Posts filed under 'காமிக்ஸ்'

சித்திரங்களின் இரசிகன் I

        என்னுடைய பால்ய கால சிநேகிதனை நீண்ட காலத்திற்கு பின் சந்தித்தேன்.  உண்மையை சொல்ல வேண்டுமானால் அவன்தான் என்னை முதலில் அடையாளம் கண்டுக் கொண்டான்.  முற்றிலும் மாறி போயிருந்தான்.   பால் வடியும் அழகிய முகங்களுடன், ஸ்லிமான உடலுடன் ஊரைச் சுற்றி திரிந்த நாங்கள் நீண்ட காலத்திற்கு பின் சந்திக்கும் போது எனக்கு அவனை அடையாளம் தெரியாமல் போனது.  ஆனால் அவனோ நான் இன்னும் அப்படியே இருக்கிறேன் என்றும், அதனாலேயே என்னை அடையாளம் கண்டுக் கொண்டதாகவும் கூறினான்.

        பேச்சுக்கு அவனுடைய பெயர் ராஜா என்று வைத்துக் கொள்வோம்.  சிறு வயதில்    இருவருமே சித்திர கதை இரசிகர்கள்.  இராணி காமிக்ஸ் மற்றும் இலயன் காமிக்ஸ் போன்ற சித்திர கதைகளை படித்து அதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்போம்.   வகுப்பறைகளில் வாத்தியார் வரவில்லையென்றாலும், அது பற்றியே பேச்சு போகும். இரு சித்திர கதை கதாநாயகர்களை ஒப்பிடும்போது வாத்தியார் வந்தாலும் எங்களின் பேச்சு அதுபற்றிதான் இருக்கும்.   நீண்டகாலத்திற்கு பின் சந்தித்ததால் பேச நிறைய விஷயம் இருந்தன.

       பங்கு சந்தை குறித்து அறிய நிறைய ஆர்வம் காட்டினான்.  இணையத்தில் காமிக்ஸ் குறித்து நிறைய வலைப்பூக்கள் இருப்பது பற்றி நான் பேச ஆரம்பித்தபோது ஒருவித அசிரத்தையுடன் கேட்டுக் கொண்டான்.  இணைய தொடர்பு, வலைப்பூக்கள் என்ற தொழிற்நுட்ப காரணிகள் அவனுக்கு புரியாமல் இருக்கும் என்று முதலில் நினைத்தேன்.   பிறகு அவன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், அவனுடைய வீட்டில் இணைய தொடர்பும் (Broadband, of course) இருந்தது எனக்கு தெரிய வந்தது. 

        மதிய உணவிற்கு பிறகு அவனிடம் மீண்டும் காமிக்ஸ் பற்றிய வலைப்பூக்கள் பற்றி உற்சாகமாக பேச தொடங்கினேன்.  அப்போதும் அதே அசிரத்தை தான்.  இன்னும் காமிக்ஸ் படிக்கின்றாயா என நீண்ட நேரமாக அடக்கி வைத்திருந்த கேள்வியையும் கேட்டு விட்டேன்.   அதற்கு அவன் சொன்ன பதில் என்னை மிகவும் காயப்படுத்தியது. 

 ‘அதெல்லாம் சின்ன வயசில, விவரம் புரியாமல் செஞ்சது.  இப்ப நிறைய வேலைகள் வந்துடுச்சி.  இன்னும் சின்னப்புள்ள தனமா அதுலேயே இருந்தா எப்படி?’

      ‘அதுக்காக வேலை, வேலை அதைய கட்டிக் கிட்டு அழுவியா, என்ன?  பொழுது போக்குன்னு ஒன்னு வேண்டாமா?’

      ‘குமுதம், ஆனந்த விகடன், ஜுனியர் விகடன்னு பெரிய லெவலுக்கு போயாச்சி. நீ இன்னும் அதையேவா படிச்சிக்கிட்டு இருக்கே?’

