Archive for October 9th, 2008

காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் I தப்பி ஓடிய இளவரசி

     சிறுவர் பத்திரிக்கைகளான பூந்தளிர், கோகுலம் போன்றவற்றை மட்டும் படித்துக் கொண்டிருந்த எனக்கு எதிர்பாராமல் ஒரு முழுநீள சித்திரக் கதை அறிமுகமானது. அந்த கதையை எப்படி விரும்பினேன் என்றால் என் வாழ்வின் கடைசி வரை நினைவிலிருக்கும் கதை அது. இதை படிக்கும் பலருக்கு இது பேத்தலாக தெரியும். சிலருக்கு இதன் உண்மையான அர்த்தம் புரியும். அந்த சித்திர கதைபுத்தகத்தின் பெயர் : தப்பி ஓடிய இளவரசி. வெளியிட்டது இராணி காமிக்ஸ்.

     அக்கதையினை படித்த பிறகு ரொம்ப நாள் அந்த சித்திரக் கதை புத்தகத்தோடேயே சுற்றிக் கொண்டிருந்தேன். எத்தனை தடவை வாசித்திருப்பேன் என்பதற்கு கணக்கே கிடையாது. இராணி காமிக்ஸ் வெளியிட்ட நான்காவதா அல்லது ஐந்தாவது இதழா என நினைவில்லை. முதல் கதை அழகியை தேடி என்ற ஜேம்ஸ் பாண்ட் கதை என்பது மட்டும் நினைவிருக்கிறது.

     இராணி காமிக்ஸ் பற்றி உங்களில் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொரு பழைய புத்தக கடையிலும் கிடைக்கும். ஆனால் முதல் நுாறு புத்தகங்கள் எந்த பழைய புத்தக கடையிலும் கிடைக்காது. அவ்வாறு கிடைத்து வாங்கியவர்கள் அதனை மீண்டும் பழைய புத்தக கடையில் போடமாட்டார்கள்.  இந்த இதழ்கள் பழைய லெண்டிங் லைப்ரரிகளில் இரு இதழ்களாக பைண்டிங் செய்து காணப்படும்.  இது போன்ற பழைய காமிக்ஸ் புத்தகங்களை வேட்டையாடுவதற்கு என்றே ஒரு வேட்டைக்காரர்கள் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது.  ஒரு காலத்தில் நானும் அந்தக் குழுவில் இருந்தேன். கிட்டத்தட்ட தங்க புதையல் தேடும் ஒரு வேட்டைக் காரர்களை போல சுற்றிக் கொண்டிருந்தோம். ஏதேனும் ஒரு ஊரில் ஒரு லெண்டிங் லைப்ரரியில் புத்தகங்கள் விற்க போகிறார்கள் என்றால் முக்கில் வேர்த்து உடனே அந்த ஊருக்கு சென்று விடுவோம். சில சமயம் நாங்களாகவே இந்த லைப்ரரியை முட போகின்றீர்களா என கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு.

      படிக்கின்ற வயதில் இது ஒரு வெட்டிப் பழக்கம் என்று உங்களில் பலருக்கு தோன்றலாம். இப்போது மீண்டும் யோசித்து பார்க்கின்ற போது எனக்கு காமிக்ஸ்கள் தேடி அலைந்த நாட்களை வீணாக கழித்த வெட்டி நாட்கள்  என்று தோன்றவே இல்லை. 
     இந்த பகுதியில் இராணி காமிக்ஸ் பற்றி எழுதலாம் என்றிருக்கின்றேன். தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஒரு சித்திர பத்திரிக்கை அது.  இராணி காமிக்ஸை தமிழின் முன்னோடி காமிக்ஸ் என்று சொல்ல இயலாது.  அதற்கு முன் சிவகாசியிலிருந்து வேறொரு காமிக்ஸ் வந்து கொண்டிருந்தது ( இதனை படிக்கும் இரசிக பெருமக்களிடமிருந்து விசில் சத்தம் கேட்பதை உணருகின்றேன்). ஆனால் ஆரம்பித்த குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் தன் முத்திரையை பதித்த தமிழ் காமிக்ஸீல் இராணி காமிக்ஸ்-ம் ஒன்று.

