Archive for April 17th, 2009
இரகசிய உரையாடல்
இந்த வலைப்பூவை படிப்பவர்களில் சிலர் கடந்த தினத்தன்று ஒரு பிரபலமான வலைத்தளத்தில் கதைத்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட உரையாடல் தொகுப்பு. இதை அனுப்பி வைத்தவர் தன் பெயரை இரகசியமாக வைத்திருக்கும்படி கூறியிருக்கிறார்.
(ஜாபர், விசுரேஷ் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்) அப்போது வருகிறார் ஜிகார்த்தி.
ஜிகார்த்தி : வணக்கம், நண்பர்களே. உங்கள் கருத்துகளை ஷேர் ஹண்டர் வலைப்பூவில் பார்த்திருக்கிறேன். நலம்தானே?
ஜாபர் : வணக்கம், கார்த்தி அவர்களே. யாவரும் நலமே.
ஜிகார்த்தி : இந்த வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறீர்களா?
ஜாபர் : ஆம். நெடுநாட்களாக படித்து வருகிறேன். என்றாவது ஒருநாளாவது புரியும் மாதிரி எழுதமாட்டாரா என்பதுதான் என் அவா.
விசுரேஷ் : நடுநடுவில் சினிமா விமர்சனம், கதை, கவிதை போன்றவகைளெல்லாம் எழுதுகிறார். சமயத்தில் எது கதை, எது பங்கு சந்தை கருத்துகள் என்பதே புரியமாட்டேங்கிறது.
ஜாபர் : அவரிடம் நாசுக்காக இதைப் பற்றி நாம் சொல்ல வேண்டும். மென்மையாக, அவர் தவறாக நினைக்கா வண்ணம் இதைப் பற்றி எழுதவேண்டும்.
அனானி : இந்த வரி எப்படியிருக்கிறது என்று பாருங்கள். ‘உனக்கு தெரிஞ்சதை மட்டும் எழுது’. எப்டி?
ஜிகார்த்தி : ஏங்க நீங்க யாருங்க?
விசுரேஷ் : அவரை ப்யூச்சர்ஸ் பற்றி எழுத சொல்லலாம்.
ஜாபர் : நல்ல ஐடியா. நீங்க என்ன நினைக்கிறீங்க கார்த்தி?
ஜிகார்த்தி : அவருக்கு ப்யூச்சர்ஸ் பற்றி ஒன்னும் தெரியாதுங்க.
ஜாபர், விசுரேஷ் (அதிர்ச்சியுடன்) : என்னங்க சொல்றீங்க?
ஜிகார்த்தி : ஆமாங்க. ஒரு தபா அவர கேட்டேன், நிப்டி ப்யூச்சர்ஸ் எப்டி இருக்கும்னு. அவரு சொன்னாரு. இப்ப ஒன்னும் சொல்ல முடியாது. ஒரு வருஷம் கழிச்சு நல்லா இருக்கும்னு.
ஜாபர் : உங்கள் கருத்தை அவர் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் அல்லவா?
ஜிகார்த்தி : நானும் அப்டிதான் நினைச்சு ஆப்ஷன் பத்தி கேட்டதற்கு அவர் சாய்ஸ் கொடுங்கன்னு சொல்றாரு. புட் வாங்கலாமா கேட்டதற்கு பட்டுன்னு புட் வாங்குங்கன்னு கால் கொடுக்க மாட்டேங்கிறாரு.
ஜிகார்த்தி : ஆனா ஒன்னுங்க. அவரால சில நேரத்துல நஷ்டத்துலந்து தப்பிச்சுருக்கேங்க.
விசுரேஷ் (ஆச்சரியத்துடன்) : அப்படியா? எப்டி?
ஜிகார்த்தி : சிலசமயம் அவரு என்னா எழுதியிருக்காருன்னு படிச்சவுடனே தலை அப்டியே கிர்ருன்னு ஆயிடும். அந்த சமயத்துல கொஞ்சம் ரிலாக்ஸா இருந்துட்டு வந்துட்டு திரும்பறத்துக்குள்ளே சந்தை முடிஞ்சு போயிடும். இந்த மாதிரி நிறைய சம்பவங்கள்.
விசுரேஷ் : அவரு ஏன் பங்குகள் வாங்க பரிந்துரைகள் செய்ய மாட்டேங்கறாரு?
அனானி : தெரிஞ்சாதானே?
ஜாபர் : ஒருவேளை அனானி சொல்ற மாதிரி அவருக்கு தெரிஞ்சத மட்டும் எழுத சொல்லலாமா?
அனானி: எழுதறத நிறுத்திட்டாருன்னா?
(அனைவரும்) : எதுக்கு வம்பு? எதுவும் பேசமா காலையிலே அவரு எழுதியிருக்கிறத படிச்சுட்டு சுவத்துல நாலு தடவை முட்டிகிட்டு மார்க்கெட் போயிடலாம்.
Happy weekend, friends.
12 comments April 17, 2009
17-04-2009
முதல்கட்ட வாக்குபதிவிற்கு சந்தை 100 புள்ளிகளை இழந்திருக்கிறது. உலக சந்தைகள் ஏற்றத்துடன் இருப்பினும் நமது சந்தை புள்ளிகளை இழந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்றே எண்ணுகிறேன்.
இன்றைய சந்தையிலும் ஆரம்பத்தில் இலாபத்தை உறுதி செய்ய ஆரம்பிப்பார்கள். இறங்கிய வங்கி குறியீட்டானது ஒரளவு ஏறிவிட்டது. அடுத்தது, வங்கி பங்குகளை ஷார்ட் செய்ய ஆரம்பிப்பார்கள். அதுவே, சந்தை இறக்கத்திற்கு அறிகுறி என கருதலாம்.
இதற்கு முன் சந்தை இவ்வளவு முதல் இவ்வளவு வரை ஆடும் என எழுதியிருக்கிறேன். இந்த புதிய எழுச்சியில் அவ்வாறு எழுதுவதில்லை. ஏனென்றால் சந்தை ஆட்டுவிக்கப்படும்போது எவ்விதி டெக்னிகல் விவரங்களும் எடுபடாது. ஒரு சில சக்திகளின் பிடிக்குள் சந்தை சிக்கிவிடும்.
ஒன்று மட்டும் உறுதி. அடுத்து வரும் மத்திய அரசாங்கம் ஒரு நல்ல திறமையான, தைரியமான நிதி அமைச்சரை நியமிக்கும் பட்சத்தில் அடுத்த ஐந்து வருடத்தில் நமது நாடு முன்னணி பொருளாதார நிலையை பெற்றுவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நல்ல, திறமையான, தைரியமான நிதி அமைச்சர். இதில் சந்தேகம் இருக்கிறது.
Read Disclaimer.
Good Morning to you all!
2 comments April 17, 2009