      ‘என்ன பேசறா? நானும் இன்னும் பத்தாவதா படிச்சிக்கிட்டு இருக்கேன்?  என் வட்டமும் பெருசா ஆயிடுச்சி.  நீ சொன்னது அதுக்கும் மேல நிறைய பத்திரிக்கைகளை நானுந்தான் படிக்கிறேன்.  அதுக்கும் காமிக்ஸ் படிக்காம விடுதறதுக்கும் என்ன சம்பந்தம்?  எனக்கு அதுவும் பிடிக்கும், இதுவும் பிடிக்கும்.  உனக்கும் பிடிச்ச ஒன்னு தானே.  அப்புறம் படிக்க மாட்டேங்கறே.’

        இந்த உரையாடலை அவன் தொடர விரும்பவில்லை என்பது அவன் முகத்தில் தெளிவாக தெரிந்தது.  நானும் தொடர விரும்பவில்லை.  ஆனால் அவன் என் பால்ய வயது சிநேகிதன்.  அவன் நட்பை இதற்காகவெல்லாம் துண்டித்து கொள்ள முடியாது.  அவனுக்கும், எனக்கும் அப்போது சூப்பர் ஸ்டாரை பிடிக்கும்.  கொடுமை என்னவென்றால், எங்களுக்கு இப்போதும் அவரை பிடிக்கிறது.

      ஆனால் அவன் இழந்தது என்ன?  நான் இழக்காதது என்ன?   நானும் ஒரு நடுத்தர வாழ்க்கைதான் வாழ்கிறேன்.  வேலை, விடுமுறை  என்பது எனக்கும் உண்டு.   நாலு கழுதை வயசான்ன பிறகும் எனக்கு சித்திர கதைகள் இன்னும் பிடிக்கிறது. நானும் அவனும் ஏறக்குறைய ஒரே அலைவரிசையில்தான் சிந்தித்தோம். எந்த இடத்தில் அவன் பிரிந்தான் என்பதுதான் தெரியவில்லை.

            என்னுடைய சிறிய வயது  காமிக்ஸ் தொடர்பான நினைவுகளை (சுவாரஸ்யமானதை) மட்டும் வரிசைப்படி இல்லாமல் நினைவுக்கு வருவதையெல்லாம் இந்த தொடரில் எழுதலாம் என்றிருக்கிறேன்.  

          இந்த தொடரில் வரும் என் பால்ய கால நண்பர்களில் பலர் தற்போது என்ன நிலையில் உள்ளார்கள் என்பது தெரியாத நிலையில்  உண்மையான பெயர்களை பயன்படுத்த வேண்டாம் என்றே நினைக்கிறேன்.  அதற்காக பேரரசு போல் சனியன் சகடை, பெருச்சாளி  போன்ற பெயர்களை பயன்படுத்த மாட்டேன் என உத்திரவாதமும் அளிக்கிறேன்.

4 comments December 20, 2008

பொன்னில் ஒரு பிணம் – முத்து காமிக்ஸ் விமர்சனம்

      டாவின்சி கோட், ஹாரி பாட்டர் நாவல்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  உலகையே புரட்டிப் போட்ட நாவல்கள் அவை.  அவற்றில் என்னதான் எழுதியிருக்கிறது என்று பார்த்தால் டாவின்சி கோட் 400 பக்கங்களையும், ஹாரி பாட்டர் நாவல்களோ 2000 பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன.  அவற்றை படிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லையென்றும், இருந்தாலும் அத்தனை பக்கங்களையும் படிக்கும் அளவுக்கு பொறுமையும் இல்லையென நீங்கள் நினைத்து படிக்காமல் விட்டிருக்கலாம்.

     ஆனால் மனதில் அது போன்ற நாவல்களை யாரேனும் படிக்கையில் நாமும் அவ்வாறு படிக்க வேண்டுமென்ற ஆவல் எழும்.  அவர்கள் கூறும் பழங்கால பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் நடந்த பழங்கால வரலாற்று சான்றுகளை பற்றி அப்புத்தகங்களில் எழுதியிருப்பதை தீடிரென படிக்கையில் சற்று புரியாமல் திகைக்கக் கூடும்.   கவலையே படாதீர்கள், இன்னும் கற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.  முதலில் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கலாம். 

