Archive for November 1, 2008

இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் VII

     ஒரு தனியார் பேருந்து.

    ஒரு முரட்டுதனமான நடத்துநர் பேருந்தில் ஏறிக்கொண்டிருக்கும் பாட்டியை பார்த்து அதிக கட்டணம் கேட்கிறார்.

   ‘என்னப்பா, இது அநியாயமா இருக்கே.  வழக்கமா இருபது ரூபாய் தானே ………’

   ‘கிழட்டு நாயே, என்ன திமிர் உனக்கு.’ என கூறியவாறே அந்த பாட்டியை எட்டி உதைக்கிறார்.

    பாட்டி அப்படியே காற்றில் பறறறறறறறறறறறறறறறந்து போய் இருபது அடிகள் தள்ளி சாலையில் விழுகிறார்.

    அடிடாஸ் ஷு அணிந்த இரு கால்கள் தென்படுகின்றன.

    நன்றாக மேனிக்யூர் செய்யப்பட்ட இரு கைகள் அந்த பாட்டியை அணைத்து துாக்குகின்றன. பேருந்தில் இருப்பவர்கள் எல்லாம் கைதட்ட ஆரம்பிக்கின்றார்கள்.

    ஏழை கதாநாயகன் கண்ணில் கோபத்துடன் அறிமுகமாகின்றான்.

    இந்திய திரையுலகில் பொதுவாக இவ்வாறு கதாநாயகன் அறிமுகமாவதை பார்த்திருக்கின்றோம். பச்சை வண்ணத்தில் கால்சட்டை அணிந்திருந்தால் தெலுங்கு படமென்றும், கருப்பு வண்ணத்தில் கால்சட்டை அணிந்திருந்தால் தமிழ் படமென்றும், பாட்டியை  கைத்தாங்கலாக அணைத்து ஓய் என்ற சத்தத்தை சில டெசிபல்கள் அதிகமாக எழுப்பினால் ஹிந்தி படமென்றும் அறிந்து கொள்ளலாம்.

     இதேபோல் கதாநாயகனின் அறிமுகம் ஹாலிவுட் திரைப்படங்களில் செய்யப்படுவதில்லை.  டாம் க்ரூய்ஸ், வில் ஸ்மித் ஏன் ஸ்டீவன் செகல் மற்றும் ராக் கூட இது போல அறிமுகம் செய்யப்படுவதில்லை.  ஏன்?  அவர்கள் சமுதாயத்தில் நடப்பதற்கு சற்று அரிதான செயல் அது.  ஒரு வயதானவரை பொதுமக்கள் முன்னிலையில் அவ்வாறு கொடுமைப்படுத்திவிட்டு யாருமே தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.  அதனால் அது போன்ற திக்கற்ற பார்வதிகளை காப்பாற்ற கதாநாயகர்கள் வருவதில்லை. அதையும் தாண்டி தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவது போன்ற பெரிய விஷயங்களில் தான் அவர்கள் அறிமுகமாகின்றார்கள்.

      திரைப்படங்களும் குழந்தைகள், டீன் ஏஜர்கள் மற்றும் முதிர்ந்த மக்கள் பார்க்கும் படங்கள் என வகைப்படுத்தப்பட்டு திரையிடப்படுகின்றன.  குழந்தைகள் பார்க்கும் படங்களில் தப்பி தவறியும் இரத்தம் சிந்தும் கொடூர காட்சிகள் இடம் பெறுவதில்லை.  டீன் ஏஜர்கள் படங்களில் காட்டப்படும் பாலுணர்வு காட்சிகளும் நகைச்சுவை கலந்து காட்டப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.   முதிர்ந்த மக்கள் பார்க்கும் படங்கள் சோகம், காதல், யுத்தம், நகைச்சுவை போன்ற வகைகளில் வெளிவருகின்றன.

      குழந்தைகள், டீன் ஏஜர்கள் படங்களை பொதுவாக டிஸ்னி நிறுவனம் நிறைய தயாரித்துள்ளது.  பெரும்பாலும் அப்படங்களில் தாழ்வு மனப்பான்மையை நீக்கி,  மன தைரியத்தோடு இருக்கும் வண்ணம் கதாபாத்திரங்கள் அமைக்கப்படுகின்றன.  எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் அதனை சமாளித்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதாக மிகவும் பாஸிட்டிவ்வான கண்ணோட்டத்துடன் இத்திரைப்படங்களின் திரைக்கதை இருக்கின்றன.

      நல்ல கதையம்சத்துடன் வரும் படம் ஆரம்பத்தில் வசூலில் சற்று சுணங்கினாலும் பத்திரிக்கைகளில் நல்ல விமர்சனங்களை பெற்று ஓட ஆரம்பித்து விடுகிறது. 

