Archive for January 2nd, 2009
வேதாள நகரம் – 11 எதிர் தாக்குதல்
நமது இலட்சிய குதிரை வீரர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தை நோக்கி கடகடவென, படபடவென, மடமடவென, குபுகுபுவென, தடதடவென ஒடிவந்த எஸ்கோபார் ‘அவர்கள் வந்து விட்டார்கள்’ என அலறினார்.
உடனே உஷாரான விஷ்வா, ‘ஓடுங்கள், பிரிந்து ஓடுங்கள்’ என கதறிக் கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
கலீலும் அந்த இடத்தை விட்டு அப்பீட்டானார்.
இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட சதீஷ் ஸ்டெல்லாவின் கையை பிடித்து ‘வா, ஒடி விடுவோம்’
‘யார் அந்த அவர்கள்?’
‘யாரென்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் இலக்கு யாரென்று தெரியும்’ என்று சொல்லி விட்டு அவளின் கையை பிடித்துக் கொண்டு உள்ளூர குஷியுடன் ஓடினார்.
==========================================================
வேகமாக ஒடிய விஷ்வா தன் அறைக்கு போய் தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறிய போது, அவரை முறைத்துக் கொண்டே அந்த ஹோட்டலின் உள்ளே ஒருவன் வந்தான். அவனின் நோக்கம் என்னவென்று சட்டென்று புரிந்து கொண்ட விஷ்வா புன்னகையுடன் தான் எடுத்து வந்த பொருட்களை அருகிலுள்ள மேசையில் வைத்து விட்டு சண்டைக்கு தயாரானார். சின்ன அணிலையே எதிர்த்து வென்ற மாவீரனான விஷ்வா சில கராத்தே முத்திரைகளை செய்து காட்டினார்.
எதிராளி அவரை இன்னும் வெறித்துக் கொண்டு இருப்பதை கண்ட விஷ்வா மேலும் சில கராத்தே முத்திரைகளை செய்து காட்டினார். அவற்றில் ஆர்வம் இழந்த எதிராளி அருகிலிருந்த பீர் பாட்டில் ஒன்றை எடுத்து அவர் மேல் வீசி எறிந்தான்.
650 மில்லி பீரை கொண்டிருந்த அந்த பாட்டில் காற்றில் வெகு வேகமாக சென்று விஷ்வாவின் வயிற்றை பலமாக தாக்கியது. அதனால் ஏற்பட்ட வலியை சமாளித்துக் கொண்ட விஷ்வா, அவனை பார்த்து கீழ்கண்டவாறு பேசினார்.
‘டேய் நாயே, உனக்கு கராத்தே தெரியவில்லை என்றால் அதை எனக்கு முன்னாலேயே சொல்லியிருக்கலாமே. நான் பாட்டுக்கு பேசாமல் ஒடியிருப்பேனே. அதை விட்டுவிட்டு இது என்ன பாட்டிலை துாக்கி அடிக்கிறது? சுத்த காவாலிதனமால்ல இருக்கு.’

இவரும் நம் பச்சை மின்னலுக்கு சொந்தகாரர் தான்.
என கூறி, தன் பொருட்களை மேசையிலிருந்து எடுத்துக் கொண்டு அருகிலிருந்து ஜன்னலை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்தார். ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பிக்கும் போது பச்சை மின்னலார் கீழ்க்கண்டவாறு பஞ்ச் அடித்து விட்டு தப்பி ஒடினார்.
‘எனக்கு வலிக்கலையே!’
=========================================================================
கலீல் தன் ஆறடி நீளமுள்ள சாட்டையை ஒரு தடவை தடவிவிட்டு தாக்குதலுக்கு தயாரானார். சாட்டையை எதிராளியை நோக்கி வீசினார். அந்த சாட்டை வளைந்து, நெளிந்து, இழைந்து, கலைந்து மற்றும் பல ந்துகளை செய்து இலக்கை தாக்கியது.
இரத்தத்தை பார்த்த எதிராளி பயந்து தப்பி ஒடினான்.

சாட்டையடி வீரன்
தன்னுடைய இரத்தத்தை பார்த்த கலீலுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.
===========================================================================
ஸ்டெல்லாவை கூட்டிக் கொண்டு குஷியாக ஒடிக் கொண்டிருந்த சதீஷின் பாதையை ஒரு முரடன் மறைத்தான்.
‘டேய், நீ எதற்காக என்னை வழி மறைக்கிறாய் என்பது தெரியும். ஆபத்தில் சிக்கியிருக்கும் அபலை பெண்ணை காப்பதற்காக நான் யாரையும் எதிர்ப்பேன்.’
‘ஆபத்தில் சிக்கி இருப்பது நீதான்.’
‘அப்ப இவளை நீ விட்டு விடுவாய். அப்படிதானே?’
‘ஆம்.’
‘இவளுடைய நண்பனான என்னையும் நீ ஏன் அவ்வாறே விட்டு விட கூடாது?’
இந்த உரையாடலால் குழப்பம் அடைந்த அந்த முரடன்,
‘யோவ், பேசாம சண்டைக்கு வாய்யா.’
