புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி?
January 27, 2011 at 9:09 pm 10 comments
சென்னை புத்தகக் கண்காட்சியின் மகத்தான, மாபெரும், அட்டகாசமான வெற்றிக்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டுமென்று நிறைய பேர் நினைக்கின்றார்கள். ஆனால் எவ்வாறு நடத்துவது அது தொடர்பான கேள்விகளை யாரிடம் கேட்பது என தயக்கமும் அவர்களிடத்தில் இருக்கிறது. சில முக்கிய கேள்விகளுக்கு பதில்கள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.
முதலில் எதற்காக புத்தக கண்காட்சியை நடத்த வேண்டும்?
புத்தகங்களை விற்பதற்குதான்.
அதற்காக கண்காட்சி என்று தனியே நடத்த வேண்டுமா?
வீட்டு உபயோகத்திற்கு தேவையில்லாத பொருட்களை மக்கள் கண்காட்சிகளில்தான் வாங்குகிறார்கள் என்பதால் கண்காட்சி நடத்த வேண்டியது அவசியமே.
கண்காட்சிக்கு பெயர்?
கண்டிப்பாக வைக்க வேண்டும். பெயரின் முடிவில் கண்காட்சி என முடிய வேண்டும். ஆரம்பத்தில் எந்த நகரத்தில் நடத்தப்படுகின்றதோ அந்த நகரத்தின் பெயரை வைக்கலாம். இவற்றின் நடுவில் கண்காட்சியின் முக்கிய நோக்கத்தை புகுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு, சென்னை புத்தக கண்காட்சி, மதுரை புத்தக கண்காட்சி, கோவில்பட்டி வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி.
இடத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
மக்கள் தொகை நெரிசலான, போக்குவரத்திற்கு சற்றும் வசதியில்லாத இடத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் கண்காட்சிக்கு கவர்ச்சி.
தேர்ந்தெடுத்த இடத்தை சுற்றி டிக்கெட் கவுண்டர்கள் மட்டும் அமைக்க இடம் விட்டு முழு சுவரெழுப்பி, பட்டிப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
வெளிப்புற அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?
கண்காட்சிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை உடன் நிறுத்தி விட்டு வருமாறு/செல்லுமாறு எக்காரணம் கொண்டும் வெளிப்புற அமைப்பு இருந்துவிட கூடாது.
வாகனங்களை நிறுத்த உதவி செய்யும் சீருடை அணிந்த ஆட்கள் கன கம்பீரமாக கண்காட்சியின் வாயிலில் இருக்க வேண்டும். அவர்கள் அந்த ஊரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்களுக்கு “கார் அங்கிட்டு, பைக் இஞ்சே” என சொல்லத் தெரிந்தாலே போதுமானது. மீதியை கண்காட்சிக்கு வருபவர்கள் பார்த்துக் கொள்வார்கள். டபிள் பார்க் நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று.
200 அடி இடைவெளி விட்டு மூன்று அல்லது நான்கு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே செயல்பட வேண்டும். வருபவர்கள் சற்று குழம்பி தேடி அலைய வைத்து டிக்கெட் வாங்க வைக்க வேண்டும். இது தங்கள் வாகனங்களை நிறுத்த அலைந்து கொலைவெறியுடன் உள்ளே வருபவர்களின் மனநிலையை முற்றிலும் மாற்றி விடும்.
கண்காட்சிக்கு வெளியே பலூன், பப்பரமிண்ட், துப்பாக்கி சுடுதல், ஆதிவாசிகளின் நாட்டு மூலிகை, பால்கோவா, பப்பாளி பழத்தை அதிகமாக போட்டு செய்யப்படும் பழ சாலட், கைரேகை, கம்யூட்டர் ஜோசியம் போன்ற கடைகள் தானாகவே உருவாகிவிடும். இதற்காக அமைப்பாளர்கள் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கத் தேவையில்லை.
உடுமபு தைலம் விற்பவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்காதீர்கள்.
கழிப்பிடங்கள் அவசியமா?
கழிப்பிடங்கள் இடத்தை வீணாக அடைப்பவை. மேலும் அவை இலவசம் என்பதால் பைசா தேறாது. கண்காட்சி காலை 11 மணியளவில்தான் ஆரம்பிக்கிறது. அதுவோ காலைக்கடன். அதனால் கழிப்பிடங்கள் அவசியமில்லை.
ஆனால் சிறுநீர் கழிப்பான்களை அமைக்க வேண்டும். அதற்கு ஒரு கணித சூத்திரம் உள்ளது. கண்காட்சிக்கு ஒரு நாளில் வரும் மக்களின் மொத்த எண்ணிக்கைக்கு மூன்று ஸ்கொயர் ரூட் எடுத்து வரும் தொகையில் சிறுநீர் கழிப்பான்களை வைக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, கண்காட்சிக்கு ஒரு நாளில் ஒரு இலட்சம் பேர் வருகிறார்கள் என்றால், மூன்று ஸ்கொயர் ரூட்களுக்கு பிறகு 4.21 என விடை வருகிறது. மாநகராட்சிகளில் கண்காட்சி நடப்பதாக இருந்தால் ஐந்து என ஆக்கிக் கொள்ளலாம்.
