நான் கடவுள் – திரை விமர்சனம்
February 7, 2009
முதல் வாரமே தமிழ் படம் பார்க்கக் கூடாது என புதிய வருட தீர்மானம் நிறைவேற்றியிருந்தேன். தமிழக அரசு நிறைவேற்றும் தீர்மானங்கள் போல் விதி விலக்குகள் கொடுக்கலாம் என முடிவு செய்து பாலாவின் நான் கடவுள் படம் இன்று திரையரங்கத்திற்கு சென்று பார்த்தேன்.
நிறைய எதிர்பார்ப்புகளுடன் சென்றதால், படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது ஒருவித ஏமாற்றமே இருந்தது. நிறைய பேருக்கு அப்படிதான் இருக்குமென நம்புகிறேன். படம் பார்த்து விட்டு நிறைய நேரம் யோசிக்கும்போது இன்னும் அதிகம் ஏமாற்றமாக இருக்கிறது.
படத்தின் கதை. ஜெயமோகனின் நாவலான ஏழாவது உலகத்தின் கதை மாந்தர்களுடன் ஒரு அகோரி வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? அதுதான் கதை. பிச்சைகாரர்களின் இருண்ட உலகத்தை பற்றி தமிழில் வெளிவரும் முதல் படம் இதுவாகதான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் வெகுஜன அம்சங்களுடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலா.
இந்த திரைப்படம் வருவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களால் படத்தின் தொகுப்பில் தளர்வுகள் நிறைய தென்படுகின்றன. குறிப்பாக படத்தின் ஆரம்ப காட்சிகள் மற்றும் இறுதிக் காட்சிகள். ஆர்யாவை அகோரி சாமியார் வேடத்தில் ஒன்ற வைக்க நிறைய முயற்சிகளை இயக்குநரும் நடிகரும் முயன்றிருக்கிறார்கள். அந்த உழைப்பு நன்றாகவே தெரிகிறது. ஆர்யா தொழில்முறை நடிகர். நிறைய உழைத்திருக்கிறார். ஆனால் இத்திரைப்படத்தில் மற்ற சக பாத்திரங்கள் மிக அநாயசமாக நடித்திருக்கிறார்கள். ரூத்ரனின் அப்பாவாக வரும் பாத்திரத்தை தவிர. இந்த பெருமையெல்லாம் இயக்குநருக்குதான் செல்ல வேண்டும்.
படத்தின் வசனங்களை (அனைத்தையுமா என்று கேட்டால் கேள்விக்குறிதான்) எழுதியவர் ஜெயமோகன். நறுக்கு தெறித்த, வட்டார மொழியில் உரையாடல்கள் வந்திருக்கின்றன. சிறந்த வசனத்திற்கான விருது கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டாம், ஜெயமோகன். இன்னும் வில்லு மற்றும் சக்கரக்கட்டி படத்தின் வசனங்கள் தான் முதல் மற்றும் இரண்டாமிடத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
இதர கதை நாயகர்களில் மனதை கவர்பவர்கள். கவிஞர் விக்கிரமாதித்யன். மிக சிறப்பான உடலசைவு. உங்கள் கவிதையை போல நடிப்பும் நன்றாக உள்ளது. குருவி ரொட்டி சாப்பிடும் குழந்தை. அதன் பார்வையை படமாக்கிய ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சன். அட்டகாசமாக சிரிக்கும் அந்த சிறுவன். மொட்டைத் தலை குரூர வில்லன். வெட்க சிரிப்பு சிரிக்கும் எருக்கு. கண்பார்வை இல்லாத பூஜா. இன்னும் சில பாத்திரங்கள் விட்டு போயிருக்கலாம். விளிம்பு நிலை மனிதர்களாக இவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்புத் திறன் மிகச் சிறப்பாக உள்ளது. இந்த படத்தில் நடித்த பிறகு இவர்களின் வாழ்க்கை முறை சீராக இயக்குநர் பாலா உதவியிருப்பார். இதுவரை அதை வெளியில் சொல்லவில்லையென்றாலும் அதற்கான பாராட்டையும் அவருக்கு அளித்தாக வேண்டும்.
