Posts filed under 'வேதாள நகரம்'

வேதாள நகரம் – 11 எதிர் தாக்குதல்

      நமது இலட்சிய குதிரை வீரர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தை நோக்கி கடகடவென, படபடவென, மடமடவென, குபுகுபுவென, தடதடவென ஒடிவந்த எஸ்கோபார் ‘அவர்கள் வந்து விட்டார்கள்’ என அலறினார்.

     உடனே உஷாரான விஷ்வா, ‘ஓடுங்கள், பிரிந்து ஓடுங்கள்’ என கதறிக் கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

      கலீலும் அந்த இடத்தை விட்டு அப்பீட்டானார்.

      இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட சதீஷ் ஸ்டெல்லாவின் கையை பிடித்து ‘வா, ஒடி விடுவோம்’

      ‘யார் அந்த அவர்கள்?’

      ‘யாரென்று தெரியவில்லை.  ஆனால் அவர்களின் இலக்கு யாரென்று தெரியும்’ என்று சொல்லி விட்டு அவளின் கையை பிடித்துக் கொண்டு உள்ளூர குஷியுடன் ஓடினார்.

==========================================================

       வேகமாக ஒடிய விஷ்வா தன் அறைக்கு போய் தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறிய போது, அவரை முறைத்துக் கொண்டே அந்த ஹோட்டலின் உள்ளே ஒருவன் வந்தான்.  அவனின் நோக்கம் என்னவென்று சட்டென்று புரிந்து கொண்ட விஷ்வா புன்னகையுடன் தான் எடுத்து வந்த பொருட்களை அருகிலுள்ள மேசையில் வைத்து விட்டு சண்டைக்கு தயாரானார்.  சின்ன அணிலையே எதிர்த்து வென்ற மாவீரனான விஷ்வா சில கராத்தே முத்திரைகளை செய்து காட்டினார்.

      எதிராளி அவரை இன்னும் வெறித்துக் கொண்டு  இருப்பதை கண்ட விஷ்வா மேலும் சில கராத்தே முத்திரைகளை செய்து காட்டினார்.  அவற்றில் ஆர்வம் இழந்த எதிராளி அருகிலிருந்த பீர் பாட்டில் ஒன்றை எடுத்து அவர் மேல் வீசி எறிந்தான்.

      650 மில்லி  பீரை கொண்டிருந்த அந்த பாட்டில் காற்றில் வெகு வேகமாக சென்று விஷ்வாவின் வயிற்றை பலமாக தாக்கியது.  அதனால் ஏற்பட்ட வலியை சமாளித்துக் கொண்ட விஷ்வா, அவனை பார்த்து கீழ்கண்டவாறு பேசினார்.

     ‘டேய் நாயே, உனக்கு கராத்தே தெரியவில்லை என்றால் அதை எனக்கு முன்னாலேயே சொல்லியிருக்கலாமே.  நான் பாட்டுக்கு பேசாமல் ஒடியிருப்பேனே.  அதை விட்டுவிட்டு இது என்ன பாட்டிலை துாக்கி அடிக்கிறது? சுத்த காவாலிதனமால்ல இருக்கு.’

இவரும் நம் பச்சை மின்னலுக்கு சொந்தகாரர் தான்.

இவரும் நம் பச்சை மின்னலுக்கு சொந்தகாரர் தான்.

     என கூறி, தன் பொருட்களை மேசையிலிருந்து எடுத்துக் கொண்டு அருகிலிருந்து ஜன்னலை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்தார்.   ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பிக்கும் போது பச்சை மின்னலார் கீழ்க்கண்டவாறு பஞ்ச் அடித்து விட்டு தப்பி ஒடினார்.

             ‘எனக்கு வலிக்கலையே!’

=========================================================================

        கலீல் தன் ஆறடி நீளமுள்ள சாட்டையை  ஒரு தடவை தடவிவிட்டு தாக்குதலுக்கு தயாரானார்.  சாட்டையை எதிராளியை நோக்கி வீசினார்.   அந்த சாட்டை வளைந்து, நெளிந்து, இழைந்து, கலைந்து மற்றும் பல ந்துகளை செய்து இலக்கை தாக்கியது.

       இரத்தத்தை பார்த்த எதிராளி பயந்து தப்பி ஒடினான்.

