Archive for December 20th, 2008
சித்திரங்களின் இரசிகன் I
என்னுடைய பால்ய கால சிநேகிதனை நீண்ட காலத்திற்கு பின் சந்தித்தேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் அவன்தான் என்னை முதலில் அடையாளம் கண்டுக் கொண்டான். முற்றிலும் மாறி போயிருந்தான். பால் வடியும் அழகிய முகங்களுடன், ஸ்லிமான உடலுடன் ஊரைச் சுற்றி திரிந்த நாங்கள் நீண்ட காலத்திற்கு பின் சந்திக்கும் போது எனக்கு அவனை அடையாளம் தெரியாமல் போனது. ஆனால் அவனோ நான் இன்னும் அப்படியே இருக்கிறேன் என்றும், அதனாலேயே என்னை அடையாளம் கண்டுக் கொண்டதாகவும் கூறினான்.
பேச்சுக்கு அவனுடைய பெயர் ராஜா என்று வைத்துக் கொள்வோம். சிறு வயதில் இருவருமே சித்திர கதை இரசிகர்கள். இராணி காமிக்ஸ் மற்றும் இலயன் காமிக்ஸ் போன்ற சித்திர கதைகளை படித்து அதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்போம். வகுப்பறைகளில் வாத்தியார் வரவில்லையென்றாலும், அது பற்றியே பேச்சு போகும். இரு சித்திர கதை கதாநாயகர்களை ஒப்பிடும்போது வாத்தியார் வந்தாலும் எங்களின் பேச்சு அதுபற்றிதான் இருக்கும். நீண்டகாலத்திற்கு பின் சந்தித்ததால் பேச நிறைய விஷயம் இருந்தன.
பங்கு சந்தை குறித்து அறிய நிறைய ஆர்வம் காட்டினான். இணையத்தில் காமிக்ஸ் குறித்து நிறைய வலைப்பூக்கள் இருப்பது பற்றி நான் பேச ஆரம்பித்தபோது ஒருவித அசிரத்தையுடன் கேட்டுக் கொண்டான். இணைய தொடர்பு, வலைப்பூக்கள் என்ற தொழிற்நுட்ப காரணிகள் அவனுக்கு புரியாமல் இருக்கும் என்று முதலில் நினைத்தேன். பிறகு அவன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், அவனுடைய வீட்டில் இணைய தொடர்பும் (Broadband, of course) இருந்தது எனக்கு தெரிய வந்தது.
மதிய உணவிற்கு பிறகு அவனிடம் மீண்டும் காமிக்ஸ் பற்றிய வலைப்பூக்கள் பற்றி உற்சாகமாக பேச தொடங்கினேன். அப்போதும் அதே அசிரத்தை தான். இன்னும் காமிக்ஸ் படிக்கின்றாயா என நீண்ட நேரமாக அடக்கி வைத்திருந்த கேள்வியையும் கேட்டு விட்டேன். அதற்கு அவன் சொன்ன பதில் என்னை மிகவும் காயப்படுத்தியது.
‘அதெல்லாம் சின்ன வயசில, விவரம் புரியாமல் செஞ்சது. இப்ப நிறைய வேலைகள் வந்துடுச்சி. இன்னும் சின்னப்புள்ள தனமா அதுலேயே இருந்தா எப்படி?’
‘அதுக்காக வேலை, வேலை அதைய கட்டிக் கிட்டு அழுவியா, என்ன? பொழுது போக்குன்னு ஒன்னு வேண்டாமா?’
‘குமுதம், ஆனந்த விகடன், ஜுனியர் விகடன்னு பெரிய லெவலுக்கு போயாச்சி. நீ இன்னும் அதையேவா படிச்சிக்கிட்டு இருக்கே?’
‘என்ன பேசறா? நானும் இன்னும் பத்தாவதா படிச்சிக்கிட்டு இருக்கேன்? என் வட்டமும் பெருசா ஆயிடுச்சி. நீ சொன்னது அதுக்கும் மேல நிறைய பத்திரிக்கைகளை நானுந்தான் படிக்கிறேன். அதுக்கும் காமிக்ஸ் படிக்காம விடுதறதுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு அதுவும் பிடிக்கும், இதுவும் பிடிக்கும். உனக்கும் பிடிச்ச ஒன்னு தானே. அப்புறம் படிக்க மாட்டேங்கறே.’
இந்த உரையாடலை அவன் தொடர விரும்பவில்லை என்பது அவன் முகத்தில் தெளிவாக தெரிந்தது. நானும் தொடர விரும்பவில்லை. ஆனால் அவன் என் பால்ய வயது சிநேகிதன். அவன் நட்பை இதற்காகவெல்லாம் துண்டித்து கொள்ள முடியாது. அவனுக்கும், எனக்கும் அப்போது சூப்பர் ஸ்டாரை பிடிக்கும். கொடுமை என்னவென்றால், எங்களுக்கு இப்போதும் அவரை பிடிக்கிறது.
