Archive for October 15th, 2008
இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் IV
அமெரிக்கர்கள் அவர்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மிகுந்த ஆர்வம் உடையவர்கள். இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் தரப்பிலும் இதில் விதிவிலக்குகள் உண்டு என்றாலும், நம் தரப்பில் எண்ணிக்கை மிக மிக அதிகம். அவர்களின் ஆர்வத்திற்கேற்ப அவர்கள் வசிக்கும் பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் கூட உடற்பயிற்சி கூடங்கள், பூங்காவில் ஒடுபவர்களுக்கு என பிரேத்யேக பாதைகள், நீச்சல் குளங்கள் என வடிவமைக்க பட்டிருக்கும். உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும்போதே மாணவர்களுக்கு உடல் நலம் பேனுதல் பற்றி ஆர்வத்தை வளர்க்கும் வண்ணம் பயிற்சிகள் கொடுக்கப்படும். உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லுதல் என்பது நடைமுறை வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே அவர்களுக்கு இருக்கின்றது. உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல முடியாத பட்சத்தில் வாரக் கடைசியில் ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்ய நேரம் ஒதுக்கிக் கொள்வார்கள். கிராமங்களில் கூட கிராம நிர்வாகத்தால் ஒரு உடற்பயிற்சி கூடம் கட்டிக் கொடுத்திருப்பார்கள்.
கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு முன் இங்கே உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்களை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். அங்கே செல்பவர்கள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்காது. அங்கு செல்பவர்களும் இந்த அபிப்பிராயத்தை மாற்றாமல் வைப்பதற்கு படாதபாடு பட்டிருக்கிறார்கள். மேலும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் எல்லோரும் பாடி பில்டிங் செய்வதற்காக செல்கின்றார்கள் என்ற கருத்தும் இருந்தது. இன்றும் இருப்பதாகவே நினைக்கிறேன். ஜீம் உள்ளே போனோ வெளியே வரும்போது அர்னால்ட் மாதிரி இருக்கனும் என்ற நினைப்பு நிறைய பேருக்கு இருக்கும். பாடி பில்டிங் என்பது ஒரு தனி கலை. அதற்கு தகுந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதல்படி தீவிர பயிற்சிகள் தேவை. அது தெரியாமல் அங்கே ஒட்டப்பட்டிருக்கும் வெளிநாட்டு பாடி பில்டர்களின் புகைப்படங்களை பார்த்ததும், தானும் கட்டழகு சிங்கமாக மாற வேண்டுமென்ற எண்ணத்துடன் உடற்பயிற்சிகளை ஒரு தீவிர மனப்பான்மையுடன் செய்ய ஆரம்பிப்பார்கள். அதன் முடிவு? ஒரு மாதம் அல்லது இரு மாதங்களுக்கு மேல் பயிற்சிகள் தொடராது.
நம் உடலை கட்டுக்கோப்பாக ( Fitness என்ற பொருள்பட சொல்கிறேன். தமிழில் இது தான் சரியான வார்த்தையா என்பதில் சந்தேகம் இருப்பதால்) வைத்துக் கொள்ள சில எளிய பயிற்சிகளே போதும். சிக்ஸ் பேக் போன்ற அயிட்டங்கள் வேண்டுமானால்தான் கடின பயிற்சிகளுக்கு போக வேண்டும். அவ்வாறு செல்வதும் தவறில்லை. சிக்ஸ் பேக் உங்களுக்கு இருப்பதால் வரும் தன்னம்பிக்கைக்கு நாம் கொடுக்கும் விலை என்றே வைத்துக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்யாமல் இருக்க நம்மாள்கள் சொல்லும் நியாயமான காரணங்கள் :
“கல்யாணத்துக்கு முன்னே சும்மா இரண்டு பக்கமும் ஏகப்பட்டது வெயிட் வைச்சு துாக்குவேன். அப்புறம் அப்டியே விட்டு போச்சு. சார்.”
“எங்க ஆபிசுலேயே வேலை அதிகமா இருக்கு. வீட்டுக்கு வந்தா அப்டி, இப்டின்னு காலம் ஒடிடுது. எங்க நேரம் இருக்கு, சார்”
“சார், நீங்க சொல்றது நுாத்துக்கு நுாறு சரி. நாளையிலிருந்து நாம ஆரம்பிச்சுடலாம். என்ன சொல்றீங்க, சார்”
“எனக்கு ஆக்ஸீடென்ட் நடந்ததிலேயிருந்து நான் அந்த பக்கம் போறதில்லை. எப்பன்ன கேக்குறீங்க. அது நடந்து ஒரு பத்து வருசம் இருக்கும், சார்”
“ஜீம்லேயே இருப்போம். ஆறு மணி நேரம் ஒரு நாளைக்கு. சார். அது ஒரு காலம்.”
“குழந்தை, குட்டின்னு இருக்கு. எப்டி சார்”
இது போன்ற நிலைகள் மாற வேண்டுமென்றால், பள்ளிகளிலேயே இது பற்றிய பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். சென்னை, மதுரை, கோயம்புத்துார் போன்ற முக்கிய பெரிய நகரங்களில் இருக்கும் பெரிய தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் கூட உடற்பயிற்சி கூடங்கள் இருக்கும் பள்ளிகள் விரல் விட்டு எண்ணக் கூடியவையே. விளையாட்டு மைதானங்கள் இருக்கும். ஆனால் உடற்பயிற்சி கூடங்கள் இருக்காது. இது தொடர்பாக ஒரு தனியார் பள்ளி முதல்வரை கேட்டபோது, “ஆரம்பிக்கலாம். பையன் வெயிட்ட கால்ல போட்டுகிட்டான்னா யார் பதில் சொல்றது” என கேள்வி கேட்டார். பெற்றோர்களின் கேள்விக்கு தன்னால் பதில் சொல்ல முடியாது என்றும் வருத்தப்பட்டார்.
இரு வருடங்களில் படிப்பை முடித்து விட்டு கல்லுாரி என்னும் பெரிய வாழ்க்கைக்கு வருகின்றவனுக்கு அந்தளவுக்கு கூட பொறுப்பில்லையென்றால் அவனை நம்பி வேறு எந்த பொறுப்பினைதான் நாம் ஒப்படைக்க முடியும்? ஆனால், ஒரு தகுந்த பயிற்சியாளரை நியமித்து இதில் ஈடுபாடு காட்ட செய்தால் நமக்கு கிடைக்கும் அடுத்த தலைமுறை மிக ஆரோக்கியமான தலைமுறையாக கிடைக்கும் அல்லவா? வீட்டுக்கு ஒரு கலர் டி.வி கொடுக்கும்போது, ஊருக்கு ஒரு உடற்பயிற்சி கூடம் கட்டிக் கொடுக்கலாமே!
9 comments October 15, 2008