ஸ்டெல்லாவை பார்த்து புன்னகை செய்துக் கொண்டே சதீஷ் சண்டைக்கு தயாரானார். முதலில் கையிலிருந்து கைக்கடிகாரத்தை கழற்றினார். பின்னர் பேன்ட் பாக்கெட்டிலிரூந்து கைக்குட்டையை எடுத்து அதை ஒரு மேசையின் மீது விரித்தார். அதில் அந்த கைக்கடிகாரத்தை மிகவும் பத்திரமாக வைத்தார். பிறகு அந்த கைக்குட்டையை நான்காக மடித்தார்.
ஸ்டெல்லா ஒரு அழகிய கொட்டாவி விட்டார்.
அந்த முரடனோ இந்த ஆள்கிட்ட பேச்சு கொடுத்து மாட்டிக்கக் கூடாது என பொறுமையில்லாமல் காத்திருந்தான்.
ஏதோ நினைத்துக் கொண்ட சதீஷ் அந்த கைக்குட்டையை மீண்டும் ஜாக்கிரதையாக பிரித்தார். அதிலிருந்து அந்த கைக்கடிகாரத்தை எடுத்து சாவி கொடுக்க ஆரம்பித்தார். நன்றாக சாவி கொடுத்த பின்னர், மீண்டும் அந்த கைக்கடிகாரத்தின் நேரம் சரியாக இருக்கின்றதா என சரிபார்த்தார். பிறகு அந்த கைக்கடிகாரத்தை வெகு பத்திரமாக …….
‘யோவ், நீ என்னதாய்யா நினைச்சுகிட்டு இருக்கே. நான் இன்னும் நாலு இடத்துக்கு போய் நாலு பேர அடிக்கணும்யா. சீக்கிரம் சண்டைக்கு வாய்யா.’
‘ஏம்பா, எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. ஒரு காபி சாப்டுட்டு நம்ம சண்டைய வச்சிக்கிலாமே.’
பயங்கர கடுப்பான அந்த முரடன் அவரின் வயிற்றில் பலமாக ஒரு குத்து விட்டுவிட்டு,
‘சாவுகிராக்கி, வந்து எனக்குன்னு மாட்டுது பாரு.’ என சொல்லி விட்டு வெளியேறினான்.
அந்த அடியிலிருந்து சமாளித்துக் கொண்டு, சதீஷ் ஸ்டெல்லாவை ஒரக் கண்ணால் காதல் பார்வையுடன், உதடை ஒரு மாதிரி சுழித்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு பஞ்ச் அடித்தார்.
‘எவ்வளவோ வாங்கியிருக்கோம், இதை வாங்க மாட்டோமோ.’
==================================================================
குதிரை லாயத்தை நோக்கி ஒடின விஷ்வாவை நோக்கி ஒரு முரடன் ஒரு பிச்சுவா கத்தியை வீசியெறிந்தான். அந்த பிச்சுவா கத்தி விஷ்வாவின் நெஞ்சை நோக்கி டூர்ரென்று, டர்ரென்று, கிர்ரென்று, வீர்ரென்று வந்தது.
(தொடரும்)
===================================================
என் உயிரினும் மேலான வாசக கண்மணிகளுக்கு,
இந்த இலக்கிய விருந்தை கடந்த பதினொன்று பகுதிகளை தொடர்ந்து படித்து உவகைக்குட்பட்டு இருப்பீர்கள். இதுவரை நடந்த முன்கதை(?) சுருக்கத்தினை நீங்கள் இங்கு பின்னுட்டமாக இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நம் எதிர்கால சந்ததியினர் பயன் அடையும் பொருட்டு சிறப்பான முறையில் எழுதப்படும் முன்கதை சுருக்கமானது இந்த இலக்கிய முயற்சி புத்தகமாக வெளிவந்து பெஸ்ட் செல்லர்ஸ் வரிசையில் இடம் பிடிக்கும் போது ஆசிரியரால் வெளியிடப்படும்.
காலத்தை வென்று சரித்திரம் படைக்கும் இந்த கருத்துப் பெட்டகத்தில் உங்கள் பெயரும் வரக்கூடும். முயற்சி செய்யுங்கள்.
– ஆசிரியர்.
12 comments January 2, 2009
02-01-2009
நேற்றைய தினம் காலை கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு சந்தை எந்தவித பாதையை தேர்ந்தெடுப்பது என்ற முடிவில் மந்த கதியில் இருந்து, அதன் பின்னர் 70 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
3075 என்பது முக்கிய தடைநிலையாக இருக்கும் என நினைக்கிறேன். அஸ்ஸாமில் குண்டுவெடிப்பு என்ற செய்தி வந்துள்ளது. இதற்கும் பாகிஸ்தான் காரணமாக இருக்கும் என்று செய்தி அல்லது வதந்தியோ வரும் பட்சத்தில் போர் பயம் காரணமாக சந்தை வெகு வேகமாக இறங்கக் கூடும்.
இன்றைய சந்தை நெகடிவ்வாக முடியவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இன்றைய சந்தை -78 முதல் 45 வரை ஆடக்கூடும்.
பண வீக்கம் குறைந்துள்ளது நல்ல விஷயம் தான் என்றாலும் அதற்கு கச்சா எண்ணெய் குறைவே முக்கிய காரணம் என்பதையும் மறுக்க இயலாது. இன்றைய தினம் நல்ல செய்திகள் இல்லாததே கெட்ட செய்தியாக இருக்கும் என எடுத்துக் கொள்ளலாம்.
மாலை விரிவாக எழுதுகிறேன்.
Good Morning to you All!
1 comment January 2, 2009