Archive for December 13th, 2008
வேதாள நகரம் – 09. நோவடி
‘யாருப்பா அவங்க? நம்மள ஏன் துரத்துறாங்க?
‘தெரியலை, பெருசு. நின்னு கேட்க நேரம் இல்லை. குதிரைங்களை வேகமாக விரட்டுங்க.’
‘இதோ பாரு பெருசு, அவங்க நம்மள துரத்துதறதால நாம ஒடுறோம். இறங்கி சண்டயெல்லாம் போட முடியாது. நாம சண்ட போட்டொமென்றால் 50 சதவிதம் நாம ஜெயிக்க வாய்ப்பு இருக்கு. ஆனா, ஓடினோம்னு வச்சிக்கோயன், அவங்களால நம்மள பிடிக்கவே முடியாது. இதுல எங்களுக்கு எட்டு வருசம் அனுபவம் இருக்கு.’
‘சதீஷ், அந்த கரடிமலையில நம்மள கட்டி வைச்சு அடிச்சாங்களே, பெருசுக்கு அந்த கதைய சொல்லு.’
‘யோவ், உயிரை காப்பாத்த ஒடிக்கிட்டு இருக்கோம். இதுல கதை சொல்ல நேரமில்லை. ஆமா, விஷ்வா எங்கே?’
‘விஷ்வா தான் பச்சை மின்னல் ஆச்சே, நமக்கெல்லாம் முன்னாடி ஒடிக்கிட்டு இருக்கிறது அவருதான்.’
அந்த மர்ம கும்பலுக்கும், நமது இலட்சிய குதிரை வீரர்களுக்கும் இடைவெளி மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது.
இவர்களுக்கு முன்னால் குதிரையை விரட்டிக் கொண்டிருந்த விஷ்வாவின் மனதில் பலப்பல எண்ணங்கள். அவரின் பெரியப்பா நவஜோ இனத்தின் நாட்டாமை மாதிரி. அவரு பாத்தா என்ன நினைப்பார்? எங்க போனாலும் நம்மள அடிச்சு காயப் போடுறதுக்குன்னு ஒரு கூட்டம் அலையுது. டூமில்குப்பத்தில ஜானி பீரோ, கங்குவா கிராமத்துல சின்ன அணில், போதாக்குறைக்கு யாருன்னே தெரியாத ஒரு கும்பல். இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ?
நோவடிக்கு போனவுடனே என்னென்ன செய்ய வேண்டுமென விஷ்வாவின் மனம் பட்டியலிட ஆரம்பித்தது.
1) கூட வர மூணு பேரையும் தலை முழுகணும். அது நடந்தாலே, எல்லாப் பிரச்சினைகள் முடிந்து போய்விடும். ஆனா இப்போதைக்கு அது நடக்கற மாதிரி தெரியலை. அதனால இரண்டாவது,
2) இந்த புதையல் விவகாரமே வேண்டாம். பெருச பேசாம ஊருக்கு அனுப்ப வேண்டியதுதான்.
3) ஒரு மாசத்துக்கு நோவடியிலே முழு ஓய்வு.
4) அதுகப்புறம் ஒரு நல்ல வேலை தேடணும்
5) ஜில்லுன்னு ஒரு பீரு. பி.கு. இதை முதலில் சேர்க்கணும்.
=======================================================================
செழி, எழுந்திரு, என்னடைய பைனாக்குலரை கொண்டு வாங்க தொலைவில் புழுதி கிளம்புகிறது.’
செழி லாலிபாப்பை மேசையில் வைத்துவிட்டு பைனாக்குலரை தன்னுடைய பாஸிடம் கொடுத்தார்.
‘அவனுங்களேதான். ஏன் இவ்வளவு வேகமா வரானுங்க தான் தெரியலை. இன்னும் அரை மணி நேரத்துல இங்கே வந்துருவானுங்க. நான் சொன்னது ஞாபகம் இருக்கா?’
‘இருக்கு, பாஸ். எது?’
=====================================================================
நோவடி எல்லையை நமது இலட்சிய குதிரை வீரர்கள் நெருங்கியதுமே அவர்களை துரத்தி வந்த மர்ம கும்பலானது மெல்ல மெல்ல பின்வாங்க ஆரம்பித்தது. வேறு எந்த இடைஞ்சலுமின்றி நமது வீரர்களும் பலத்த பெருமூச்சுகளுக்கு நடுவில் நோவடியை நெருங்கினர்.
நோவடியில் இருந்த ஹோட்டல் ஜில்பாவில் தங்களுடைய குதிரைகளையெல்லாம் கட்டிவிட்டு, அருகிலிருந்து பாருக்கு செல்லலாம் என முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினர்.
‘ஒரு நிமிஷம் இருங்க. பெருசு, நம்மள துரத்தி வந்த ஆளுங்கள உனக்கு தெரியுமா?
‘எங்கப்பா அவனுங்கள பாக்க முடிஞ்சுச்சி. சும்மா புயல் வேகத்துல தானே ஒடி வந்துருக்கோம். அவனுங்க ஏதாவது ஒரு லோக்கல் கொள்ளக்கார கூட்டமா இருக்கும்.’
‘ஏன் இந்த புதையல தேடுற ஆளுகளா இருக்கக் கூடாது?
‘அந்த மாதிரி ஆளுங்கனா நோவடின்னு கூட பாக்காமே இங்கேயே வந்து சுட்டுத் தள்ளிட்டு போய்டுவானுங்க.’
இதை கேட்டதும் நமது மூன்று இலட்சிய வீரர்களுக்கும் வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்தது.
அதை சமாளித்துக் கொண்டு தீவிரமாக யோசனை செய்த விஷ்வா, ‘இது சாதாரண கொள்ளைக் காரங்களா இருக்க முடியாது. நம்மை பற்றி நன்றாக தெரிந்த ஒரு கும்பலாக தான் இருக்க வேண்டும்.’
‘எப்படி சொல்றே?’
‘யார் துரத்துனாலும் நாம ஒடுவோம்னு தெரிஞ்சு வைச்சுருக்கான்ங்க பாரு, அதான் சொல்றேன்.’
அப்போது ஹோட்டல் ஜில்பாவின் வாசலில் ஒரு கோச்சு வண்டி நீண்ட பயணத்தை முடித்துவிட்டு வந்து நின்றது. அதிலிருந்து பொருட்களை பணியாளர்கள் இறக்க ஆரம்பித்தனர். அந்த வண்டியோட்டி கோச்சு வண்டியின் கதவினை திறந்து,
‘அம்மா, ஸ்டெல்லா, பாத்து இறங்கும்மா.’
தொபீர் ! ( இந்த சத்தத்திற்காக அலுவலகத்தில் பல வேலைகளுக்கும் இடையில் இந்த சப்தம் மிக சிறப்பாக வரவேண்டுமென்பதற்காக உதவிய நண்பர் விஸ்வா அவர்களுக்கு நன்றி)
அது ஒன்றுமில்லை. இலட்சிய வீரரான சதீஷ் காதலில் விழுந்த சப்தம் தான் அது!
(………………………தொடரும்…………………………..)
4 comments December 13, 2008