      ரு.1-50 என்ற சகாய விலையில் தன்னுடைய முதல் இதழை ஆரம்பித்தது. அப்போதைய சிறுவர் பத்திரிகைகளில் மிகக் குறைந்த விலையி்ல் கிடைத்தது இராணி மட்டுமே.   முதலில் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை போட்டு ஆரம்பிக்கப்பட்டது.  நான் வேட்டையர்கள் குழுவிலிருந்து தற்போது விலகிவிட்டேன் என்றாலும், இராணி காமிக்ஸ்-ன் முதல் ஐம்பது இதழ்கள் உங்களிடம் இருந்தால் அதனுடைய மதிப்பு நுாறு மடங்குக்கு அதிகமாகவே சந்தையில் போகும்.    அதனுடைய பளபளப்பான அட்டைப் படங்கள் ஒரு ப்ளஸ் பாயிண்ட். 

     தப்பி ஓடிய இளவரசி சித்திரக் கதையை படித்த யாருமே அதனை மறந்திருக்க முடியாது. பாரோக்கள் அரசாண்ட பழங்கால எகிப்தில் நடக்கும் ஒரு கதை. ஒரு இளவரசி அரண்மனை பிடிக்காமல் வெளியுலகை பார்க்க விரும்பிய கதை. அதனுடைய சித்திரத் தரம் அட்டகாசம். மிகத் தெளிவான சித்திரப் படங்களை அச்சில் கொண்டு வந்த காமிக்ஸ்.

    ஒவ்வொரு மாதமும் முதல் மற்றம் பதினைந்து தேதியில் கடைகளில் கிடைக்கும் வண்ணம் வெளிவந்து கொண்டிருந்தது. மிகச் சரியாக அந்த தேதிகளில் கடைகளில் கிடைக்கும். அப்போது அதனுடைய ஆசிரியர் யார் என நினைவில்லை.  இராணி காமிக்ஸ் ஆசிரியர் எதுவும் எழுதுவதில்லை.  பிறகு அதில் தொடர் கதைகளும் வெளிவர ஆரம்பித்தன. அவைகளும் நன்றாக இருக்கும். சென்ற இதழைப் பற்றி வாசகர் எழுதிய விமர்சனம் இரண்டாம் பக்கத்தில்     வெளியாகும். அதற்கு நல்ல சன்மானமும் கொடுத்ததாக நினைவு.

    இராணி காமிக்ஸீல் வெளிவந்த சில கதாநாயகர்களை பற்றி பார்க்கலாம்.

1. ஜேம்ஸ்பாண்ட் :


  இவரின் எல்லா கதைகளும் நன்றாக இருக்கும் என சொல்ல முடியாது.  சில கதைகள் டாப் கிளாஸ். உதாரணம் : இரகசிய மாநாடு 1 & 2, சுறா வேட்டை, மந்திரியை கடத்திய மாணவி போன்றவை

2. டைகர் :

     என்னுடைய ஆதர்ச நாயகன். புதிய கண்டுபிடிப்புகளுடன், Henry என்ற சயன்டிஸ்டுடன் புரியும் சாகசங்களே கதை. கதை முடிவில் அவர் சொல்லும் “டொட்டடாய்ங்” அப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.  ஒரு சில கதைகளே வெளிவந்தன. பர்மாவில் பாட்சா எனது பேவரைட்.

3. இன்ஸ்பெக்டர் ஆசாத்:

    இந்திய கதாநாயகனை கொண்ட வெளிவந்தவை. அனைத்துமே நன்றாக இருக்கும்.

4. மன்னர் பீமா :

    சில கதைகளே வெளிவந்தவை. நரபலி என்ற கதையில் அறிமுகம். இந்திய கதை. அட்டகாசமாக இருக்கும்.

