Archive for October, 2008
29-10-2008
அமெரிக்கா தீபாவளி கொண்டாடியிருக்கிறது. 800 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது. தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகளும் ஏறுமுகத்தோடு இருக்கின்றன. நாம் நேற்று தீபாவளி கொண்டாடி, இன்றும் கொஞ்சம் கொண்டாடுவோம் என நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் நம் சந்தை +100 புள்ளிகளுக்கு மேல் துவங்க வாய்ப்பு உள்ளது. நாளடைவில் சந்தை தடுமாற வாய்ப்பு உள்ளது. நாளை சந்தைக்கு விடுமுறை என்பதால், அடுத்தது வெள்ளிக் கிழமை தான். வெள்ளிக்கிழமை பயம் இன்னும் உள்ளது.
இன்றைக்கு என்ன செய்யலாம்? இனி என்ன செய்யலாம் பகுதி நான்கில் சொல்லப்பட்டவாறு, கடன் வாங்கி முதலீடு செய்திருந்தால் குறைந்த நஷ்டத்தில் வெளியேற இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்றைய தினம் அதுதான் அதிகமாக நடக்கப் போகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்றைக்கு நிறைய விற்க கூடும். இந்த எழுச்சியெல்லாம் தற்காலிகம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
சந்தை +175 முதல் +65 வரை ஆடும் என நினைக்கிறேன். முடிவும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன்.
Good Morning to You All!
Post Market:
பெரிதாக வெடிக்கும் என எதிர்பார்த்த நம் சந்தை இன்று புஸ்வானமாக போயிற்று. ரிலையன்ஸ் குரூப் பங்குகளில் புதிய ஷார்ட் பார்க்க முடிந்தது. 70 புள்ளிகளில் ஆரம்பித்த சந்தை Profit Booking காரணமாக மேலே எழும்ப விடவில்லை. வெள்ளிக்கிழமை நேரம் சரியில்லைன்னு தான் நினைக்கிறேன்.
3 comments October 29, 2008
நிப்டி ஹைக்கூகள்
புதிய தமிழ் எழுத்து கையில் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் கவிதைகள் கூட எழுதுவேன் என முன்பே எச்சரித்திருந்தேன். இதய பலகீனம் உடையவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.
நான் அடிப்படையில் ஒரு சோம்பேறி என்பதால் அறுசீர் விருத்தம் போன்ற பெரிய கவிதைகள் எழுதபோவதில்லை. அப்போது தான் ஹைக்கூ பற்றி கேள்விபட்டேன். இது நடந்தது நீண்ட காலத்திற்கு முன் (நேற்று). ஹைக்கூவில் என்னை கவர்ந்த ஒரு விஷயம் மொத்தமே நான்கு வரிகள். அதனை ஹைக்கூ என்று எழுதியவரும், படித்தவரும் (யாராவது ஒருவராவது) சொன்னால் போதும். (கார்த்தி, நீங்களாவது இதனை ஹைக்கூ என சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்).
பிரபல வார இதழ்களுக்கு என்னுடைய ஹைக்கூகளை அனுப்பலாம் என்றால் என் பெயர் ஹைக்கூவை விட பெரிதாக இருக்கிறது. பாஸிட்டிவாக யோசித்தால் வார இதழ்களுக்கு என் பெயர், ஹைக்கூ இதில் எது கவிதை என தெரியாமல் போய்விடும் அபாயம் இருப்பதையும் மறுக்க இயலாது.
சரி, ஹைக்கூ பற்றி உங்களில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் (என் அதிர்ஷ்டம்!). அது பற்றியும் சிறிய அறிமுகம் கொடுத்து என்னுடைய ஆரம்ப ஹைக்கூகளுக்கு விளக்கமும் கொடுப்பதாக உள்ளேன். ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கு வரிகளுக்குள் (ஹை ஜாலி!) இருக்கும். இதை எழுதும் போது எக்காரணம் கொண்டும் பேப்பரின் ஓரத்தில் எழுதக் கூடாது. நட்ட நடுவில் மட்டுமே எழுத வேண்டும். இதன் மூலம் ஜப்பானிலிருந்து வந்தது என்பதால், பேப்பரின் தலைப்பில் பிள்ளையார் சூழி இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு ஒன்று எழுதி, விளக்கமும் கொடுக்க முயல்கிறேன்.
ஹைக்கூ
பௌர்ணமி
மலையுச்சி
முதலீட்டாளன்!
