கல்வி வல்லுநரின் மேடைப்பேச்சு
October 4, 2008 at 8:31 pm 1 comment
மாணவர்களின் கல்வி மேம்பாடு சம்பந்தமான கருத்தரங்குகள் பல நடந்து வருகின்றன. அவற்றில் சில கருத்தரங்குகளில் பார்வையாளராக கலந்து கொண்டிருக்கிறேன். அக்கருத்தரங்கில் “கல்வி வல்லுநர்” மேடைப் பேச்சு எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் தர விரும்புகின்றேன். இது யார் மனதையும் புண்படுவதற்காக எழுதப்படுவது அல்ல. நான் கலந்து கொண்ட சில கருத்தரங்குகளில் பேசப்பட்ட மேடைப் பேச்சுகளில் சில இதே தொனியில் இருந்ததை ஒட்டி எழுதப்பட்டது. கட்டுரை சுவாரஸ்யம் கெடாமல் இருப்பதற்காக சிறிதளவு நகைச்சுவை கலக்கப் பட்டுள்ளது. அவ்வளவே.
அமைச்சர் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் அழைப்பிதழில் குறிப்பிட்ட நேரத்திலிருந்து சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து இனிதே தொடங்குகிறது. முன்னுரை, வரவேற்புரை, மதிப்புரை எல்லாம் முடிந்து “கல்வி வல்லுநர்” முனைவர் ……………….. என்பாரை பேச அழைக்கின்றார்கள்.
மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே என தொடங்கி, மேடையில் இருப்பவர்களையெல்லாம் அவர்களே போட்டு பேச்சை ஆரம்பிக்கின்றார். மேடையில் இருக்கும் கூட்டத்தையொட்டி இந்த வரவேற்பு முன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை நீடிக்கும்.
அமைச்சரை பல உதாரணங்களுடன் புகழ்தல். உலக அளவிலேயே முதன் முதலாக சில காரியங்கள் செய்தமைக்கு மனமாற பாராட்டுதல். பேச்சாளர் தமிழில் முனைவர் பட்டம் வாங்கியிருந்தால், the audience are in serious trouble. பேச்சாளருக்கு கவிதையில் பரிட்சயம் இருந்தால், பார்வையாளர்களுக்கு ஏண்டா பிறந்தோம் என்ற எண்ணம் உருவாக கூடும். ஒவ்வொரு கவிதை வரியையும் பார்வையாளர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணம் ஒரு முறைக்கு இரு முறை சொல்வது பேச்சாளரின் கடமை.
ஒரளவு மேடையில் அமர்ந்தவர்களை திருப்தியடைய செய்தபின், சுய புராணத்திற்கு திரும்புதல். தான் கல்வி கற்கும் வயதில் சில கிலோ மீட்டர்கள் நடந்தே சென்று கல்வி கற்றமையும், எல்லா வகுப்புகளிலும் முதல் மாணவனாக வந்தது பற்றி அடக்கமாக சில வார்த்தைகள். அவருடைய கணக்கு வாத்தியார் எவ்வாறு அவருக்கு ஊக்கமளித்தார் என்பதையும், இவரின் கணித தேற்றங்கள் அவரை விம்மியழ செய்தமை குறித்து உணர்ச்சி பெருக்கான பேச்சு. இங்கே பார்வையாளர்களின் சோகையான கைதட்டல் ஆங்காங்கே ஒலிக்கும்.
மேடையில் அவர் எடுத்துள்ள தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் ஒரு குட்டி கதை சொல்லுதல். அக்கதையின் பொருள் குறித்து பார்வையாளர்கள் பிரமித்துக் கொண்டிருக்கும் பொழுதே, மற்றொரு நகைச்சுவை கதையை பகிர்ந்து கொள்ளுதல். எல்லோரும் சிரிக்க வைத்து ஒரு வழி செய்த பிறகு அடுத்தக் கட்டம்.
தான் வீண் பேச்சை குறைத்து, நடவடிக்கைகளை மட்டுமே நம்புவதாக கூறி தன்னுடைய எதிரிகளுக்கு “உள்குத்து” கொடுத்தல். அன்னாரின் எதிரிகளை பொறுத்து இது ஒரு நிமிடம் முதல் முன்று நிமிடங்கள் வரை தொடரும்.
பல அந்நிய நாட்டு அரசாங்கங்கள் அவரின் சேவையை வேண்டி நின்ற போதிலும், தாய் நாட்டு சேவைக்காக அவர் தன் வாழ்க்கையை அர்பணித்த தியாக மனப்பான்மை பற்றி பார்வையாளர்களுக்கு தன்னடக்கத்துடன் சில நிமிட விவரிப்புகள்.
இந்த மேடையில் பேச வாய்ப்பு கொடுத்த மேடையில் கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறும் படலம். இது ஆரம்பத்தில் எவ்வளவு நேரம் எடுத்ததோ அதேபோல் ரிவர்ஸ் கவுண்ட் டவுன். இந்த கட்டத்தில் பார்வையாளர்கள் உற்சாகம் பெற்று நிமிர்ந்து அமரும் நேரம்.
கடைசி நன்றியை சொல்லி பேச்சை முடிக்கின்றார். அவர் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு ….. மாணவர்களின் …. இல்லை….கல்வி ……Sorry, அதை மறந்துட்டேன்.
Entry filed under: Hunter's Mind.
1.
ஜீவன் | October 5, 2008 at 10:54 am
அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்கோ!