5. ஒற்றர் படை தலைவர் கார்சன்

     அமெரிக்க உள்நாட்டு போரில் நடத்திய சாகசங்களை உள்ளடக்கிய கதைத் தொடர். உயிர் காத்த வீரன் என்ற கதையின் அட்டைப் படம் இன்னும் நினைவில் இருக்கிறது.

6. மாயாவி (வேதாளர்)

     இவரின் கதைகள் முதல் நுாறு புத்தகங்களில் வெளிவரவில்லை. சில மட்டுமே நன்றாக இருக்கும்.  இராணி காமிக்ஸ்-ன் இறுதி நாட்களில் இவரின் கதைகளை போட்டே இரசிகர்களை சோதித்துக் கொண்டிருந்தார்கள். கடைசி புத்ததகங்களில் மொழிபெயர்ப்பும் மட்டமாக இருக்கும்.

7. கரும்புலி

     இராணி காமிக்ஸ் நின்று போவதற்கு காரணமாயிருந்த கதாநாயகன் இவரே. போர் என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தையில் இவரைப் பற்றி விவரிக்க முடியாது.
     ரு.1.50 விலையில் வெளிவந்து முன்று ருபாயில் முடிந்த ஒரு காமிக்ஸ் புத்தகமே இராணி காமிக்ஸ்.  மீண்டும் புதுப்பொலிவுடன் தினத்தந்தி குழுமம் இராணி காமிக்ஸை களமிறக்கினால் கைதட்டி வரவேற்பு கொடுப்பதில் முதலில் நானே நிற்பேன்.
      மனம் கவர்ந்த வேறு சில காமிக்ஸ்கள் பற்றியும் இப்பகுதியில் பார்க்கலாம்.

11 comments October 9, 2008

Kung Fu Panda – விமர்சனம்

     உலக பொருளாதார நிலை நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதால், நிலைமை சரியாகும் வரைக்கும் பொழுது போக்கு அம்சங்கள், பயணக் கட்டுரைகள், திரை விமர்சனம் என எழுதலாம் என்றிருக்கிறேன். தயவு செய்து உனக்கு தெரிந்ததை மட்டும் எழுது, வேறு எதுவும் எழுதாதே என பின்னுாட்டத்தில் நீங்கள் கதறினாலும் நான் கேட்க போவதில்லை. மனதை கல்லாக்கிக் கொண்டு நீங்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

     எனக்கு தெரிந்தவர்களுக்கு நல்ல படங்கள் என சில கார்ட்டுன் படங்களை பரிந்துரை செய்யும்போது, “அய்யே, பொம்மை படமா?” என்று கேட்பவர்களிடம் மேற்கொண்டு என்னால் பேச முடிவதில்லை.

     அந்த “பொம்மை படங்களுக்கு” எவ்வளவு உழைப்பு தேவைப்படுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?  மற்றொரு ஆச்சரியமுட்டும் செய்தி : 100 Hollywood படங்கள் வெளிவருகின்றதென்றால் அவற்றில் குறைந்தபட்சம் 50 குப்பையாக இருக்கும், அதிலும் 25 உட்கார்ந்து பார்க்க சகிக்க முடியாததாக இருக்கும்.  இந்த கணக்கு “பொம்மை படங்களுக்கு” பொருந்துவதில்லை என தெரியுமா?  ஏறக்குறைய வெளிவரும் அனைத்து படங்களுமே நன்றாக இருக்கும். அரிதாக சில விதி விலக்குகள் உண்டு.  இந்த கார்ட்டுன் படங்கள் என நான் குறிப்பிடுவதில் ஜப்பானிய மங்கா (Manga) தொடர்கள் கணக்கில் வராது.