உலகப் புகழ் பெற்ற இந்திய சென்சாருக்கு பயந்து நிறைய காட்சிகளை (உதாரணத்திற்கு அகோரியின் லஞ்ச்) இலைமறை காயாக காட்டியிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை காணும் கலைக் கண்களில் எத்தனை ஜதை கண்களுக்கு இலையை விலக்கி பார்த்து புரிந்துக் கொள்ள போகிறது என தெரியவில்லை. இந்த படத்தை பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் இந்த படத்தை பற்றிய சலிப்பினையே ஏற்படுத்தும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
பாலா, இளையராஜா,ஆர்தர் ஏ வில்சன், ஜெயமோகன் இவர்களின் கூட்டு முயற்சியில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் பார்த்த பிறகு நமக்கு ஏற்படும் உணர்வுகளால் மனம் கனத்து ஒருவித சலிப்புடன் வெளிவர நேரிடும். இதனால் இத்திரைப்படம் வணிக ரீதியாக பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனினும் இது போன்ற புதிய களனை தேர்ந்தெடுத்து, மிக நேர்த்தியான கதை மாந்தர்களை உலவ விட்டதற்காக இத்திரைப்படத்தினை கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தே ஆக வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வில்லு 2க்கு தயாராகுங்கள்.
பின்னிணைப்புகள் :
கதை நாயகர்களில் ஒருவரான அந்த அழகிய பாப்பாவை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருப்பதை படிக்க மதுபாலா.
‘நான் கடவுள்’ படத்தின் நீளம் எதற்காகவோ வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. காசியில் எடுக்கப்பட்ட பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிகிறேன். இந்த படம் தயாரிப்பாளரால் டிவிடியாக வரும்போது நீக்கப்பட்ட பல காட்சிகளை இணைத்தால் ஒருவேளை இந்த படம் தெரிவிக்க விரும்பும் உணர்ச்சிகளை பார்வையாளர்கள் புரிந்து கொள்ள இயலலாம்.
நடிகர் ஆர்யா இந்த படத்திற்கு முன் ஒரு Boyish Hero ஆக அறியபட்டார். இந்த படம் அவருக்கு ஒரு மெச்சூரிட்டியை ஏற்படுத்திக் கொடுக்குமென்றால், அந்த மூன்று வருடங்கள் ஒன்றும் அவருக்கு பொருட்டில்லை என நினைக்கிறேன். இதற்கு அவரின் அடுத்த திரைப் படத்தை பார்க்கும்போதுதான் தெரியும்.
இத்திரைப்படத்தில் வரும் காட்சிகளில் மறைபொருள் பற்றி முழுக்க எழுதினால் பார்வையாளருக்கு நிறைய சலிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அக்காட்சி வருவதற்கு முன்னே அவரின் மனது ஒருவித பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கும். அட, ஜெயமோகன் ஒரு இந்துத்துவ வாதியப்பா. இது போன்ற தவறான அபிப்பிராயங்களை உருவாக்கி விடக்கூடும்.
விமர்சனம் எழுதும் திரைப்படத்தினை உலகத் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு தப்பிட்டு எழுதுவது தற்சமயம் ஒரு புதிய வகை திரை விமர்சனம் எழுதும் வகையாக இருக்கிறது. அதனை தவிர்த்து இருக்கிறேன்.
Entry Filed under: திரை விமர்சனம். .
15 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
RAM | February 7, 2009 at 11:44 pm
எல்லாரும் நல்ல படம் அப்டின்னு தான் பதிவு போடுகிறார்கள்…திரைக்குச்சென்றூ படம் பார்பவர்கள் கவனிக்கவும்…!!! நல்ல பதிவு….!!!
2.
