Posts filed under 'திரை விமர்சனம்'

Princess Mononoke – திரை விமர்சனம்

        பலத்த மழைக்கு பிறகு ஆள் நடமாட்டம் குறைந்த கடற்கரையில் நடந்து செல்கின்றீர்கள்.  கருமேகங்களால் மறைக்கப்பட்ட நிலவு தீடிரென வெளிப்படும்போது கடவுள் உங்கள் அருகே கைக்கோர்த்து அமர்ந்து இருப்பது போல தோன்றியிருக்கிறதா?  நல்லது. இது பற்றி உங்கள் அலுவலக நண்பர்களிடம் அப்படியே சொன்னால் அன்றைய தினத்திலிருந்து உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதை தவிர்த்து விடுவார்கள்.  என்னிடம் கடவுள் தன்மை இருக்கிறதா என்ற கேள்வியை உங்கள் மேலதிகாரி கண்டிப்பாக ரசிக்க மாட்டார். நான் கடவுள் என சொன்னால் சீட்டு கிழித்து விடுவார்கள்.

    இன்றைய விஞ்ஞான உலகத்தில் கடவுள்கள் கோயில்களில் அடைக்கப்பட்டு விட்டார்கள்.  அதை தவிர வேறு எங்குமே அவரை காண இயலாது. அங்கே தவிர வேறு எங்கும் அவரை பற்றி பேச முடியாது.  மின்சாரம் தடைபடும்போது மெழுகுவர்த்தியை தேடுவதுபோல பிரச்சினை வரும்போது நினைவு வரும்.  மின்சாரம் திரும்ப வந்தவுடன் மெழுகுவர்த்தியின் நிலைதான் அவருக்கும். விஞ்ஞானம் நம்மிடம் நெருங்கி வர, கடவுள் விலகி போய்விட்டார். 

            ஆனால் உலகமெங்கும் காணப்படும் அனைத்து நாடோடி கதைகளிலும் கடவுள்கள் நம்மோடு இணைந்து வாழ்ந்தார்கள் என்பதை ஒரு சாதாரண விஷயமாகவே சொல்கின்றன.  பகவத்கீதை, பைபிள் போன்ற மதநூல்களும் இந்த உண்மையை  பதிந்துள்ளன. அப்போது மலையுச்சிகள், பாலைவன சோலைகள், அடர்ந்த காடுகள் கடவுள்களின் வசிப்பிடமாகவே கருதப்பட்டன.

     இது போன்ற ஒரு கதைதான் ‘இளவரசி மோனோன்கோ’.  இயக்கம் மியஸகி.

mono1

காட்டின் நடுவே உள்ள குளம்

      தீய ஆவியினால் பீடிக்கப்பட்ட ஒரு காட்டுப் பன்றியின் தாக்குதலை தடுக்கும்போது அந்த பிராந்திய இளவரசன் அஷிடகா அதை அழித்து விடுகிறான்.  அந்த முயற்சியில் அவனுக்கு கையில் காயம் பட்டுவிடுகிறது.  அந்த சபிக்கப்பட்ட காயம் அவன் உடம்பில் பரவி உயிரை குடித்து விடும் என அறிய வரும்போது, அந்த காட்டுப்பன்றியின் இருப்பிடத்தை தேடி ஒரு நெடும் பயணம் செல்கிறான்.

      இரும்பு கோட்டை என்ற பெண்களாலேயே ஆளப்படும் ஒரு கிராமம்.  அதன்  தலைவிக்கு அந்த கிராமத்தை சுற்றியிருக்கும்   காட்டை அழிக்க வேண்டுமென்ற உத்வேகம்.  ஏனென்றால் அந்த கிராமத்தின் வலிமையான துப்பாக்கி தோட்டாக்கள் உருக்க தேவையான தீயை அந்த காட்டின் மரங்கள் அளிக்கின்றன. அந்த காட்டில் அவளின் உயிரை குடிக்க காத்திருக்கும் எதிரி.

      இத்தகைய வளமையான, வலிமையான  கிராமத்தை தாக்கி கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒரு சமுராய் பிரபு. அந்த கிராமத்தை கைப்பற்ற அவன் போடும் போர்வியூகங்கள்.