     Hollywood பிரபலங்கள் (Angelina Jolie, Jack Black etc)  அனைவருமே கார்ட்டுன் கதாபாத்திரங்களுக்காக குரல் கொடுக்க தயங்க மாட்டார்கள். இங்கே நாசர், ராஜீவ் போன்றோர் மட்டுமே அவ்வாறு இருக்கிறார்கள். டிஸ்னி (Disney), பிக்ஸர் (Pixar) (பிக்ஸர் நிறுவன வரலாறை பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் இருக்கிறது, இப்போதுதான் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அருமையாக இருக்கிறது. படித்தவுடன் அதை பற்றி பதிவிடாமல் விடப்போவதில்லை), டிரிம்வொர்க்ஸ் (Dreakworks) (ஸ்பீல்பெர்க் கம்பெனி, தற்சமயம் அனில் அம்பானியுடன் புதிய திரைப்படங்கள் தயாரிக்க ஒப்பந்தமிட்டுருக்கிறது) போன்ற ஸ்டுடியோக்களிலிருந்து வெளிவரும் கார்ட்டுன் படங்கள் அற்புதமாக இருக்கும்.

    டிரிம்வொர்க்ஸ் ஸ்டுடியோவிலிருந்து 2008-ல் வெளிவந்த படம்தான் “குங்பூ பாண்டா”. அமைதி பள்ளத்தாக்கு (Valley of Peace)  என்ற கிராமத்தில் தனது தந்தையுடன் நுாடுல்ஸ் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் கொழுகொழு பாண்டா போ-விற்கு மிகப் பெரிய குங்பூ மாஸ்டர் ஆகவேண்டுமென்ற கனவு.  டை லங் என்ற ஒரு மோசமான குங்பூ மாணவனால் வரவிருக்கும் ஆபத்திலிருந்து காப்பதற்காக பிரபல குங்பூ பள்ளி ஆசான்கள் அந்த வருடம் அந்த பள்ளத்தாக்கின் குங்பூ சாம்பியனை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்துகின்றார்கள்.
 

    அங்கே நுாடுல்ஸ் விற்க போகின்ற போ-வே சாம்பியன் என தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு குங்பூ கலையை கற்றுக் கொடுக்க அந்த மடாலாய சின்ன மாஸ்டரும் அவரின் சீடர்கள் (பாம்பு, குரங்கு,புலி, மேன்டிஸ்) போன்றவர்கள் படும் பாடு உங்களை கண்டிப்பாக விலாநோக சிரிக்க வைக்கும்.  போ-வும் டை லங் என்கிற பனிச் சிறுத்தையும் மோதும் கடைசி யுத்தமும் பிரமிக்க தக்க வகையில் படமாக்க பட்டிருக்கும்.
     படத்தின் சிறப்பம்சம் உரையாடல் எனலாம். எல்லோருக்கும் பெரிய மாஸ்டரான ஒகுவே ( ஆமை) போ-விடம் ஒரு மரத்தின் கீழ் பேசும் உரையாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. 

Yesterday is history, tomorrow is a mystery, but today is a gift. That is why it is called the Present”  

       இந்த படங்கள் ஏன் தமிழ்நாடு முழுவதும் டப் செய்து திரையிட படவில்லை என தெரியவில்லை. அதற்கு முன் அலாதீன், லையன் கிங் போன்ற கார்ட்டுன் படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். அதற்கு சரியான வரவேற்பு கிடைத்தது என்றே நினைக்கிறேன். தயவு செய்து குழந்தைகள் மட்டுமே பார்க்கும் படம் என நினைத்து விடாதீர்கள். உங்கள் மனதை மிகவும் லேசாக ஆக்கும் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

3 comments October 9, 2008

இனி என்ன செய்யலாம்?

     நான் வர்த்தகம் செய்யும் தரகு நிறுவனத்திற்கு நேற்று சென்றிருந்தபோது ஒரு சீனியர் முதலீட்டாளர் (பல வருட அனுபவம் உள்ளது என சொல்லிக் கொள்பவர்), பல முதலீட்டாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்தவர், என்னை பார்த்ததும்,

     “தம்பி, இங்க வாங்க…. நம்ப ( இன்னொரு முதலீட்டாளரின் ட்ரேட் கோடை சொல்லி) உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கார். நிறைய விஷயம் தெரியுமாமே உங்களுக்கு? இப்படி வாங்க….. இதுக்கு நீங்க என்ன வழி சொல்றீங்கன்னு பார்க்கலாம்”

     பொதுவாக பங்கு வர்த்தகம் நேரில் சென்று செய்யும் போது அவ்வளவாக பேசுவதில்லை. ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். அல்லது ஐ-பாடில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பேன். பெரும்பாலும் நேரில் சென்று வர்த்தகம் செய்வதில்லை.  கேட்கும் சிலரிடம் தெரிந்ததை சொல்வேன். தவறியும் பரிந்துரைகள் அளிப்பதில்லை. அதனால் என்னை யாரும் தொந்தரவு செய்வதில்லை.