     உடனே, இங்குள்ள திரை ஆர்வலர்கள் அதே மாதிரியெல்லாம் நாம் வேறு கலாச்சாரத்தில் படமெடுக்க முடியாது என வாதாட கூடும். உண்மைதான். அவ்வாறே எடுக்க வேண்டாம்.  நம்முடைய கதாநாயகன் இந்திய-பாகிஸ்தானுக்கிடையில் நடைபெறவுள்ள நியுக்ளியர் யுத்தத்தினை தவிர்ப்பதாக எல்லாம் நாம் படமெடுக்க வேண்டாம்.  கார்கில் யுத்தம் முடிந்த உடன் அதனை மையப்படுத்தி சில திரைப்படங்கள் வெளிவந்தன.  அத்தனையும் குப்பை. ஒருவேளை என் கருத்துதான் இப்படி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு இராணுவ வீரரிடம் பேச வாய்ப்பு கிடைத்து பேசிக் கொண்டிருக்கையில் அத்திரைப்படங்கள் பற்றி கருத்து கேட்கையில் இவர் மிகவும் எளிதாக ‘அது சினிமா சார். இதுக்கும் (யுத்ததிற்கும்) அதுக்கும் (சினிமாவிற்கும்) நிறைய வித்தியாசம் இருக்கு.’

     நம்மிடமும் தவறுகள் உள்ளன.  வெயிலை டிவிடியில் பார்த்து ஏகனை திரையரங்கில் பார்த்தால் அம்மாதிரி படங்கள் தான் வெளிவரும்.  திரை விமர்சனங்களை பொறுத்தவரையில் நமது பத்திரிக்கைகள் மிக மென்மையான விமர்சன போக்கையே மேற்கொள்ளுகின்றன.  உதாரணத்திற்கு, சக்கரக்கட்டி, சேவல், பழனி போன்ற படங்களின் திரை விமர்சனங்கள் பிரபல பத்திரிக்கையில் எவ்வாறு எழுதப்பட்டிருந்தன என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  இந்தியாவில் மிகப் பெரிய ஹிட்டான மம்மி திரைப்பட இயக்குநரை ‘இந்தாள தயவு செய்து கொஞ்சநாள் ஹாலிவுட்லிருந்து விலக சொல்லுங்க’ என அங்குள்ள பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன.  அதனையும் அவர்கள் சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள்.  இங்கே கடுமையான விமர்சனங்கள் இவர்களும் எழுத முடியாது, அவர்களும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். படங்களும் அவர்களுக்கு பிடித்தமாதிரி எடுத்து நம் இரசனை இதுதான் என நம்மை மட்டம் தட்டும் போக்கு தான் தற்போது இருக்கின்றது.

      அந்த காலத்தில் படத் தயாரிப்பாளர்கள் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலிருந்தும் வருவார்கள்.  தற்போது அந்த நிலை மாறி மிகப் பெரிய குழுமங்கள் எல்லாமே திரைப்பட தயாரிப்பில் இறங்கி விட்டன. நல்ல படம் எடுப்பதற்கு ஹாலிவுட் அளவிற்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  நல்ல படம் என்றால் இவர்கள் ஆஸ்கார் என அளவுக்கோல் வைத்திருக்கின்றார்கள்.  கமல்ஹாசனையே ஆஸ்கார் நாயகன் என்ற அடைமொழியில் அறிமுகப்படுகிறார்கள்.  It’s utmost insult to him. இதனை அவர் எவ்வாறு பொறுத்து கொள்கிறார் என்றே எனக்கு தெரியவில்லை. 

        இந்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருது தேர்வுகளில் ஒரு திறந்த அணுகுமுறையே இருக்காது.  அவர்கள் எந்த மாதிரி படங்களை பார்க்கின்றார்கள் என்பதே ஒரு மர்மம்தான்.  தீடீரென்று ஒரிய மொழி படம் என அறிவிப்பார்கள்.  அதனை ஒரு மாதத்திற்கு முன்னரே அப்படம் விருது பட்டியலில் இருக்கின்றது என சொன்னால் மற்றவர்களும் பார்ப்பார்கள் அல்லவா. குறைந்த பட்சம் விருது பட்டியலில் உள்ள படங்களின் வசூலாவது நன்றாக இருக்கும்.

              இப்போதாவது ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்க்கலாமென்றால், அதற்கும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதிருக்கும் போலிருக்கிறது.

November 1, 2008 at 3:57 pm 11 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
November 2008
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930