       அந்த காட்டில்  மான் தேவதை பகலில் மானாகவும், இரவில் காட்டின் பாதுகாவலரகவும் மாறி காட்டை ஆட்சி செய்கின்றது.  அதன் இரத்தம் பட்டால் மட்டுமே அஷிடாகாவின் சாபம் குணமடையும்.  அந்த தேவதை உருமாற்றம் அடையும் அந்த நேரத்தில் அதன் தலையை வெட்டி எடுக்க அலையும் ஒரு கும்பல்.mono2

     அந்த காட்டில் மூன்று ஓநாய்களுடன் அலையும் ஒரு பெண். அந்த காட்டை அழித்துக் கொண்டிருக்கும் இரும்புக் கோட்டையின் தலைவியை அழிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்பவள்.

                 அங்கே செல்லும் அஷிடாகாவால் அந்த சூழ்நிலைகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைதான் மியஸகி கவிதைமயமான தருணங்களுடன் விவரிக்கின்றார்.

      மூன்று ஓநாய்களுடன் சுற்றும் பெண், காட்டின் நடுவே உள்ள ஒரு குளத்திற்கு வரும் மான் தேவதை, காட்டுப் பன்றிகளின் படை என பல்வேறு கதாபாத்திரங்களுடன் மியஸகி படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இயற்கையும் காடு வடிவத்தில் முக்கிய வேடத்தை ஏற்றிருக்கிறது.

     மியஸகியின் சித்திர திரைப்படங்களில் சற்றே பெரிய திரைப்படம்தான்.  ஆனால் படம் முடிந்த பிறகுதான் அது நமக்கு தெரியும்.

     ஜே ஆர் ஆர் டோல்கியனால் எழுதப்பட்ட ‘த லார்ட் ஆப் த ரிங்ஸ’ ( The Lord of the Rings) புத்தகத்தை பற்றி கீழ்க்கண்டவாறு ஒரு விமர்சனம் இருந்தது.

     ‘ஆங்கிலம் தெரிந்தவர்களை இருவகையாக பிரிக்கலாம்.  ஒன்று இந்த புத்தகத்தை படித்தவர்கள், மற்றொன்று இதை படிக்காதவர்கள் என.’

   அதுபோலவே,       மியஸகி படங்களுக்கு எந்தவித ஸ்டார் ரேட்டிங்கும் தேவையில்லை.

9 comments July 24, 2009

Ponyo on the Cliff by the Sea

       மியகஷியின் மற்றொரு அற்புதம்.   இந்த வருடத்தில் வெளிவந்த சித்திரத் திரைப்படம்.  இவரின் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால் மியகஷி இரசிகர் மன்ற தலைவர் ஆக ஆக்கிவிட்டார்கள். நானும் ஏதேனும் குற்றங்குறைகளை கண்டுபிடிக்கலாம் என்றுதான் பார்க்கிறேன்.

     ஒவ்வொரு  நாட்டிலும் கடல் பற்றிய புனைவுகள் உண்டு.  கடல் சார்ந்து வாழ்க்கின்றவர்களின் புனைவுகள் சிறிது மாயத்தன்மை கலந்தவையாகவே பெரும்பாலும் இருக்கும்.   அவற்றிலிருந்து உருவாக்கப்பட்டது தான் இத்திரைப்படத்தின் கதை.

          கடலின் ஆழத்தில் உள்ள ஒரு மந்திர நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஒரு மந்திர சக்தி வாய்ந்த, மனித முகம் கொண்ட ஒரு தங்க மீன் வெளியுலகை (நம் உலகம் மாசுலகம் என்று படத்தில் அழைக்கப்படுகிறது) பார்க்க  தன் தந்தையை மீறி கிளம்புகிறது.

சஸ்கே

சஸ்கே

     கடலுக்கு அருகே உள்ள ஒரு சிறு குன்றின் உச்சியில் வசிக்கும் சஸ்கே என்னும் சிறுவனின் நட்பு அவளுக்கு அங்கே கிடைக்கிறது.   அவன் அவளை பொன்யோ என பெயரிட்டு ஒரு வாளியில் வைத்து நட்பு பாராட்டுகிறான். 

        

பொன்யோ - தங்க மீன்

பொன்யோ - தங்க மீன்

இதற்கிடையில் அவளின் தந்தை பொன்யோவை தேடிக்கொண்டு வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.  அவளை பிரிந்து துயரமடைகிறான் சஸ்கே.  

