Archive for October 12th, 2008
இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் III
இந்த தொடர் சார்ந்து ஒரு ஈமெயில் ஒரு நண்பரிடமிருந்து கிடைக்கப் பெற்றேன். தான் பின்னுாட்டத்தில் அதை தெரிவித்தால் நாகரிகமாக இருக்காது என உங்களுக்கு ஈமெயிலில் அனுப்புகின்றேன் என சில கருத்துகளை தெரிவித்திருந்தார். மேலும் தனிப்பட்டது என சொல்லி விட்டதால், அதனை வெளியிடவில்லை. மென்மையாக அவரின் கருத்துகளை தெரிவித்தமைக்காக அவருக்கு தற்சமயம் நன்றியை தெரிவித்துக் கொண்டு, அவர் தெரிவித்த கருத்துகளின் சாராம்சத்தை கீழே கொடுக்கிறேன்.
1. உங்கள் கட்டுரை அமெரிக்கர்களை வெகுவாக உயர்த்தி பேசுகின்றது
2. ஆசிய நாடுகளில் ஜப்பான், சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகள் தங்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தையும் கொண்டு, முன்னேறி இருக்கின்றன. அவைகளுடன் ஒப்பிடலாமே! எதற்காக அமெரிக்கா?
இத்தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லியது போல, இக்கட்டுரை அமெரிக்கர்களின் புகழை பாடுவது அல்ல. அவர்களிடமிருந்து நாமும், நம்மிடமிருந்து அவர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய சில பண்புகளை பற்றி பேசுவதேயாகும்.
ஒரு தொலை துார இந்திய கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி பொங்கல் கொண்டாடும் போது அவர் வீட்டில் நவீன விவசாய எந்திரங்கள் இருத்தல் வேண்டும். அவருடைய பிள்ளைகள் ஐ-பாட், மடிக் கணினிகளுடன் கலந்துக் கொள்ள வேண்டும். தடையில்லா மின்சாரம், அதி வேக இணையம், அனைத்து அடிப்படை மின்னனு உபகரணங்கள் போன்றவைகளுடன் அவர் வேட்டிக் கட்டிக் கொண்டு பொங்கல் கொண்டாட வேண்டும். இவ்வாறே இந்தியா அமெரிக்காவுடன் போட்டிப் போட்டு ஆக வேண்டும் என விரும்புகிறேன்.
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடாமல் ஏன் அமெரிக்காவுடன் ஒப்பிட்டேன் என்றால் உலக அளவில் சக்தி வாய்ந்த நாடு என்று சொன்னால் அமெரிக்கா தான் நினைவுக்கு வருகிறது. உலகின் மிக பெரிய சந்தை பொருளாதாரத்தை கொண்ட நாடு. அது மட்டுமல்லாமல், அமெரிக்காவிற்கும், நம் இந்தியாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.
இரண்டு நாடுகளும் பிரிட்டனோடு போராடி சுதந்திரம் பெற்றவை. சுதந்திரம் பெற போராடிய வழிமுறைகள் வேறாக இருந்தாலும் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றவை. ஆங்கிலேயரை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றது அமெரிக்கா. நம் நாடு அகிம்சை வழியை பின்பற்றி சுதந்திரம் பெற்றது. இரு நாடுகளும் சுதந்திரம் பெற்றதற்கு அந்நாடுகளின் எதிர்ப்பு மட்டுமல்லாமல் வேறு பல வெளி காரணங்களும் இருந்தன. நமது நாட்டிலும் சில அறிவாளிகள் நாமும் அமெரிக்கர்களை போல போரிட்டு சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் போன்ற கருத்தினை சொல்லுவார்கள். அவ்வாறு சண்டையிட்டு சுதந்திரம் பெற்ற அமெரிக்காவில் வடக்குக்கும், தெற்குக்கும் நடந்த சிவில் போரால் (சிவில் போர் வந்ததற்கு காரணங்கள் வேறு என்றாலும்) ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. நமது நாட்டிலோ வடக்கும், தெற்கும் முறைத்துக் கொண்டதே தவிர இதுவரை வேறு எந்த வித உரசலும் இல்லாமல் இருப்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும்.
பலவிதமான கலாச்சாரங்கள், மொழிகளை கூடிய மக்களை உள்ளடக்கியது இவ்விரு தேசங்களும். நம் நாட்டில் மொழி சார்ந்தே அதிக பிரிவினைகள் இருக்கின்றன. ஆங்கிலமே ஏறக்குறைய பொது மொழியாக இவ்விரு நாடுகளிலும் உள்ளது. இந்தியை எங்கே வளரவிட்டோம் நாம்? ஆங்கிலம் விதவிதமான உச்சரிப்புகளில் இவ்விரு நாடுகளிலும் பேசப்படுகின்றது.
இரண்டுமே உலகின் மிகப் பெரிய மக்களாட்சி முறையை கொண்டுள்ள நாடுகள். மக்கள் தொகையிலும் ஏறக்குறைய பரப்பளவிற்கேற்ற மக்கள் தொகையை கொண்ட நாடுகள்.
அமெரிக்காவை பற்றி இன்னும் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், சென்னை பல்கலைக் கழகம் வரலாறு முதுநிலையியல் படிப்பிற்காக “அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வரலாறு” என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. தயவு செய்து அதை படிக்காமல் திரு பா. இராகவன் எழுதிய “டாலர் தேசம்” என்ற புத்தகத்தை படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்காவை பற்றி அடிப்படையாக தெரிந்து கொள்வதற்கு அந்த புத்தகம் மிகச் சிறப்பான ஒன்று.
விளக்கமே பெரிய அளவில் அமைந்து விட்டதால், அடுத்த பகுதியில் வாழ்க்கை முறைகளை பற்றி பார்க்கலாம்.
அப்புறம், சொல்ல மறந்து விட்டேனே! மற்றொரு முக்கிய ஒற்றுமை : அங்கே திரு ஜார்ஜ் புஷ், இங்கே டாக்டர் மன்மோகன் சிங்.
11 comments October 12, 2008