியாத நிலை வரும்போது அதனை அரசியல்வாதிகளே மக்களுக்கு உண்மைநிலையை சொல்லி இவ்வாறு நடந்து விட்டது, தவறுதான் மீண்டும் சரிசெய்ய உங்களின் ஒத்துழைப்பை கோருகின்றோம் என சொல்வது நம் மிக மிக மிக மிக அரிதான ஒரு விஷயம். 

      தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடைகள் காரணமாக ஏதேனும் ஒரு உருப்படியான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளனவா?  அல்லது அதற்கு அன்றாட மக்கள் தினந்தோறும் அனுபவித்து வரும் கஷ்டங்களுக்கு ஒரு வருத்தமேனும்?  இவர்கள் எதையேனும் சொன்னால் எதிர்கட்சிகள் உடனே வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடும் என்ற பயம்.  இங்கே உள்ள எதிர்கட்சிகள் அரசு நல்ல, கெட்ட திட்டங்கள் எதை கொண்டு வந்தாலும் எதிர்க்க ஆரம்பித்துவிடும். எதிர்கட்சிகள் என்றால் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்று இல்லையே. 

      நேற்று வெளியே கேட்ட ஒரு உரையாடல்

   ‘ஆமா, யாரோ ஓபாமான்னு ஒருத்தர் அமெரிக்கா எலக்சன்ல ஜெயிச்சு வந்துட்டாராமே’

  ‘எலக்சன்ல அவரு எவ்ளோ செலவு பண்ணாரு தெரியுமா, மூவாயிரம் கோடி. தெரியுமா’

  ‘மூவாயிரம் கோடியா’

  ‘ஆமாடா, மூவாயிரம் கோடி ரூபாய்’

‘அடெங்கப்பா, மூவாயிரம் கோடியா,  ம்………………..அமெரிக்கால்ல அவ்ளோ ரூபாய் ஆகுந்தான். ஆமா அதல்லாம் ஒரே வருசத்துல எடுத்துருவாருல்ல?

      We deserve our politicians.

November 7, 2008 at 2:59 pm 10 comments

07-11-2008

      எல்லாமே சிகப்பாக தென்படுகின்றன.  அமெரிக்க சந்தை கிட்டதட்ட 1000 புள்ளிகளை தொடர்ந்து இழந்து வந்திருக்கிறது.  நேற்று நமது சந்தைகள் பெரிய அளவில் இறங்காமல் நெருக்கடி கொடுக்கப்பட்டது.  10 புள்ளிகள் பாஸிட்டிவ்வாக கூட சென்றது.  அந்த நிலைகளை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மீண்டும் சரிந்து 100 புள்ளிகளை இழந்திருக்கிறது.

      தற்போது சந்தை மீண்டும் இழப்புக்கு தயாராக இருக்கிறது.  நாமும்தான்.  அடுத்த வாரமும் இதே நிலைமை தொடரும் என்றே நான் நினைக்கிறேன்.

       நீங்கள் வீட்டை விட்டு சந்தைக்கு செல்லும் வழியில் நிஜமான கரடியை பார்க்க நேர்ந்தால் சகுன சாஸ்த்திரத்தின்படி, சந்தை இன்று 200 புள்ளிகள் உயர வாய்ப்பு இருக்கிறது.  இல்லாவிடில் 200  புள்ளிகள் கீழே இறங்க வாய்ப்பு இருக்கிறது.

 Get Ready for the Fall!

Post Market:

    காலையில் அனைத்து ஆசிய சந்தைகளும் சிகப்பாகவே காட்சியளித்தன. நாளின் நடுவில் அவை மீட்சி பெற்றுவிட்டன.  அது நம் சந்தைக்கு ஒரு புத்துணர்ச்சி அளிப்பதாகவே அமைந்து விட்டது.  மேலும் ஐரோப்பிய சந்தைகளும் நன்றாகவே ஆரம்பித்தன.  80 புள்ளிகள் பெற்று முடிந்திருக்கிறது.  சரிவு தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

      பணவீக்க சதவீதம் அதிகரித்திருக்கிறது.  இன்னும் சில அறிக்கைகள் அடுத்த வாரத்தில் வரவுள்ளன.  சந்தை புதிய பள்ளத்தை சந்திக்க நேரும் என கருத நேரிடுகிறது.  புதிய நிலைகளை எடுப்பதற்கு யோசியுங்கள்.  பழைய நிலைகளை மெல்ல மெல்ல கொடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன்  அடுத்த முறை உங்கள் போர்ட்போலியோவில் என்னவகை பங்குகள் வேண்டும் என ஆராய்ந்து வாங்கலாம்.

    யாரோ கரடியை பார்த்திருக்காங்கய்யா…………………………….

Happy Weekend!

November 7, 2008 at 6:42 am 5 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
November 2008
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930