       

சாட்டையடி வீரன்

சாட்டையடி வீரன்

       தன்னுடைய இரத்தத்தை பார்த்த கலீலுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

===========================================================================

          ஸ்டெல்லாவை கூட்டிக் கொண்டு குஷியாக ஒடிக் கொண்டிருந்த சதீஷின் பாதையை ஒரு முரடன் மறைத்தான்.  

         ‘டேய், நீ எதற்காக என்னை வழி மறைக்கிறாய் என்பது தெரியும்.  ஆபத்தில் சிக்கியிருக்கும் அபலை பெண்ணை காப்பதற்காக நான் யாரையும் எதிர்ப்பேன்.’

       ‘ஆபத்தில் சிக்கி இருப்பது நீதான்.’

       ‘அப்ப இவளை நீ விட்டு விடுவாய். அப்படிதானே?’

        ‘ஆம்.’

        ‘இவளுடைய நண்பனான என்னையும் நீ ஏன் அவ்வாறே விட்டு விட கூடாது?’

        இந்த உரையாடலால் குழப்பம் அடைந்த அந்த முரடன்,

       ‘யோவ், பேசாம சண்டைக்கு வாய்யா.’

       ஸ்டெல்லாவை பார்த்து புன்னகை செய்துக் கொண்டே சதீஷ் சண்டைக்கு தயாரானார்.  முதலில் கையிலிருந்து கைக்கடிகாரத்தை கழற்றினார்.  பின்னர் பேன்ட் பாக்கெட்டிலிரூந்து கைக்குட்டையை எடுத்து அதை ஒரு மேசையின் மீது விரித்தார்.  அதில் அந்த கைக்கடிகாரத்தை மிகவும் பத்திரமாக வைத்தார். பிறகு அந்த கைக்குட்டையை நான்காக மடித்தார்.

       ஸ்டெல்லா ஒரு அழகிய கொட்டாவி விட்டார்.

      அந்த முரடனோ இந்த ஆள்கிட்ட பேச்சு கொடுத்து மாட்டிக்கக் கூடாது என பொறுமையில்லாமல் காத்திருந்தான்.

      ஏதோ நினைத்துக் கொண்ட சதீஷ் அந்த கைக்குட்டையை மீண்டும் ஜாக்கிரதையாக பிரித்தார்.  அதிலிருந்து அந்த கைக்கடிகாரத்தை எடுத்து சாவி கொடுக்க ஆரம்பித்தார்.  நன்றாக சாவி கொடுத்த பின்னர், மீண்டும் அந்த கைக்கடிகாரத்தின் நேரம் சரியாக இருக்கின்றதா என சரிபார்த்தார். பிறகு அந்த கைக்கடிகாரத்தை வெகு பத்திரமாக …….

      ‘யோவ், நீ என்னதாய்யா நினைச்சுகிட்டு இருக்கே.  நான் இன்னும் நாலு இடத்துக்கு போய் நாலு பேர அடிக்கணும்யா.  சீக்கிரம்  சண்டைக்கு வாய்யா.’

      ‘ஏம்பா, எனக்கு ஒரே தலைவலியா இருக்கு.  ஒரு காபி சாப்டுட்டு நம்ம சண்டைய வச்சிக்கிலாமே.’

      பயங்கர கடுப்பான அந்த முரடன் அவரின் வயிற்றில் பலமாக ஒரு குத்து விட்டுவிட்டு,

     ‘சாவுகிராக்கி, வந்து எனக்குன்னு மாட்டுது பாரு.’ என சொல்லி விட்டு வெளியேறினான்.

      அந்த அடியிலிருந்து சமாளித்துக் கொண்டு, சதீஷ் ஸ்டெல்லாவை ஒரக் கண்ணால் காதல் பார்வையுடன், உதடை ஒரு மாதிரி சுழித்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு பஞ்ச் அடித்தார்.

       ‘எவ்வளவோ வாங்கியிருக்கோம்,  இதை வாங்க மாட்டோமோ.’

==================================================================

         குதிரை லாயத்தை நோக்கி ஒடின விஷ்வாவை நோக்கி ஒரு முரடன் ஒரு பிச்சுவா கத்தியை வீசியெறிந்தான். அந்த பிச்சுவா கத்தி விஷ்வாவின் நெஞ்சை நோக்கி  டூர்ரென்று, டர்ரென்று, கிர்ரென்று,     வீர்ரென்று வந்தது.    