SHANKAR VISVALINGAM | February 8, 2009 at 12:37 am
நண்பரே,
ஏழாவது உலகம் நாவல் படித்திருக்கிறேன்,பண்டாரமும், அவர்கள் உதவியாளர்களும், பிச்சைக்காரர்களும் இன்னமும் நினைவில் இருக்கிறார்கள். யானைக்கால் நோய் வந்த விதையுடைய அந்த மலையாள பிச்சைக்காரன் பாத்திரம் இன்று நினைத்தாலும் சிரிக்க வைக்கிறது. குரூரமான உலகமொன்றை எங்கள் உலகத்தில் வைத்துக்கொண்டு கண்மூடிகளாகத்தானே இருக்கிறோம். ஜெயமோகன் அப்படிகளில் படுத்துறங்கியவர் என்பதினால் அந்த சிறப்பான நாவல் உருவாகியது.
நான் கடவுள் படத்தினை நான் பார்க்கவில்லை, உடனடியாக பார்க்கப்போகும் வாய்ப்புக்களுமில்லை.
நாவலைப்படித்தவன் எனும் ஒர் காரணத்தினால் சில வேளைகளில் நானும் ஏமாறலாம். இருப்பினும் இம்முயற்சியை வரவேற்கும் முகமாக நானும் நண்பர்களை அரங்குகளிற்கு சென்று படத்தினை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல் நாவலையாவது படியுங்கள்.
ஜெயமோகன், தான் மட்டும் தனித்து தெரியக்கூடாது எனும் காரணத்திற்காக அடக்கி எழுதியிருப்பார் என்றே தோன்றுகிறது.வணிகவெற்றி எனும் சாபம் எப்போது தமிழ் சினிமாவை விட்டு விலகுமோ. வில்லு 2 மட்டுமல்ல, விட்டால் குருவிவில்லே வரும். விஜயிருக்க, அவரின் சேனையிருக்கப் பயமேன்.
3.
Dr.Sintok | February 8, 2009 at 12:59 am
நான் இப்போதான் படம் பார்த்துவிட்டு வறேன்………. படம் பிடிக்க வில்லை… நான் பர்த்த படத்தில் அம்மா உன் கோவிலில் மற்றும் மாத உன் கோவிலில் பாடல்கள் இல்லை…இருதி 30 நிமிடம் சொத்ப்பல்…… இதுக்கு 2.5 ஆண்டு ரொம்ப ஓவர்
4.
karki | February 8, 2009 at 1:39 am
//இல்லாவிட்டால் வில்லு 2க்கு தயாராகுங்கள்.
//
இதில் வில்லு எங்கிருந்து வந்தது? அப்படியே வில்லு 2 வந்தாலும் நீங்கள் அதை தவிர்க்கலாமே!! கட்டாயம் பார்க்க சொல்லி யார் அழைத்தார்கள்? இப்போதுதான் நான் கடவுள் பார்த்துவிட்டு வருகிறேன். 33 ஆண்டுகள் ஆர்யாவை முடக்க வேண்டிய அவசிய்மே இல்லை. பாலா ஒரு நல்ல படைப்பாளீயாக இருக்கலாம். ஆனால் நிச்சய்ம் நல்ல இயக்குனர் அல்ல. இந்த மாதிரி படஃமெடுக்க மட்டுமல்ல படம் பார்க்கவும் பலாவால் மட்டுமே முடியும். நான் ‘பாலா’ அல்ல.
5.
sharehunter | February 8, 2009 at 9:36 am
கார்க்கி,
எனக்கென்னமோ இயக்குநர் பாலா ஆர்யாவிற்காக அவ்வளவாக மெனக்கெடவில்லை என தோன்றுகிறது. சக பாத்திரங்களை கதை மாந்தர்களாக உலவ விட்டதற்கு இவ்வளவு காலம் ஆகியிருக்கலாம் என்றே நினைக்கிறேன்.
வணிக ரீதியான ப்ரஷர் தாங்க முடியாமல் கூட இந்த படத்தை ரீலீஸ் செய்திருக்கலாம் அல்லவா? இது போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றால்கதாநாயகன் அடித்து அடியாட்கள் ட்ரான்பாஸ்மரில் விழ வைக்கும் காட்சி இனி எடுக்கும்போது ஒருநிமிடம் யோசிப்பார்கள். இல்லையா?
