Posts filed under 'Hunter's Mind'
Di Di – ரய் இசை பாடல்
ரய் (rai) இசை அல்ஜீரியாவில் தோன்றியது என நம்பப்படுகிறது. பொதுவாக இது போன்ற நாடோடி இசை வகைகள் இந்த இடத்தில் தான் தோன்றியது என அறுதியிட்டு சொல்ல முடியா விட்டாலும், அல்ஜீரிய நாடோடி, கால்நடை மேய்ப்பவர்களால் பாடப்பட்டு அல்ஜீரியா, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தாக்குதல்களுக்கு நடுவே வளர்ந்த இசை. அவ்விரு மொழிகளின் கலப்பும் இவ்விசையில் உண்டு. இந்த இசையை இரசிப்பதற்கு இதைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை. கேட்டாலே போதும்.
ரய் பாடகர்கள் செபி (நம்ம செபி இல்லீங்க…. இந்த Chabbi சுருக்கமாக சேப்) என அழைக்கப்பட்டனர். இவர்களுள் புகழ் பெற்றவர் கலீத் ஹஜ் ப்ராஹிம் (Khaled Hadj Brahim). கலீத் என்ற பெயரில் புகழ்பெற்றவர். (பாடப்புத்தக நடையில் சொல்ல வேண்டுமானால்)
இவரின் புகழ் பெற்ற பாடல் டி டி. எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். 1990-களில் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றிருந்த பாடல். யார் பாடியது என தெரியாமலேயே மக்கள் கேட்டு இரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று. இதைக் கேட்கும் எத்தனைப் பேருக்கு பழைய நினைவுகள் நினைவிற்கு வரப்போகிறது என தெரியவில்லை.
சினிமாவில் இப்பாடல் எடுத்தாளப்பட்டதா என தெரியவில்லை. நீங்கள் கேட்டு இரசிக்க …..இதோ… (புதுசா யு-ட்யூப் விட்ஜெட் இருக்குன்னு காட்ட வேண்டாமா?)
5 comments June 16, 2009
Hava Nagila – Song
பங்கு சந்தையை பற்றி முதலில் எழுதும்போது சந்தையில் நுழையும்போது நம் மனநிலை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை பற்றி இரு பதிவுகள் எழுதினேன். அதன் சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன
அதனை தொடர்ந்து இந்த பதிவினை எழுதி பதிவேற்றம் செய்யவில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை பற்றி பகிர்ந்து கொள்வதற்காக எழுதினேன். அந்த சமயத்தில் இதனை பதிவேற்றம் செய்தால் இவ்வலைப்பூவினை படிக்கும் நண்பர்கள் குழம்பிவிடுவார்களே (ம்க்கூம்.. இப்போ மட்டும் என்ன வாழுதான்) என எண்ணி ட்ராப்டாகவே வைத்து விட்டேன்.
சந்தை எந்த டெக்னிகலிலும் மாட்டாத இந்த வாரத்தில் பழைய பதிவுகளை எல்லாம் பார்ததுக் கொண்டே வரும் போது இந்த பதிவு பதிவேற்றப்படாமலே இருந்ததை பார்த்தேன்.
ஹவா நகிலா என ஆரம்பிக்கும் இந்த பாடல் ஒரு யூத பாடலாகும். அதன் வரிகள் ஹீப்ரூ மொழியை சேர்ந்தவை. சில வரிகளே அந்த பாடல்.
‘ வாருங்கள் கொண்டாடுவோம், மகிழ்ச்சியாக பாடுவோம், சகோதரர்களே விழித்துக் கொள்ளுங்கள் மகிழ்ச்சியாக ஆடுவோம்‘’
இவ்வளவுதான் இப்பாடல் வரிகளின் அர்த்தம். இதென்ன பிரமாதம்? கேட்டு பாருங்களேன். தெரியும்.
இந்த பாடலை கேட்டு ஆடாத யூதர்களே கிடையாது. இஸ்ரேல் நாட்டின் ஆரம்ப வருடங்களில், இஸ்ரேலை சுற்றி அரபு நாடுகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த போதிலும் யூத மக்கள் இந்த பாடலை பாடி ஆடியிருக்கிறார்கள். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துக் கொண்டிருக்கின்றன, விமானங்கள் எந்த நேரத்திலும் குண்டு போட்டு தாக்கும் நிலை, உலக நாடுகள் பெரும்பாலும் ஆதரிக்காத நிலை, தோல்வியானது கண்ணுக்கு எட்டிய தொலைவில்தான் இருக்கிறது. இருந்த போதிலும் அவர்களால் அந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக, மன உறுதியுடன் இருந்து பாடி ஆடிய பாடல் இது.