          (தொடரும்)

===================================================

       என் உயிரினும் மேலான வாசக கண்மணிகளுக்கு,

       இந்த இலக்கிய விருந்தை கடந்த பதினொன்று பகுதிகளை தொடர்ந்து படித்து உவகைக்குட்பட்டு இருப்பீர்கள்.  இதுவரை நடந்த முன்கதை(?) சுருக்கத்தினை நீங்கள் இங்கு பின்னுட்டமாக இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

     நம் எதிர்கால சந்ததியினர் பயன் அடையும் பொருட்டு சிறப்பான முறையில் எழுதப்படும் முன்கதை சுருக்கமானது இந்த இலக்கிய முயற்சி புத்தகமாக வெளிவந்து பெஸ்ட் செல்லர்ஸ் வரிசையில் இடம் பிடிக்கும் போது ஆசிரியரால் வெளியிடப்படும். 

        காலத்தை வென்று சரித்திரம் படைக்கும் இந்த கருத்துப் பெட்டகத்தில் உங்கள் பெயரும் வரக்கூடும்.  முயற்சி செய்யுங்கள்.

                                                                                                – ஆசிரியர்.

12 comments January 2, 2009

வேதாள நகரம் 10 – தாக்குதல்

      ‘அந்த பொண்ணு பேரு ஸ்டெல்லாவாம்’ என இருநுாற்று முப்பத்தியெட்டாவது தடவையாக சதீஷ் சொன்னார்.   அறையில் இருந்தவர்கள் எல்லாம் எரிமலையாகி கொண்டிருந்தார்கள்.

    ‘யோவ், வேற எதாவது பேசேன்’

     ‘பெருசு, அடுத்து என்ன பண்ணலாம்?’

     ‘கலீல், இன்னும் ஒரு மாசம் இந்த ஊரை நாம காலி பண்ண போறதில்லை.’

     ‘ஏன்?’

நமது கதாநாயகன் பச்சை மின்னல்.

நமது கதாநாயகன் பச்சை மின்னல்.

      ‘நாம வேதாள நகரத்துக்கு போறது எல்லோருக்கும் தெரியுது.  நமக்கு மட்டுந்தான் எங்கே போறோம்னு தெரியலை.  இதைப் பத்தி முழுசா தெரியுற வரை நாம இங்கேயே இருக்கறதுதான் நல்லது.  உலகம் ரொம்ப பெரிசு. சின்ன அணில், சின்ன குயில் இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க.’

       இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்ட ஒரு உருவம் அங்கிருந்து விலகி இருளில் மறைந்தது.

      ‘கலீல்’

     ‘சொல்லு, சதீஷ்.’

     ‘அந்த பொண்ணு………….’

     ‘யோவ், இதே டயலாக்கை திருப்பி சொன்னே கொண்ணே போட்டுருவேன். அந்த பொண்ணுக் கிட்டே போய் இதெல்லாம் பேசு’

      ‘அதான் எனக்கு பயமா இருக்கு.  என்ன பேசணும்?  விஷ்வா, எங்கூட வருவியா?’

      ‘என்ன ஏன்யா இதில இழுக்குற?’

       ‘இல்ல, நானே சுமாரா தான் இருக்கேன்.  அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கணும்னா உன்ன கூட்டிட்டு போனாதானே என்கூட பேசுவா.’

       விஷ்வா கொலைவெறி ஆக, கலீல் குறுக்கிட்டு ‘யோவ், ஏன்யா தேவையில்லாமா நாம பிரச்சினை பண்ணிக்கிட்டு? அந்தப் பொண்ணுக் கிட்ட ஏதாவது சிரிக்கிற மாதிரி ஒரு சம்பவத்தை சொல்லு.  அப்புறம் அவளே உன் கிட்ட பேச ஆரம்பிச்சுடுவா.’

       ‘சிரிக்கிற மாதிரின்னா?  கரடிமலையில விஷ்வாவை கட்டி வைச்சு அடிச்சாங்களே.  அந்த கதைய சொல்லவா?  செம காமெடி தெரியுமா அது?’

       ‘யோவ்,  சொந்த கதையெல்லாம் காமெடி பண்ணக் கூடாது,  சரி,  நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி கேள்விப்பட்ட ஒரு கதையை சொல்றேன்  அதயே சொல்லு.’