6.
Jaffer | February 8, 2009 at 11:29 am
எல்லாம் சரிதான், உங்களை வேதாள நகரம் எழுதச்சொன்னால், நீங்கள் ஏழாவது உலகம் (அதான் நான் கடவுள்) படத்தை பார்த்து வந்து, எழுதி இருக்கிறீர்கள். நியாயமா? ரஃபீக் ராஜா, விஷ்வா, சதீஷ் எல்லாம் எங்கே? இதெல்லாம் கேட்க மாட்டீர்களா?
7.
திருமூர்த்தி சுப்ரமணியம் | February 8, 2009 at 9:59 pm
நான் கடவுள் படத்தில என்ன பிடிக்கல? ஒரு வேளை ஆர்யா மனசு திருந்தி பூஜாவுடன் ஒரு குத்தாட்டம் போட்டு விட்டு; காசி சாமியாரின் ஆசியில் பூஜாவிற்கு பார்வை வரவைத்து அதன் பிறகு வில்லனை துவம்சம் செய்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ? குத்து பாடலை பேரரசு எழுதி அதனை அழகான தமிழில் உதிட் நாராயணன் பாடியிருக்க வேண்டும். அப்படி இருந்தால் நல்லா இருந்திருக்குமோ? சிந்திக்கலான கூட பரவால…சிந்திக்கவாவது விடுங்கப்பா.
8.
Rafiq Raja | February 9, 2009 at 1:56 pm
ஜாபர் அன்பர் நம்மை பெயர் சொல்லி அழைத்த பின்பும் நாம் தலையிடாமல் இருக்க முடியாது என்பதால், இதோ என் தாக்குதல் – கதாசிரியர் வர வர வேதாள நகரத்தை பாராமுகம் காட்டி வருகிறார். இப்போது நான் கடவுளுக்கு விமர்சனம் மட்டும் செய்ய மட்டும் நேரம் கிடைக்கிறதா ? உடனே குதிரை வீரர்கள் சங்கத்தில் இவரை பற்றி ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டியது தான் போல.
இருந்தாலும் படம் பற்றி கூற என்னிடம் ஒன்றும் இல்லை. வில்லு போன்ற படங்களில் இருந்து காப்பாற்ற பாலா ஒன்றும் முனைந்த மாறி தெரியவும் இல்லை. அவர் மனம் போக்கில் படம் எடுத்து விட்டு வெகு ஜன அபிப்ராயத்துக்கு ஆசை படுவது அவ்வளவு சரியாக தெரியவில்லை.
இப்படி ஒரு படத்திற்காக அவர் வளர வேண்டிய ஆரியா போன்ற நடிகரின் 2,3 வருடங்களை கால விரயம் ஆக்காமல் இருந்து இருக்கலாம்.
9.
SANTIL | February 9, 2009 at 6:10 pm
THERE IS NO LOGIC AND MAGIC .BUT,THERE IS SOME VIBRATION.
10.
Karthikeyan G | February 9, 2009 at 8:20 pm
பார்க்கலாம்.. C.D வரட்டும்
11. jeyamohan.in » Blog Archive » நான் கடவுள், கடிதம் | February 10, 2009 at 12:27 am
[...] http://sharehunter.wordpress.com/2009/02/07/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%... [...]
12.
Santhosh | February 10, 2009 at 11:15 pm
Ada pongappu!!!! Jora lollyaa pichayedutha maathiri irundhuchuppa indha padathai paarthathu!!!
13.
perinba | February 11, 2009 at 12:07 am
படத்தையும் மீறி சில விஷயங்கள் இருக்கின்றன அதையும் விமர்சித்து இருக்கலாம்
14.