       ஆழ்கடலில் பொன்யோவிற்கும் அவள் தந்தைக்கும் கடும் வாக்குவாதம் நடக்கிறது.  அவள் மீண்டும் மேலே செல்ல விரும்புகிறாள்.  அவள் தந்தையோ மனிதர்கள் நம்ப தகுந்தவர்கள் இல்லை என்கிறார்.  சொன்ன பேச்சை கேட்காத பொன்யோவை உறைய வைத்து விட்டு தந்தை வெளியேறுகிறார்.

    

பொன்யோவின் நைனா

பொன்யோவின் நைனா

சஸ்கே மீது கொண்டிருந்த நட்பு அவளை அந்த உறைநிலையிலிருந்து விடுவித்து தன்  சகோதரர்களின் துணையோடு கடடலைகள் பொங்க, மனித உருவம் கொண்டு அவனை நோக்கி செல்கிறாள் பொன்யோ.  மலை உச்சியை நோக்கி காரில் சஸ்கே செல்ல, அதற்கு இணையாக கடடலைகள் மேலேறி மீன்களின் மேலேறி அவனை நோக்கி பொன்யோ ஒடும் காட்சி மிக அற்புதமானது. 

       அவனை நோக்கி ஒடிவந்து தான் பொன்யோ என அறிமுகப்படுத்திக் கொள்ளும் குழந்தைத் தனமும் அதன் பிறகு அவனின் வீட்டில் அவள் அடிக்கும் கும்மாளங்கள் எல்லாமே குழந்தை மனதை மிகவும் படித்திருக்கின்ற ஒரு இயக்குநரின் மிகச் சிறந்த திரைக்கதையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

     அவள் மனித உருவம் எடுத்திருப்பதால் இயற்கை சமநிலை குலைந்து விடுவதால் கடல் சீற்றமடைந்து அருகிலுள்ள நிலப்பகுதிகளை மூழ்கடித்து விடுகிறது.  இது சீர்ப்பட வேண்டுமானால் பொன்யோ மீண்டும் தங்க மீனாக வேண்டும்.  தன் நண்பனை இழக்க வேண்டும்.  அவள் தன் நண்பனை இழந்தாளா? என்பதுதான் கதை.

          இந்த படத்தின் முடிவுக் காட்சிகள் திருப்திக் கரமாக இல்லையென என் நண்பர் ஒருவர் சொன்னார்.  உண்மைத்தான். இவரின் அனைத்துப் படங்களிலும் முடிவு காட்சிகளை பார்க்கும் பொழுது  அப்படிதான் நானும் உணர்ந்திருக்கிறேன்.  காரணம் என்னவென்று யோசித்துப் பார்க்கும்போது நம் மனதிற்கு பிடித்த ஒரு செயலை செய்து கொண்டிருக்கும் போது அவை தீடிரென முடியும் போது பிடிக்குமா என்ன?

       Special Thanks to Rafiq and Shankar.

6 comments May 8, 2009

Kiki’s Delivery Service – விமர்சனம்

       ஒரு இளம் மாலை நேரம்.  காற்று மெள்ள மெள்ள வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு அழகான ஏரிக்கரை.  அருகிலுள்ள புற்களின் மேல் ஒரு இளம் சிறுமி கண்மூடி படுத்து வானொலி கேட்டுக் கொண்டிருக்கிறாள். Hayao Miyazaki  எனும் அற்புதமான இயக்குநரின் மாயாஜாலம் திரையில் ஆரம்பமாகிறது.

     

பட போஸ்டர் (ஆங்கில மொழி)

பட போஸ்டர் (ஆங்கில மொழி)

 

       அது ஒரு சூனியக்காரிகள் வசிக்கும் கிராமம்.  அக்கிராம வழக்கப்படி பதிமூன்று வயதாகும் இளம் சூனியக்காரிகள்  அக்கிராமத்தை வெளியேறி ஒரு வருடம் வெளியே வசிக்க பழகிக் கொண்டிருக்க வேண்டும்.  அந்த காலமானது அவர்களது திறமைகளை அடையாளம் காண உதவும் என நம்புகிறார்கள்.  இளம் சூனியக்காரியான கிகி தனது பெற்றோரின் தயக்கமான அனுமதிக்கு பிறகு தன் தாயாரின் துடைப்பத்தில் தன் செல்லக் கருப்புப் பூனையுடன் ஏறி தான் வசிக்கப் போகும் நகரத்தைத் தேடி பறந்து செல்கிறாள்.