===============================================================

         பொழுது புலர்ந்து கதிரவன் தன் மென்மையான கதிர்களை வீச தொடங்கியிருந்தான்.  கதிரின் இதமான உஷ்ணத்தில் மலர்கள் பூத்து நறுமணத்தை வீசத் தொடங்கின.  மூடியிருந்த பனி அரசு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போல கரைந்தது.  இதெல்லாம் வேறு ஒரு இடத்தில் நடந்தன.  நம் கதை நடக்கும் இடமோ பாலைவனம், அங்கு இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை.  இருப்பினும், கதையில் இயற்கை பற்றிய வர்ணணைகள் இல்லையென்ற குறை பின்னாட்களில் வரலாம் என்ற காரணத்தில் எழுதப்பட்டன. 

      நம் கதை நடக்கும் இடத்தில் சூரியன் தகதகவென உதிக்க தொடங்கியவுடன், நம் இலட்சிய குதிரை வீரர்களுக்கு பகபகவென வயிறு பசிக்க ஆரம்பித்தது.  கீழே இறங்கி ஹோட்டலுக்கு வந்தனர்.

       ‘கலீல், ஸ்டெல்லா அந்த டேபிள்ல தனியா உட்கார்ந்து இருக்கா.’

      ‘போய் பேசு.  ஞாபகம் இருக்குல்ல.’

      ‘சாப்ட்டு போறேனே  பசிக்குதே.’

      ‘யோவ், உன் காதலை சொல்ல போறே பூரி கிழங்கு சாப்ட்டுட்டா போறது?  இந்தா, இந்த கொய்யாப் பழத்தை வாயில போட்டு மென்னுட்டே போ.’

      ‘ஹாய்’

     ‘ஹாய்.’

     ‘நாம் இரண்டு பேரும் ஒரே ஊருல இருக்கோம்.  ஒரே ஹோட்டல் தங்கி இருக்கோம்.  இப்ப ஒரே டேபிள்ல உட்கார்ந்து இருக்கோம். இல்ல?’

      ஸ்டெல்லா தன் எதிரில் உட்கார்ந்து இருப்பவரின் மனநிலையை பற்றி சிறிது சந்தேகம் கொண்டாள்.

       ‘ரொம்ப போர் அடிக்குதுல்ல.  சரி, நான் ஒரு கதை சொல்லட்டுமா.   ஹஹஹஹ…’

       ‘சரி, சொல்லு.’

       ‘ஒரு ஊருல தொண்ணுறு வயசு பெரியவரு ஒருத்தரு இருந்தாரு. ஹஹஹஹ…..அவரு ஒருநாள் குடும்ப டாக்டர்க்கிட்ட போய் நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன், என்ன சொல்றீங்கன்னு கேட்டாரு.  அதுக்கு டாக்டரு …ஹஹஹஹ… அதெல்லாம் வேலைக்காவது எதுக்கு ரிஸ்க்ன்னு சொல்லிட்டாரு.  ஆனா இவரு கேக்கலை. இருபத்தியெட்டு வயசு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

         நாலு மாசம் கழிச்சு திரும்ப டாக்டர பாக்க வந்தாரு…ஹஹஹஹ……..  என்னமோ வேலைக்காவது சொன்னீங்களே,   என் சம்சாரம் இப்ப மூணு மாசம்னு பெருமையா சொன்னாரு.  அதுக்கு டாக்டரு நான் ஒரு கதை சொல்றேன் கேளுங்கன்னு சொல்லி நான் ஒரு தபா ஆப்பிரிக்க காட்டுக்கு போனப்ப ஒரு சிங்கம் என் எதிர்க்க வந்துச்சி.  பயங்கரமா உறுமிச்சி.  எனக்கு வேற வழி இல்ல.  நான் உடனே என் கையில் இருந்த குடையால அந்த சிங்கத்தை சுட்டேன்.  அந்த சிங்கம் குண்டு பாய்ஞ்சி செத்துப் போச்சி என கதையை முடிந்தார்.

       உடனே அந்த பெருசு அது எப்படி குடையில இருந்து குண்டு வரும்? பின்னாடி இருந்து யாராவது துப்பாக்கியால சுட்டுருப்பாங்கன்னு சொன்னாரு. அதுக்கு டாக்டரு ஹஹஹஹ உங்க விஷயத்திலயும் அதான் நடந்துருக்குதுன்னு சொன்னாரு. ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹஹஹ.