     மேற்சொன்ன நாவல்களில் சொல்லப்பட்டவாறு மிகவும் பழங்கால வரலாற்றை அடிப்படையாக கொண்டு முத்து காமிக்ஸின் ‘பொன்னில் ஒரு பிணம்’ என்ற சித்திர கதை படைக்கப்பட்டிருக்கிறது.  100 பக்கங்களுக்கு குறைவாகவே இருக்கிறது.  தமிழில் மிகவும் விறுவிறுப்புடன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

     100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் ஒரு தேவாலாயத்தை சீரமைக்கும் முயற்சியில் அதனுடைய பாதிரியார் மிக குறைந்த பணத்துடன் ஈடுபட்டிருக்கிறார்.  அப்போது அவருக்கு ஒரு பழங்கால குறியீடுகளுடன் கொண்ட ஒரு காகிதம் கிடைக்கிறது.  அதனை பற்றி அவர் தீவிரமான ஆராயும்போது, சில விஷயங்கள் அவருக்கு புலப்படுகிறது. பின்னர் அவர் அந்த தேவலாயத்தை சீரமைப்பதற்கு பணத்திற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தது மாறி, மிக பிரமாண்டமாய் அந்த தேவலாயத்தை விரிவுபடுத்துகிறார். 

       இப்போது நம் கதாநாயகன் தற்காலத்தில் அறிமுகமாகின்றார்.  அவர் ஒரு ஆராய்ச்சியாளர். 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளின்  தொடர்பான மர்மங்களை அவர் தற்சமயம் கிடைக்கும் தடயங்களை வைத்து எவ்வாறு உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றார் என்பது தான் கதை. 

      கிறிஸ்தவத்தின் ஆதித் தோற்றம், இரசவாதம் போன்ற வரலாற்று உண்மைகளுடையே பயணக்கின்றது இந்த சித்திரக்கதை. ஒரு இன மக்களை கொல்ல பிரென்ஞ் அரசாங்கம் உத்தரவிடும் போது அவர்கள் சொல்லுவதாக இச்சித்திர கதையில் சொல்லப்படும் ஒரு வாக்கியம் வரலாற்று உண்மை.

  “இந்த இன மக்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொல்வது?”

“உங்கள் கண்ணில் தென்படும் எல்லோரையும் கொல்லுங்கள் உண்மையான கிறித்துவன் சொர்க்கத்திற்கு போவான். மற்றவர்கள் நரகத்திற்குதான் செல்வார்கள்.”

    மேற்சொன்ன கதையை விரிவாக 400 பக்கங்களுக்கு ஒரு முழு நீள நாவலாக எழுதலாம். ஆனால் இக்கதை வெறும் 100 பக்கங்களுக்குள் அயல் நாட்டு சித்திரக் கதை என்ற போதிலும் கொஞ்சம் கூட பிசிறு தட்டாத தமிழ் மொழிபெயர்ப்பில் முத்து காமிக்ஸால் வெளியிடப்பட்டுள்ளது. 

      நம் நாட்டிலும் இது போன்ற மர்மங்களை வரலாறு விட்டு வைத்திருக்கிறது.  நம் ஊரில் உள்ள பழைய கோவில்களுக்கு போயிருக்கிறோம். 100 வருடங்களுக்கு மேற்பட்ட ஆலயங்களும் பல உள்ளன.  என்றாவது அந்த ஆலயங்கள் எவ்வாறு கட்டப்பட்டிருக்கும் என சிந்தித்திருக்கின்றோமா?  ஒவ்வொரு கோவிலுக்கும் இன்னொரு பக்கம் உண்டு. சிலவற்றில் இரத்தம் தோய்ந்த வரலாறும் இருக்கும்.  நம்மில் சிலருக்கு அந்த மறுபக்கம் கோவிலின் மடைப்பள்ளி என்பதாகதான் தெரியும் (கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் கோவிலில் உள்ள மடைப்பள்ளியில் ஒருமுறை சர்க்கரை பொங்கல் சாப்பிட்டிருக்கிறேன், வெகு நன்றாக இருந்தது என்பதை இந்த சமயத்தில் என்னால் மறைக்க முடியவில்லை)

    உதாரணத்திற்கு, முகலாயர் படையெடுப்பு தமிழ்நாட்டில் நடந்தபோது இங்கே உள்ள முக்கிய கோவில்களில் உள்ள புனித விக்ரகங்களையெல்லாம் அவர்கள் கையில் சிக்கிவிட கூடாது என மறைத்து விட்டார்கள்.  இது குறித்து சரியான தகவல்களை அவர்கள் விட்டுச் சென்றார்களா என்பது ஒரு வரலாற்று மர்மம். இவ்வாறு ஒவ்வொரு பழைமையான கோவிலுக்கும் ஒரு வரலாறு இருக்கும்.