கேன்டீன் பக்கம் வைப்பதே மரபு.
கலை நிகழ்ச்சிகள்?
பட்டி மன்றம், சொற்பொழிவுகள் வைப்பதே மரபு. நாட்டுப்புற குத்து நடனத்தில் கதக்களியின் ஆதிக்கம் இருக்கின்றதா/இல்லையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் வைக்கலாம். யாரை வேண்டுமானாலும் பேச கூப்பிடலாம். கூட்டம் இருந்தாலும், மக்கள் அங்கே வெறித்த பார்வையுடன்தான் அமர்ந்து இருப்பார்கள். “தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியே அல்ல, சீனாவின் அங்கம்” என்று சொன்னாலும் எந்த சலனமும் இருக்காது.
கண்காட்சிக்கு உள்ளே?
அதை பதிப்பாளர்கள் பார்ததுக் கொள்வார்கள். ஒருவித புழுக்கமான நிலை நிலவும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இலக்கிய சூழ்நிலை அது.
நடந்து முடிந்த சென்னைப் புத்தக கண்காட்சியில் உங்களை கவர்ந்த அம்சங்கள்?
அரங்கம் முழுவதும் மேடு பள்ளமுமான கார்ப்பெட் போட்டு அதில் மக்கள் விழுந்தெழுந்தது நல்ல நகைச்சுவை காட்சி. இந்த கண்காட்சிக்கு வந்த மேற்க்கத்தியர்கள் கண்காட்சியின் உள்ளே விற்கப்படும் காப்பியினை குடிக்கும்போது அவர்களின் முகத்தை பார்க்க வேண்டுமே! ஹாஹாஹாஹாஹஹா! ஜெய்ஹிந்த்!
1.
shankar visvalingam | January 28, 2011 at 2:08 am
நண்பரே.. //உடுமபு தைலம் விற்பவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்காதீர்கள்.// கலங்குகிறேன், கண்ணீர் வடிக்கிறேன்
2.
shankar visvalingam | January 28, 2011 at 2:19 am
// கேன்டீன் பக்கம் வைப்பதே மரபு.// சமையல் வாசம் மூக்கில் ஒட்டை போட வேண்டாமா
சுக்கு காப்பியையா குறை கூறுகிறீர்கள்! இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
அருமையான ஆலோசனைகள். இதனை பின்பற்றினால் சக்ஸஸ், சக்ஸஸ் என்று தேவர் படத்தில் வருவதுபோல் கூறலாம். இல்லாவிடில் தினந்தோறும், சனங்கள் வரவில்லையே வந்தாலும் புத்தகங்கள் – அவருடையதை தவிர- வாங்கவில்லையே என பதிவுகளில் புலம்புவதை தவிர வேறு வழி இல்லை.
3.
Anonymous | January 28, 2011 at 2:56 pm
good post
4.
sharehunter | January 28, 2011 at 5:07 pm
உடும்பின் புகழ் பிரான்ஸிலும் பரவியிருக்கிறதே என ஆச்சரியப்படுகிறேன்.
5.
Rafiq Raja | January 28, 2011 at 10:59 pm
ஹா ஹா…. புத்தக கண்காட்சி வைக்கும் ரகசியங்களை இப்படி புட்டு புட்டு வைத்து விட்டீர்களே, பங்கு வேட்டையரே. தமிழ் புத்தக கண்காட்சி அமைப்பினரின் தங்களின் காப்பிரைட் முறையை இப்படி பகிறங்கபடுத்தியதற்கு, உங்கள் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர எண்ணி கொண்டிருக்கிறார்கலாம்.
ஜாக்கிரதை
6.
பின்னோக்கி | January 29, 2011 at 9:45 pm
மிக அழகான முறையில் புத்தகக்காட்சியின் குறைப்பாட்டை நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள். அருமை.
7.
sharehunter | January 29, 2011 at 10:33 pm
@rafiq,
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது கடமை……………..அது கடமை.
@pinnokki
இந்த பதிவையே அடுத்த வருடமும் மீள் பதிவாக இட உத்தேசித்துள்ளேன். அப்போதும் இது நகைச்சுவையாகவே இருக்கும்.
8.
sharehunter | January 29, 2011 at 11:03 pm
@shankar,
சென்னை புத்தக கண்காட்சி முடிந்த பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த கழிப்பிடங்களை அகற்றி விட்டார்களாம். சரித்திர முக்கியத்துவம் பெற்ற இடங்களை பாதுகாப்பது குறித்து யாரும் பேசக்காணோம். முதன் முதலில் அங்கே சென்ற போது கிட்டதட்ட நூறு வருடங்களுக்கு முந்தைய சென்னையில் இருப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.
9.
தமிழ்த்தோட்டம் | February 27, 2011 at 6:00 pm
பகிர்வுக்கு நன்றி
10.
Kathir | August 8, 2011 at 9:31 pm
ungal eluthu nadai arumai. niraiya eluthungal.