ஆனால் அவன் இழந்தது என்ன? நான் இழக்காதது என்ன? நானும் ஒரு நடுத்தர வாழ்க்கைதான் வாழ்கிறேன். வேலை, விடுமுறை என்பது எனக்கும் உண்டு. நாலு கழுதை வயசான்ன பிறகும் எனக்கு சித்திர கதைகள் இன்னும் பிடிக்கிறது. நானும் அவனும் ஏறக்குறைய ஒரே அலைவரிசையில்தான் சிந்தித்தோம். எந்த இடத்தில் அவன் பிரிந்தான் என்பதுதான் தெரியவில்லை.
என்னுடைய சிறிய வயது காமிக்ஸ் தொடர்பான நினைவுகளை (சுவாரஸ்யமானதை) மட்டும் வரிசைப்படி இல்லாமல் நினைவுக்கு வருவதையெல்லாம் இந்த தொடரில் எழுதலாம் என்றிருக்கிறேன்.
இந்த தொடரில் வரும் என் பால்ய கால நண்பர்களில் பலர் தற்போது என்ன நிலையில் உள்ளார்கள் என்பது தெரியாத நிலையில் உண்மையான பெயர்களை பயன்படுத்த வேண்டாம் என்றே நினைக்கிறேன். அதற்காக பேரரசு போல் சனியன் சகடை, பெருச்சாளி போன்ற பெயர்களை பயன்படுத்த மாட்டேன் என உத்திரவாதமும் அளிக்கிறேன்.
4 comments December 20, 2008
வேதாள நகரம் 10 – தாக்குதல்
‘அந்த பொண்ணு பேரு ஸ்டெல்லாவாம்’ என இருநுாற்று முப்பத்தியெட்டாவது தடவையாக சதீஷ் சொன்னார். அறையில் இருந்தவர்கள் எல்லாம் எரிமலையாகி கொண்டிருந்தார்கள்.
‘யோவ், வேற எதாவது பேசேன்’
‘பெருசு, அடுத்து என்ன பண்ணலாம்?’
‘கலீல், இன்னும் ஒரு மாசம் இந்த ஊரை நாம காலி பண்ண போறதில்லை.’
‘ஏன்?’

நமது கதாநாயகன் பச்சை மின்னல்.
‘நாம வேதாள நகரத்துக்கு போறது எல்லோருக்கும் தெரியுது. நமக்கு மட்டுந்தான் எங்கே போறோம்னு தெரியலை. இதைப் பத்தி முழுசா தெரியுற வரை நாம இங்கேயே இருக்கறதுதான் நல்லது. உலகம் ரொம்ப பெரிசு. சின்ன அணில், சின்ன குயில் இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க.’
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்ட ஒரு உருவம் அங்கிருந்து விலகி இருளில் மறைந்தது.
‘கலீல்’
‘சொல்லு, சதீஷ்.’
‘அந்த பொண்ணு………….’
‘யோவ், இதே டயலாக்கை திருப்பி சொன்னே கொண்ணே போட்டுருவேன். அந்த பொண்ணுக் கிட்டே போய் இதெல்லாம் பேசு’
‘அதான் எனக்கு பயமா இருக்கு. என்ன பேசணும்? விஷ்வா, எங்கூட வருவியா?’
‘என்ன ஏன்யா இதில இழுக்குற?’
‘இல்ல, நானே சுமாரா தான் இருக்கேன். அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கணும்னா உன்ன கூட்டிட்டு போனாதானே என்கூட பேசுவா.’
விஷ்வா கொலைவெறி ஆக, கலீல் குறுக்கிட்டு ‘யோவ், ஏன்யா தேவையில்லாமா நாம பிரச்சினை பண்ணிக்கிட்டு? அந்தப் பொண்ணுக் கிட்ட ஏதாவது சிரிக்கிற மாதிரி ஒரு சம்பவத்தை சொல்லு. அப்புறம் அவளே உன் கிட்ட பேச ஆரம்பிச்சுடுவா.’
‘சிரிக்கிற மாதிரின்னா? கரடிமலையில விஷ்வாவை கட்டி வைச்சு அடிச்சாங்களே. அந்த கதைய சொல்லவா? செம காமெடி தெரியுமா அது?’
‘யோவ், சொந்த கதையெல்லாம் காமெடி பண்ணக் கூடாது, சரி, நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி கேள்விப்பட்ட ஒரு கதையை சொல்றேன் அதயே சொல்லு.’
===============================================================
பொழுது புலர்ந்து கதிரவன் தன் மென்மையான கதிர்களை வீச தொடங்கியிருந்தான். கதிரின் இதமான உஷ்ணத்தில் மலர்கள் பூத்து நறுமணத்தை வீசத் தொடங்கின. மூடியிருந்த பனி அரசு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போல கரைந்தது. இதெல்லாம் வேறு ஒரு இடத்தில் நடந்தன. நம் கதை நடக்கும் இடமோ பாலைவனம், அங்கு இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும், கதையில் இயற்கை பற்றிய வர்ணணைகள் இல்லையென்ற குறை பின்னாட்களில் வரலாம் என்ற காரணத்தில் எழுதப்பட்டன.
