பங்கு சந்தை 2010
January 3, 2010 at 7:18 pm 5 comments
சென்ற வருடத்து சராசரி ஹிட்டுகள் 120 என வருகின்றது. இது பெருமையாக இல்லாமல் மெல்லிய குற்ற மனப்பான்மையை எனக்கு உருவாக்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக பங்கு சந்தை குறித்து எதுவும் எழுதாத நிலையிலும், தொடர்ந்து இத்தளத்திற்கு வந்து புரிகின்றது போல் எழுதுகின்றேனா என நிறைய பேர் வந்து பார்த்திருக்கிறீர்கள்.
தினசரி சந்தை பற்றிய கருத்துக்களை இவ்வருடத்தின் முதல் சில மாதங்கள் தொடர்ந்து எழுதி வந்திருக்கின்றேன். ஆனால் ஒரு கட்டத்தில் அது சலிப்பு தட்டிவிட்டது. சந்தையின் டெக்னிகல் வரைபடங்களை கிட்ட வைத்து பார்க்கும்போது தூர தென்படுகின்ற மாற்றங்கள் புலப்படாமலே போய்விட்டன. உதாரணத்திற்கு, இந்திய-சீன வியாபார ஒப்பந்தங்கள். சீனாவை எப்போதும் எதிரி நாடாகவே நினைத்து வந்திருக்கிறோம். இராணுவ ரீதியிலும், வியாபார ரீதியிலும் கூட. இந்தி-சீனி பாய்-பாய் என ஏமாற்றப்பட்ட வரலாற்றையே நினைத்துக் கொண்டிராமல் இப்போது இந்தி-சீனி ஹாய்-ஹாய் என்ற மாற்றத்திற்கு வந்திருக்கிறோம்.
இதனால் என்ன பெரிய மாற்றம் வரும்? குறுகிய காலத்தில் எதுவும் பெருத்த அளவில் மாற்றம் இராது. உலகின் மிக வலுவான வாடிக்கையாளர் சந்தையை கொண்டுள்ள நாடுகள் இணைவது மேற்கத்திய பொருளாதாரத்திற்கு அவ்வளவாக பிடிக்காத போதிலும், இந்த மாற்றம் நீண்ட கால ரீதியில் மிகுந்த வலுவான பொருளாதார சுபிட்சத்திற்கு அடிகோலும் என்றே நினைக்க தோன்றுகிறது.
மற்றபடி, சந்தை மட்டுமே வாழ்க்கை என்றிராமல் பிடித்த சில விஷயங்களை பற்றியும் எழுதியிருக்கிறேன். இனி பங்கு சந்தை தொடர்பாக தினமும் எழுதாவிட்டாலும், சில முக்கிய நிகழ்ச்சிகளை பற்றி மீண்டும் எழுதலாம் என நினைக்கிறேன்.
முதலில் நமது பங்கு சந்தையை 2010-ல் நிர்ணயிக்கப் போகும் சில முக்கிய காரணிகளை பார்க்கலாம்.
நமது சந்தையும் கடந்த சில மாதங்களாக 400 புள்ளிகளில் சிறிய மேடு பள்ளங்களுடன் பயணித்து வந்திருக்கிறது. 5200 என்ற நிலையை மெல்ல மெல்ல கடக்க முயன்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல் மூன்று மாதங்களில் சந்தை எவ்வாறு இருக்குமென என பல்வேறு நிபுணர்கள் பல்வேறு விதமான அலசலையும் கொடுத்துள்ளார்கள்.
முதலில், பண வீக்கம். பண ஒட்டத்தை ரிசர்வ் வங்கி சற்று அதிகமாகவே ஒட அனுமதித்துவிட்டது. இறங்கியிருந்த ரியல் எஸ்டேட் மீண்டும் மெள்ள மெள்ள மேலேற ஆரம்பித்துவிட்டது. அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையையும் மேலேற்றி விட்டிருக்கிறது. பண புழக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் சாட்டையை சொடுக்குமென எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்டேட், வங்கி மற்றும் எப் எம் சி ஜி துறைகள் பாதிப்படைய வாய்ப்புண்டு.