நிராதன் | February 24, 2009 at 2:40 pm
உங்களுக்கெல்லாம் ஹீரோ இருபது பேரை போட்டு அடிக்கிற மாதிரி கதை எடுத்தா தான் பிடிக்கும். அதோட நயந்தாரா two piece ஓட வந்து எல்லாத்தையும் காட்டினா தான் சந்தோசம். உங்களை மாதிரி ஆக்கள் இருக்கும் வரைக்கும் நல்ல படைப்புக்கு வரவேற்பிருக்காது. இந்த படத்தில பாலா ஒவ்வொருத்தரையும் செதுக்கியிருக்கிறார். முதல்ல அதை பாராட்டுங்கப்பா. அது சரி வில்லு படத்துக்கு முதல் நாள் அடிபட்டு ticket வாங்கின கூட்டம் தானே நீங்கள் எல்லாம்.
15.
surya | February 27, 2009 at 11:51 pm
நிறைய எதிர்பார்த்து சென்றால் சொதப்பலாகத்தான் தெரியும். பா.ராவின் பதிவை படித்துவிட்டு அரைமனதாகத்தான் பார்க்க சென்றேன். ஆனால் பாலாவின் ரசிகன் அல்ல நான். நல்ல சினிமா ஆதங்கன். உலக சினிமா காதலன். மஜித் மஜிதியையும் கொரிய இயக்குநர் கிம் கிடக்கையும் நேசிப்பவன்.
இந்த திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும் என எத்தனை பேட்டிகளை நம்பி ஏமாந்தது போதும்.
இன்று பாடல் பதிவுடன் ஆரம்பம் என்று பாண்டிபஜார், கோடம்ப்பாக்கம் சுவரெல்லாம் ஒட்டிய பல போஸ்டர்களை பார்ந்து பார்க்க வேண்டும் என எண்ணி நிறைய செலவு செய்துவிட்டு படம் பார்த்து நொந்து போயிருக்கிறேன். ஆனால் பாலா ..??? அப்படி செய்யவில்லை என்றுதான் கூற முடியும். எதையும் எதிர்பார்த்து செல்லவில்லை.
பாலாவின் மற்ற மூன்று படங்களை விட இதில் அழுத்தம் அதிகம். ஒருவேளை ஜெயமோகனின் வசனமும் ராஜாவின் இசையும் ஆர்த்தரின் கைவண்ணமும் நன்றாக இருந்ததால் இருக்கலாம்.
சிறப்பு சப்தம் ராஜீ ..வாவ்.. Xlent performance. உலக படங்களுக்கு டெக்னீஷியன்கள் பலர் சென்னைகாரர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?
Ganesh Kumar has won an award for his soundtrack for the Hollywood flick “9 Lives of Mara” இதில் என்ன சிறப்பு இவர் சென்னையை சேர்ந்தவர் மட்டுமல்ல. மேற்கு மாம்பலத்தில் உட்கார்ந்து கொண்டே இந்த திரைப்ப்டத்திற்கு சவுண்ட் மிக்சிங் செய்தவர். விருது வாங்க மட்டுமே அமெரிக்கா சென்று வந்துள்ளார்.
இது போல பலர் இருக்கிறார்கள். நாம் கண்டு கொள்ளாத பலரை ஹாலிவுட் அணைத்து அவார்டு வாங்கி கொடுத்து அனுப்புகிறார்கள்.
ஒரு தேசிய விருது கூட கொடுக்காத கண்ணதாசனையும் நாகேஷ் அவர்களையும் பெருமை படுத்தியவர்கள் இந்தியர்கள்..
வித்யாசமாகவும் யதார்த்தமாகவும் இருக்கவேண்டும் என நினைக்கும் மிகச்சிலரையும் நாம் கண்டுகொள்ளாவிட்டால் சுந்தர்.சி யின் 100வது படம் வெகுதூரத்தில் இல்லை. { Minimum Gurantee }அதை டைரக்ட் செய்ய போவது பேரரசுவாக இருந்துவிட்டு போகட்டும். அதில் தமிழ் ரசிக பெருமக்கள் திளைக்கட்டும்.
வாழ்க தமிழ் சினிமா…