நம் கதை நடக்கும் இடத்தில் சூரியன் தகதகவென உதிக்க தொடங்கியவுடன், நம் இலட்சிய குதிரை வீரர்களுக்கு பகபகவென வயிறு பசிக்க ஆரம்பித்தது. கீழே இறங்கி ஹோட்டலுக்கு வந்தனர்.
‘கலீல், ஸ்டெல்லா அந்த டேபிள்ல தனியா உட்கார்ந்து இருக்கா.’
‘போய் பேசு. ஞாபகம் இருக்குல்ல.’
‘சாப்ட்டு போறேனே பசிக்குதே.’
‘யோவ், உன் காதலை சொல்ல போறே பூரி கிழங்கு சாப்ட்டுட்டா போறது? இந்தா, இந்த கொய்யாப் பழத்தை வாயில போட்டு மென்னுட்டே போ.’
‘ஹாய்’
‘ஹாய்.’
‘நாம் இரண்டு பேரும் ஒரே ஊருல இருக்கோம். ஒரே ஹோட்டல் தங்கி இருக்கோம். இப்ப ஒரே டேபிள்ல உட்கார்ந்து இருக்கோம். இல்ல?’
ஸ்டெல்லா தன் எதிரில் உட்கார்ந்து இருப்பவரின் மனநிலையை பற்றி சிறிது சந்தேகம் கொண்டாள்.
‘ரொம்ப போர் அடிக்குதுல்ல. சரி, நான் ஒரு கதை சொல்லட்டுமா. ஹஹஹஹ…’
‘சரி, சொல்லு.’
‘ஒரு ஊருல தொண்ணுறு வயசு பெரியவரு ஒருத்தரு இருந்தாரு. ஹஹஹஹ…..அவரு ஒருநாள் குடும்ப டாக்டர்க்கிட்ட போய் நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன், என்ன சொல்றீங்கன்னு கேட்டாரு. அதுக்கு டாக்டரு …ஹஹஹஹ… அதெல்லாம் வேலைக்காவது எதுக்கு ரிஸ்க்ன்னு சொல்லிட்டாரு. ஆனா இவரு கேக்கலை. இருபத்தியெட்டு வயசு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
நாலு மாசம் கழிச்சு திரும்ப டாக்டர பாக்க வந்தாரு…ஹஹஹஹ…….. என்னமோ வேலைக்காவது சொன்னீங்களே, என் சம்சாரம் இப்ப மூணு மாசம்னு பெருமையா சொன்னாரு. அதுக்கு டாக்டரு நான் ஒரு கதை சொல்றேன் கேளுங்கன்னு சொல்லி நான் ஒரு தபா ஆப்பிரிக்க காட்டுக்கு போனப்ப ஒரு சிங்கம் என் எதிர்க்க வந்துச்சி. பயங்கரமா உறுமிச்சி. எனக்கு வேற வழி இல்ல. நான் உடனே என் கையில் இருந்த குடையால அந்த சிங்கத்தை சுட்டேன். அந்த சிங்கம் குண்டு பாய்ஞ்சி செத்துப் போச்சி என கதையை முடிந்தார்.
உடனே அந்த பெருசு அது எப்படி குடையில இருந்து குண்டு வரும்? பின்னாடி இருந்து யாராவது துப்பாக்கியால சுட்டுருப்பாங்கன்னு சொன்னாரு. அதுக்கு டாக்டரு ஹஹஹஹ உங்க விஷயத்திலயும் அதான் நடந்துருக்குதுன்னு சொன்னாரு. ஹஹஹஹ ஹஹஹ ஹஹஹஹஹ.
சதீஷ் முகத்தில் கும் என ஒரு பலத்த குத்து விழுந்தது. கீழே விழுந்து எழுந்து பார்த்தால் கண்களில் கொலைவெறியுடன் ஸ்டெல்லா நின்று கொண்டிருந்தது தெரிந்தது.
‘ஏன் என்ன அடிச்சே? இது ஒரு சிரிப்புக் கதை தானே?’
‘என் சொந்த தாத்தா கதை உனக்கு சிரிப்பா இருக்கா?
============================================================================
நோவடியின் எல்லையில் குதிரைகளை நிறுத்தி விட்டு துப்பாக்கிக்ளை அந்த மர்ம கும்பல் தயார் செய்து கொண்டது. குதிரைகளை பார்த்துக் கொள்ள ஒருவரை நிறுத்திவிட்டு மீதியுள்ள நபர்கள் நோவடி நகரத்தை நோக்கி கொலைவெறியுடன் நடக்க தொடங்கினர்.
(……………………. தொடரும்…………………..)
5 comments December 20, 2008