      சதீஷ் முகத்தில் கும் என ஒரு பலத்த குத்து விழுந்தது. கீழே விழுந்து எழுந்து பார்த்தால் கண்களில் கொலைவெறியுடன் ஸ்டெல்லா நின்று கொண்டிருந்தது தெரிந்தது.

       ‘ஏன் என்ன அடிச்சே?  இது ஒரு சிரிப்புக் கதை தானே?’

       ‘என் சொந்த தாத்தா கதை உனக்கு சிரிப்பா இருக்கா?
 ============================================================================

         நோவடியின் எல்லையில் குதிரைகளை நிறுத்தி விட்டு துப்பாக்கிக்ளை அந்த மர்ம கும்பல் தயார் செய்து கொண்டது.  குதிரைகளை பார்த்துக் கொள்ள ஒருவரை நிறுத்திவிட்டு மீதியுள்ள நபர்கள் நோவடி நகரத்தை நோக்கி  கொலைவெறியுடன் நடக்க தொடங்கினர்.

                                                                                             (……………………. தொடரும்…………………..)

5 comments December 20, 2008

வேதாள நகரம் – 09. நோவடி

     ‘யாருப்பா அவங்க?  நம்மள ஏன் துரத்துறாங்க?

      ‘தெரியலை, பெருசு.  நின்னு கேட்க நேரம் இல்லை.  குதிரைங்களை வேகமாக விரட்டுங்க.’

       ‘இதோ பாரு பெருசு, அவங்க நம்மள துரத்துதறதால நாம ஒடுறோம்.  இறங்கி சண்டயெல்லாம் போட முடியாது.  நாம சண்ட போட்டொமென்றால் 50 சதவிதம் நாம ஜெயிக்க வாய்ப்பு இருக்கு.  ஆனா, ஓடினோம்னு வச்சிக்கோயன், அவங்களால நம்மள பிடிக்கவே முடியாது.  இதுல எங்களுக்கு எட்டு வருசம் அனுபவம் இருக்கு.’

     ‘சதீஷ்,  அந்த கரடிமலையில நம்மள கட்டி வைச்சு அடிச்சாங்களே, பெருசுக்கு அந்த கதைய சொல்லு.’

       ‘யோவ், உயிரை காப்பாத்த ஒடிக்கிட்டு இருக்கோம்.  இதுல கதை சொல்ல நேரமில்லை.  ஆமா, விஷ்வா எங்கே?’

       ‘விஷ்வா தான் பச்சை மின்னல் ஆச்சே, நமக்கெல்லாம் முன்னாடி ஒடிக்கிட்டு இருக்கிறது அவருதான்.’

        அந்த மர்ம கும்பலுக்கும், நமது இலட்சிய குதிரை வீரர்களுக்கும் இடைவெளி மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது.

       இவர்களுக்கு முன்னால் குதிரையை விரட்டிக் கொண்டிருந்த விஷ்வாவின் மனதில் பலப்பல எண்ணங்கள்.  அவரின் பெரியப்பா நவஜோ இனத்தின் நாட்டாமை மாதிரி.  அவரு பாத்தா என்ன நினைப்பார்?   எங்க போனாலும் நம்மள அடிச்சு காயப் போடுறதுக்குன்னு ஒரு கூட்டம் அலையுது.  டூமில்குப்பத்தில ஜானி பீரோ, கங்குவா கிராமத்துல சின்ன அணில், போதாக்குறைக்கு யாருன்னே தெரியாத ஒரு கும்பல்.   இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ?

      நோவடிக்கு போனவுடனே என்னென்ன செய்ய வேண்டுமென விஷ்வாவின் மனம் பட்டியலிட ஆரம்பித்தது.

1)  கூட வர மூணு பேரையும் தலை முழுகணும். அது நடந்தாலே,  எல்லாப் பிரச்சினைகள் முடிந்து போய்விடும். ஆனா இப்போதைக்கு அது நடக்கற மாதிரி தெரியலை. அதனால இரண்டாவது,

2)  இந்த புதையல் விவகாரமே வேண்டாம்.  பெருச பேசாம ஊருக்கு அனுப்ப வேண்டியதுதான்.

3) ஒரு மாசத்துக்கு நோவடியிலே முழு ஓய்வு.