இரண்டாவது, பொருளாதார ஊக்கங்கள். நலிந்து பொருளாதாரம் மேம்பட தேவையான பொருளாதார ஊக்கங்கள் கொடுத்தாகிவிட்டது என நிதி அமைச்சம் தற்போது யோசிப்பதால், வருகின்ற பட்ஜெட்டில் சில சலுகைகள் இரத்து செய்ய வாய்ப்புண்டு. இது குறித்த புரளிகளே சந்தையை பிப்ரவரி மாதத்தில் பெரிய அளவில் ஆட்டுவிக்கும்.
மூன்றாவது, பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த மூன்றாவது காலாண்டு அறிக்கையின்போது லாபத்தை உறுதி செய்து கொள்ள வாய்ப்புகள் பெருத்த அளவில் இருக்கின்றன.
ஆக முதல் மூன்று மாதங்கள் சந்தையானது பெருத்த அளவில் ஏறாமல் இருக்க தேவையான அளவிற்கு தடைக்கற்கள் இருக்கின்றன. முதலீட்டு உத்திகளை அதற்கேற்ப மாற்றிக் கொள்வது குறித்து யோசியுங்கள்.
இப்புத்தாண்டில் புத்தக கண்காட்சிகளில் நிறைய முதலீடு செய்திருக்கிறேன். புத்தகங்கள் வாங்குவதை முதலீடாகவே பார்க்கிறேன். படித்த புத்தகங்கள் குறித்தும் பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறேன்.
நாளை நமது பங்கு சந்தையானது புதிய கால அட்டவணைப்படி துவங்குகிறது.
I Wish You Happy Investing in 2010!
Entry filed under: Hunter's Mind, Market Analysis. Tags: .

1.
shankar visvalingam | January 3, 2010 at 7:43 pm
நண்பர்கள் அனைவரிற்கும் இது வளம் சேர்க்கும் ஆண்டாக அமையட்டும்.
புத்தகங்கள் குறித்த உங்கள் எழுத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
2.
ஒலக காமிக்ஸ் ரசிகன் | January 3, 2010 at 8:11 pm
//இப்புத்தாண்டில் புத்தக கண்காட்சிகளில் நிறைய முதலீடு செய்திருக்கிறேன். புத்தகங்கள் வாங்குவதை முதலீடாகவே பார்க்கிறேன். படித்த புத்தகங்கள் குறித்தும் பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறேன்.//
எப்போது வந்தீர்கள் நண்பரே? சென்ற ஆண்டு வந்தபோதே சந்திக்க முடியவில்லை. இந்த முறையும் அவ்வளவுதானா?
3.
sharehunter | January 3, 2010 at 9:42 pm
ஒலக காமிக்ஸ் ரசிகன்
பெரும்பாலான புத்தகங்களை புதுச்சேரி புத்தக கண்காட்சியிலே வாங்கிவிட்டேன். சென்னை புத்தக கண்காட்சிக்கு வருவதாக உத்தேசமில்லை.
ஆனால் மிகவும் எதிர்பார்த்த புத்தகமான கொற்கை கிடைக்காததால் ஒரு உந்துதலில் ஏற்ப்பட்ட பயணமாக மாறிவிட்டது.
4.
sharehunter | January 3, 2010 at 9:43 pm
ஷங்கர்
எனக்கு படித்து முடித்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிவிடுகிறேன்.
5.
Rafiq Raja | January 5, 2010 at 10:31 pm
ஒருவழியாக பதிவொன்றை இட்டு விட்டீர்களா… புதிய வருடத்தில் உங்கள் பாணியில் புத்தகங்களின் விமர்சனங்களை படிக்க ஆர்வமுடன் இருக்கிறேன். பங்கு சந்தை செய்திகளை படிக்கவரும் நம் நண்பர்கள், உங்களிடம் அந்த எழுத்துகளையும் படிக்க அர்வமாகவே இருப்பார்கள் என்று எனக்கு படுகிறது.
புதுச்சேரி, சென்னை புத்தக கண்காட்சியில் நீங்கள் செய்த முதலீட்டிற்கு, கிடைக்கும் அனுபவம் என்ற வருமானத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்
நண்பர்கள் அனைருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். சந்தையில் கையை சுட்டுக் கொள்ளாமல், மேன்மேலும் வளங்களை பெருக்க வேண்டிகொள்வோம்.