     மற்றொன்று சந்திரகாந்த கல் (Philosopher’s Stone என்று அழைக்கப்படுவது வேறு, அது மேற்கத்திய உலகின் இரசவாதத்திற்கும், மரணமில்லா வாழ்விற்கும் தேவையான ஒரு பொருள்) என ஒரு பொருளை பற்றி நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.  சிலர் அது மாதிரி எதுவும் கிடையாது, போலி என்றும், சிலர் அது உண்மையென்றும் சில வரலாற்று ஆதாரங்களை காட்டுகின்றார்கள்.  அது ஒரு சுவாரஸ்யமான இன்னும் தெளிவுபடுத்தப்படாத வரலாறு மர்மம். 

    அடுத்ததாக, இரசவாதம்.  நம் சித்தர்கள் சர்வசாதாரணமாக செய்த வித்தை என நாடோடி கதைகளில் இது குறிப்பிடப்படுகின்றன.  சில வகையான மூலிகைகளைக் கொண்டு அவர்கள் இரசவாதம் செய்ததாக சில ஒலைச்சுவடிகளில் இருப்பதாகவும், சுவடிகள் இதுவரை முழுவதும் கிடைக்கவில்லை என்றும் வதந்திகள் இருக்கின்றன.  இது குறித்தும் விரிவான ஆராய்ச்சி நம் நாட்டில் செய்யப்படவில்லை.  ஒரு கட்டுக்கதை என்பதாக அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

     இது போன்று நிறைய வரலாற்று மர்மங்கள் நம் நாட்டிலும் உள்ளது.  அவைகள் சரியான முறையில் பதியப்பட வில்லை.  காலம் இன்னும் கடந்துவிடவில்லை.  இது குறித்து நம்மிடமும் விழிப்புணர்ச்சி வரவேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டையில் பார்த்தால் வெறும் காதல் வார்த்தைகளை கல்வெட்டுகளாக பொறித்திருக்கின்றார்கள்.

     அன்றாட வாழ்விலிருந்து சற்று விலகி சிந்திக்க இது போன்ற வரலாற்று மர்மங்கள் உதவும். வாழ்க்கையின் மீது ஈர்ப்பு வரவும் இவைகள் உதவும் என்பது ஒரு பிரபல கவிஞரின் (நான்தான்) கூற்று.

            ‘பொன்னில் ஒரு பிணம்’ என்ற தலைப்பில் ரூ.10- மதிப்பில் ஒரு சித்திர கதையாக முத்து காமிக்ஸ் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கின்றார்கள்.  எல்லா ஊர்களிலும் கிடைக்குமா என தெரியவில்லை.  கிடைப்பதற்கு சில நாட்கள் ஆகுமென நினைக்கிறேன்.  முதலீட்டாளர்களுக்கு இதில் இரட்டை இலாபங்கள் உள்ளன.  ஒன்று இப்புத்தகத்தை படிப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் மற்றும் இரண்டாவது இதே புத்தகத்தை ஐந்தாண்டுகள் கழித்து நீங்கள் விற்றால் உங்களுக்கு குறைந்தது மூன்று மடங்காவது விலை போகும்.  1985 (சரியாக வருடம் தெரியவில்லை) அன்று வெளிவந்த ரூ.10 மதிப்பில் வெளிவந்த ஒரு சித்திரகதை புத்தகம் தற்போதைய மதிப்பில் ரூ.2000- போகும். கிட்டதட்ட 200 மடங்கு அதிகமாக பிரீமியமாக விற்பனை செய்யப்படுகிறது.  அதுவும் லேசில் கிடைத்து விடாது.

     காமிக்ஸ் பிரியர்கள் இதனை தவறாமல் வாங்கி படிப்பார்கள்.  சித்திரக் கதைக்கு புதியவர்கள் ஒருமுறை வாங்கி படித்து பாருங்கள்.  ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு நான் உத்திரவாதம் தருகிறேன்.

3 comments October 31, 2008

Next Posts


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

December 2009
M T W T F S S
« Nov    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031