4)  அதுகப்புறம் ஒரு நல்ல வேலை தேடணும்

5) ஜில்லுன்னு ஒரு பீரு.  பி.கு.  இதை முதலில் சேர்க்கணும்.

=======================================================================

        செழி,  எழுந்திரு, என்னடைய பைனாக்குலரை கொண்டு வாங்க  தொலைவில் புழுதி கிளம்புகிறது.’

       செழி லாலிபாப்பை மேசையில் வைத்துவிட்டு பைனாக்குலரை தன்னுடைய பாஸிடம் கொடுத்தார்.

      ‘அவனுங்களேதான்.  ஏன் இவ்வளவு வேகமா வரானுங்க தான் தெரியலை. இன்னும் அரை மணி நேரத்துல இங்கே வந்துருவானுங்க.   நான் சொன்னது ஞாபகம் இருக்கா?’

      ‘இருக்கு, பாஸ். எது?’

=====================================================================

         நோவடி எல்லையை நமது இலட்சிய குதிரை வீரர்கள் நெருங்கியதுமே அவர்களை துரத்தி வந்த மர்ம கும்பலானது மெல்ல மெல்ல பின்வாங்க ஆரம்பித்தது.  வேறு எந்த இடைஞ்சலுமின்றி நமது வீரர்களும் பலத்த பெருமூச்சுகளுக்கு நடுவில் நோவடியை நெருங்கினர்.

       நோவடியில் இருந்த ஹோட்டல் ஜில்பாவில் தங்களுடைய குதிரைகளையெல்லாம் கட்டிவிட்டு, அருகிலிருந்து பாருக்கு செல்லலாம் என முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினர்.

      ‘ஒரு நிமிஷம் இருங்க.  பெருசு, நம்மள துரத்தி வந்த ஆளுங்கள உனக்கு தெரியுமா?

       ‘எங்கப்பா அவனுங்கள பாக்க முடிஞ்சுச்சி.  சும்மா புயல் வேகத்துல தானே ஒடி வந்துருக்கோம்.  அவனுங்க ஏதாவது ஒரு லோக்கல் கொள்ளக்கார கூட்டமா இருக்கும்.’

      ‘ஏன் இந்த புதையல தேடுற ஆளுகளா இருக்கக் கூடாது?

      ‘அந்த மாதிரி ஆளுங்கனா நோவடின்னு கூட பாக்காமே இங்கேயே வந்து சுட்டுத் தள்ளிட்டு போய்டுவானுங்க.’

     இதை கேட்டதும் நமது மூன்று இலட்சிய வீரர்களுக்கும் வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்தது.

     அதை சமாளித்துக் கொண்டு தீவிரமாக யோசனை செய்த விஷ்வா, ‘இது சாதாரண கொள்ளைக் காரங்களா இருக்க முடியாது.  நம்மை பற்றி நன்றாக தெரிந்த ஒரு கும்பலாக தான் இருக்க வேண்டும்.’

     ‘எப்படி சொல்றே?’

      ‘யார் துரத்துனாலும்  நாம ஒடுவோம்னு தெரிஞ்சு வைச்சுருக்கான்ங்க பாரு, அதான் சொல்றேன்.’

     அப்போது ஹோட்டல் ஜில்பாவின் வாசலில் ஒரு கோச்சு வண்டி நீண்ட பயணத்தை முடித்துவிட்டு வந்து நின்றது.  அதிலிருந்து பொருட்களை பணியாளர்கள் இறக்க ஆரம்பித்தனர்.  அந்த வண்டியோட்டி  கோச்சு வண்டியின் கதவினை திறந்து,

      ‘அம்மா, ஸ்டெல்லா, பாத்து இறங்கும்மா.’

      தொபீர் ! ( இந்த சத்தத்திற்காக அலுவலகத்தில் பல வேலைகளுக்கும் இடையில் இந்த சப்தம் மிக சிறப்பாக வரவேண்டுமென்பதற்காக உதவிய நண்பர் விஸ்வா அவர்களுக்கு நன்றி) 

      அது ஒன்றுமில்லை.  இலட்சிய வீரரான சதீஷ் காதலில் விழுந்த சப்தம் தான் அது!

                                                                    (………………………தொடரும்…………………………..)

4 comments December 13, 2008

Next Posts Previous Posts


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

December 2009
M T W T F S S
« Nov    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031