இப்பாடலை நீங்கள் மறைமுகமாக நிறைய தடவை கேட்டிருப்பீர்கள். இப்போது கேட்டால் எங்கேயோ கேட்டது போலவே தெரியும். பொதுவாகவே உலக புகழ் பெற்ற பாடல்களை நாம் தமிழ் திரைப்படங்களில் எடுத்தாண்டிருப்பார்கள். எல்லாமே கேட்ட மாதிரிதான் இருக்கும்.
இந்த பாடலானது விக்ரம் திரைப்படத்தில் இளையராஜா இசையில் ‘எஞ்சோடி மஞ்சக்குருவி’ என ஆரம்பிக்கும். இளையராஜா இந்த பாடலின் மூலத்தை தெரியப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. இந்த பாடலானது உலகத்தில் பல்வேறு இசை குழுக்களால் பாடப்பட்டு வந்தபோதிலும் இந்த பாட்டிற்கு அவர்கள் கிரெடிட் கொடுத்திருப்பார்கள். இப்பாடலானது இந்தி திரைப்படங்களிலும் கண்டிப்பாக வந்திருக்கும். அந்த காலக்கட்டங்களில் தமிழ் திரைப்பட இசையைதான் இந்தியில் எடுத்தாண்டிருப்பார்கள்.
சமீபத்தில் வந்திருக்கும் ‘மொழி’ திரைப்படத்தில் இந்த பாடல் மிக அருமையாக அப்படியே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். நினைவு இருக்கிறதா? பிரகாஷ் ராஜ் குளித்துவிட்டு துண்டுடன் பாடி ஆடுவாரே? பின்னணியில் இப்பாடல்தான் ஒலிக்கும். அவர்களாவது இப்பாடலை உபயோகப்படுத்தியதற்கு கிரெடிட் கொடுத்தார்களா என தெரியவில்லை.
இப்பாடலை நிறைய குழுவினர் பாடியிருக்கிறார்கள். முதலில் Andre Rieu இசைக் குழுவினரால் பாடப்பட்ட இப்பாடலை கேட்க கீழே உள்ள சுட்டியில் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=BFtv5qe5o3c
காலையில் எழுந்து உற்சாக மனநிலைக்கு மாற கண்டிப்பாக இப்பாடலை கேட்கலாம். துண்டுடன் ஆட்டம் போடுவது உங்கள் விருப்பம்.
6 comments May 25, 2009
சத்ய சோதனை I
இந்த தலைப்பை தற்போது அனைவரும் உபயோகித்து வருகிறார்கள் என்றாலும், முதலில் உபயோகித்தது நான் என்பதால் இதையே மீண்டும் உபயோகப்படுத்துகிறேன்.
நேற்றைய சந்தையில் நடந்தததை வரிசைக்கிரமமாக பார்ப்போம். ஓபனிங்லாம் நல்லாதான் இருந்ததது இல்லையா? பின்னர், இராமலிங்க ராஜு ராஜிநாமா என்ற செய்தி வர ஆரம்பித்ததும், சரிய ஆரம்பித்தது. ஆனாலும் ரூ 75-80 என்ற நிலையில் வலுவாக இருந்தது. அதற்கு பின்னர் அவர் பணத்தில் கொஞ்சம் கசமுசா நடந்திருப்பதை ஒப்புக் கொண்டதும் பங்கு வெகுவாக சரிய ஆரம்பித்தது.
உடனே, அனைத்து நிபுணர்களும் காய்ச்சி எடுத்து விட்டார்கள், சத்யத்தை. ஒரு பிரகஸ்பதி அப்பங்கானது ரூ. 0 என்ற நிலைக்கு வரும் என்று கூறினார். இது போன்ற அபத்தத்தை நான் எங்கும் கேட்டதில்லை. இந்த நிலைக்கு எந்த பங்குமே இது வரை போனதில்லை. இதிலிருந்தே நிபுணர்களின் கருத்தை அலசி ஆராய வேண்டும் என்ற அரிய பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். டையும், கோட்டும் போட்டுக்கொண்டு டீ குடித்துக் கொண்டே டிவியில் பேசினால் நம்பி விடக்கூடாது. நம்மக் கிட்ட இதுதான் பெரிய பிரச்சினை. ஒரு சினிமாவில் கதாநாயகன் பத்து பேர் அடிப்பதையும் நம்புகிறோம், அவர் ஆதரவற்ற அபலை பெண்களுக்கு உதவுவேன் என்று சொல்வதையும் நம்பி விடுகிறோம். அது போன்றே இவர்கள் சொல்வதையும் நம்பி விடுகிறோம்.