முதலில் மேலே கண்ட மூன்று வரிகளை ஹைக்கூ கவிதை என நம்ப வேண்டும். (அட நம்புங்க சார், நம்பிக்கைதானே வாழ்க்கை!) கவிதை என்று நம்பினால் மேற்கொண்டு படியுங்கள். விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன்.
பௌர்ணமி - தமிழ் கவிதை என்பதால் அயல்மொழி சொல் ஒன்றாவது கண்டிப்பாக இடம் பெற வேண்டும். முழுவதும் தமிழிலேயே எழுதினால் அது தமிழ் கவிதை என சில துக்கிரிகள் சொல்லுவதை செவி கொடுத்து கேட்க வேண்டாம். பௌர்ணமி என்பது ம் ……வந்து………. ஒரு பிற மொழி சொல். அதற்கு அர்த்தம் பௌர்ணமி என்பதேயாகும். இந்த பெயரில் பிரபுதேவா இயக்கிய ஒரு தெலுங்கு படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. இக்கவிதையாசிரியருக்கு உலக விஷயங்களில் அறிவு உண்டு என்பதற்காக சொல்லப்பட்டதே கடந்த வரி.
மலையுச்சி - மலையுச்சி இது எல்லோருக்கும் தெரியும். அதனாலே மேற்கொண்டு விளக்கங்கள் அவசியமில்லை.
முதலீட்டாளன் - முதலீட்டாளர் என்பது முதலீட்டாளன் என ஆகியிருக்கிறது (முதலீட்டாளர்களுக்கு தற்போது மரியாதை இல்லையென்பதால் ‘ன்’ விகுதி). உழைத்து சம்பாதித்து கையிலுள்ள தொகையை பங்கு சந்தையில் முதலீடு செய்பவரையே முதலீட்டாளர் என அழைக்கப்படுகின்றார். தற்போதைக்கு ஏமாந்த சோணகிரி என்ற பொருளில் கூட எடுத்துக் கொள்ளலாம். குதிரை பந்தயத்தில் பணம் கட்டியவரும், பங்கு சந்தையில் முதலீடு செய்வரும் ஒன்றா? இல்லை. ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது, என்ன வித்தியாசம்? குதிரை பந்தயத்தில் குதிரை மேல் பணம் கட்டினால் குதிரை ஜெயிக்கவில்லையென்றாலும், முன்னாடி ஓடும், இரண்டாவதிலே பணம் கட்டினா பின்னாடி போகும்.
உஸ். அப்பா.. ஒரு வழியா விளக்கம் சொல்லி முடிச்சுட்டேன். இன்னும் பல கவிதைகள் எழுதலாம் என்று இருக்கிறேன். மறக்காமல் பின்னுாட்டம் இடுங்கள். இல்லையெனில் மௌனம் சம்மதம் என கருதி மேற்கொண்டு பல கவிதைகள் எழுதுவேன் என எச்சரிக்கப்படுகின்றீர்கள்.
22 comments October 28, 2008
27-10-2008
ஆசிய சந்தைகள் சிறிது ஏற்றத்துடன் காணப்படுகின்றன. நமக்கு இன்னும் இரு நாட்களில் F & O முடியும் நாள். ஆகையால் இன்று சந்தை சிறிது ஏற்றத்துடன் காண வாய்ப்பு உண்டு. 100 புள்ளிகளுக்கு மேல் முடிய வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். இன்றைய தினம் தீபாவளி திருநாள் என்பதால் சந்தையில் Volume குறைவாக இருக்கும். கரடிகள் வெகு சுலபமாக தங்கள் வழிக்கு கொண்டு வந்து விட முடியும் என்றாலும், இன்றைய தினம் காளைகள் சந்தையாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது.
சந்தை 2700 என்ற புள்ளிகளை தொட வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன்.
நண்பர்களுக்கு தீபாவளி 2008 வாழ்த்துக்கள்.
On market:
சந்தை வெகுவாக இறங்கியிருக்கிறது. பார்ப்போம். ஒரு சிறிய முன்னேற்றத்தை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நான் எதிர்பார்த்த மாதிரி ஐசிஐசிஐ வங்கியின் ரிசல்ட் நல்ல படியாக தான் வந்திருக்கிறது.
பிறகும் சந்தையை போட்டு இப்படி தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஐரோப்பிய சந்தைகள் துவங்க நேரமாகும் போலிருப்பதால் சந்தை முன்னேற்றம் அடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். காலையில் Positive ஆக தான் ஆரம்பிக்கும் என நினைத்தேன்.
7 comments October 27, 2008