      கடலையே பார்த்திராத அவள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரு நகரத்திற்கு வந்து சேர்கிறாள்.  அந்த நகரம் அவளை எவ்வாறு எதிர்கொள்கிறது, கிகி நகர வாழ்க்கைக்கேற்ப மாறிக் கொண்டாளா?  அந்நகரம் அவளுக்கு கற்றுக் கொடுத்த பாடம்தான் என்ன? 

     ஆரம்பத்தில் அந்நகரத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்படும் கிகிக்கு ஒரு பேக்கரி நடத்தும் பெண்மணி அடைக்கலம் கொடுக்கிறாள்.  தன் பறக்கும் சக்தியால் ஒரு கூரியர் சர்விஸ் ஒன்று நடத்தவும் ஆரம்பிக்கிறாள். அவளுடன் பழக விரும்பும் ஒரு சிறுவனை ஆரம்பத்தில் புரிந்துக் கொள்ளாமல் விரட்டியடிக்கும் கிகி பின்னர் மனம் மாறி அவனுடன் நட்பு கொள்கிறாள்.  அந்த சமயத்தில் அவளுடைய பறக்கும் சக்தி அவளை விட்டு போய்விடுகிறது. 

         அதற்கு காரணம் அவன்தான் என துயரமடையும் கிகி தன் சக்தியை ஒரு தேடுதலுக்கு பிறகே அடைகிறாள். அதன் பின்னர் அவனுக்கு ஏற்படும் ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றி அவனுடன் தன் நட்பை மீண்டும் தொடர்கிறாள். இந்த கதையை அவர் எடுத்திருக்கும் விதம் பிரமிக்கதக்கது. 

படத்தின் ஆரம்பக் காட்சி

படத்தின் ஆரம்பக் காட்சி

       ஒரு மழைக்கால இரவில் பயணத்தை தொடங்கும் அவள் பயணம் தன் இனிய நண்பனை காப்பாற்றுவது வரைக்கும் அருமையான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு கடற்கரை நகரம் மழைக்காலத்தில் எவ்வாறு இருக்கும், பறக்கும்போது காற்று திசைமாறும்போது ஏற்படும் திருப்பம்,  காட்டின் நடுவே இருக்கும் அழகிய ஒவியப் பெண்ணின் சிநேகிதம் என ஏகப்பட்ட கவிதைமயமான சித்திர திருப்பங்கள்.

      உங்களுக்கு நான்கு வயது முதல் பத்து வயது வரையிலான குழந்தைகள் இருந்தால் அவர்களோடு உட்கார்ந்து பாருங்கள். நாமும் இப்படிதானே? ஆரம்பத்தில் நமது வீட்டின் அருகேயே பெற்றோர்களின் அருகாமையில், பாதுகாப்பாக இருந்திருக்கிறோம்.  நம்முடைய திறமைகள் எல்லாம் நாம் வெளியே சென்ற பின்புதான் நமக்கே தெரிய ஆரம்பிக்கின்றன. அந்நேரம் நமக்கு ஏற்படும் உணர்வுகள் அனைத்தையும் இந்த சிறுமியிடம் பார்க்கும்பொழுது நம் இளம் பருவத்தை மீண்டும் பார்த்தது போலவே இருக்கிறது.  இவர் இயக்கிய திரைப்படங்களில் காணப்படும் இவரின் முத்திரையும் இதுவே.

        

தன் கனவு நகரத்தை நோக்கி கிகி போகும் காட்சி

தன் கனவு நகரத்தை நோக்கி கிகி போகும் காட்சி

                   இவருடைய படங்கள் ஜப்பானிய படங்கள் என்பதால் ஆங்கில மூலம் இருக்கிறதா என ஆரம்பத்தில் தேடினேன் அவரின் இரு படங்கள் பார்த்த பிறகு.  அவரின் படங்களை எந்த மொழியில் வேண்டுமானாலும் பார்க்கலாமென புரிந்துக் கொண்டேன். கலைக்கேது மொழிகள்!

7 comments April 18, 2009

Next Posts Previous Posts


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

December 2009
M T W T F S S
« Nov    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031