சரி,உண்மையான நிலை என்ன? இது வரையில் ஒரு தெளிவான நிலை தெரியாத நிலையில் வரும் ஹேஷ்யங்களை எவ்வாறு நம்புவது? சத்யம் நிறுவனம் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன என்று பார்த்தோமென்றால், கணக்கு புத்தகங்களை சமைத்தது தான்.(Cooking of Account Books என்பதை இவ்வாசிரியர் எவ்வளவு அழகாக மொழி பெயர்த்திருக்கிறார் என்பதை கவனியுங்கள்).
ஒரு பிரபல அரசியல்வாதி இலஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டு விட்டார் என செய்தி வரும் போது நீங்கள் என்ன ரீயாக்ஷன் கொடுப்பீர்கள்? அவர் இலஞ்சம் வாங்கியது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்காது. அவர் மாட்டிக் கொண்டது தான் அதிர்ச்சியாக இருக்கும். அதே நிலைதான் தற்போதும் நடந்துள்ளதாக நினைக்கிறேன்.
ஏறக்குறைய எல்லாக் குழுமங்களின் கணக்குகளும் அட்சர சுத்தமாக இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. கடந்த காளை ஒட்டத்திற்கு காரணமே தகவல் தொழில் நுட்ப குழுமங்கள் தான். அதாவது I.T. Index குழுமங்கள்தான். ஒவ்வொரு காலாண்டிற்கும் அவர் நம்மைவிட அதிகமாக கொடுத்துவிடுவாரோ என பயந்து பயந்து கணக்கினை சமைக்க ஆரம்பித்து விட்டனர் (மீண்டும் இவ்வாசிரியர் புத்திசாலித்தனமான மொழி பெயர்ப்பை உபயோகப்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள்).
இப்போது எல்லோரும் அவரவர் கணக்கு புத்தகங்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நானும் என் கணக்கு புத்தகத்தை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். என் சகோதரனும் அதை இப்போது கவனிக்க ஆரம்பித்திருக்கிறான். இந்த வலைப்பூ இன்னும் சில நாட்களுக்குள் Update செய்யப்படா விட்டால் முடிவினை ஊகித்துக் கொள்ளுங்கள்.
யோவ், சத்யத்தின் கதி, அதை சொல்லுய்யா என்று நீங்கள் மரியாதையாக கேட்பதனால் ஒரு விஷயம் சொல்லுகிறேன். சத்யத்தின் கதி அதோ கதி எல்லாம் கிடையாது. ஆனால் அக்குழுமம் 0 அளவிற்கெல்லாம் போகும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஆனால் மீண்டும் ரூபாய் 400 என்ற அளவுக்கு போக வெகுநாள் ஆகும் என்று மட்டும் தோன்றுகிறது. எனக்கே கூட அக்குழுமத்தை வாங்கி விடலாம் ஒரு ஆசை எழுந்தது. பணம் கொஞ்சம் குறைந்ததால் விட்டு விட்டேன். எத்தனை பேருக்கு இந்த மாதிரி தோன்றியிருக்கும்?
நேற்று சத்தியம் செய்து கொடுத்திருப்பதால் இதன் முதல் பகுதியை இப்போது எழுதியிருக்கிறேன். இதன் அடுத்த பகுதிகளை தொடர்ந்து வெளியிடுவேன் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால், தயவு செய்து பங்கு சந்தையில் வணிகம் தொடர்ந்து வணிகம் செய்ய வேண்டாம். அப்பாவிகளை சந்தை மன்னிக்காது.
ஆனால், இது தொடர்பாக எழுத நிறைய விஷயங்கள் இருக்கிறன. நானும் புத்திசாலி என்பதை எப்படியாவது காண்பிக்க வேண்டுமே? அதனால் இதை தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நம்பிக்கை தானே வாழ்க்கை.
I think this is the perfect opportunity for the Hero. A Hero must rise.
17 comments January 8, 2009