     “சொல்லுங்க…மார்க்கெட் முடிந்தும் இங்கே இருக்கீங்க”

     அவரின் பிரச்சினை என்னவென்றால் ஐடியா செல்லுலார் பங்குகளை நிறைய எண்ணிக்கையில் ரு.88 என்ற விலையில் வாங்கியிருக்கிறார். அது குறையும் போதே விற்றிருக்கலாம். விற்காமல் மேலே ஏறும், ஏறும் என்ற நம்பிக்கையில் கடந்த ஒரு வாரமாக வைத்திருக்கிறார். இப்போது என்னை பார்த்து அந்த பங்குகளை நஷ்டம் இல்லாமல் எவ்வாறு விற்பது, அதுவும் வெள்ளிக் கிழமைக்குள் அவருக்கு பணம் தேவை என்றும், எப்படி விற்பது என கேட்டார்.

     கேட்டவிதம் எப்படியென்றால், அவர் சீனியர் என்றும், இதை போய் இவனிடம் கேட்பது என்றும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பெரிய கூட்டத்திற்கு நடுவில் ஒரு சவால் மாதிரி சொல்லி இதிலிருந்து விடுபட என்ன முடிவு எடுக்கலாம் என கேட்கின்றார்.  இவ்வாறு கேட்க நேரிட்டத்தை வெட்கமாக நினைத்து, கேட்கும் விதம் ஒரு உதவி கேட்கும்தொனியாக இல்லாமல் கேட்கின்றார்.

     நண்பர்களே, இது போன்று நீங்களும் நிறைய பங்குகள் அதிக விலைக்கு வாங்கியிருக்கலாம். உலக பொருளாதார நிலைமை சரியில்லை, சந்தை பெருத்த சரிவுகளை சந்திக்க போகிறது என எல்லோருமே சொல்லி வரும் நிலையில், என்ன செய்வது என்ற தவிப்பு உங்களுக்கு உண்டாகலாம்.

     நல்ல பங்குகளை வாங்கியிருக்கும் பட்சத்தில், கையில் வைத்திருப்பது நல்லது.  ஆனால் முதலீடு செய்யும் தொகை உங்களுக்கு 20 மாதங்களாவது தேவைப்படாமல் இருக்க வேண்டும்.  கடன் வாங்கி முதலீடு செய்த தொகை அல்லது அவசரமாக தேவைப்படும் தொகையென்றால் ஒரு சிறிய உயர்வு வர வாய்ப்பிருப்பதால், அதில் தேவைப்படும் பணத்தை மட்டும் எடுத்து விடுங்கள். எக்காரணம் கொண்டும் உங்கள் பங்கு தரகு நிறுவனங்கள் கடன் கொடுக்க முன்வந்தாலும், நாளின் முடிவில் கடன் வைத்து விட்டு செல்லாதீர்கள்.

   அதனாலேயே இனி என்ன செய்யலாம் என்ற தலைப்பு. இனி என்ன செய்ய வேண்டும் என யாரையும் கேட்காமல் உங்களி்ன் போர்ட் போலியோவை ஒரு தடவை தீர ஆய்வு செய்யுங்கள்.  எனக்கு தெரிந்து பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்களின் கைவசம் உள்ள பங்குகளின் பட்டியலை ஒரு துண்டு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டுதான் வருவார்கள். அதிலும் எண்ணிக்கை மற்றும் வாங்கிய விலை மட்டுமே இருக்கும். 

    வாங்கிய பங்கு விலையினை பங்கு சந்தையில் பார்ப்பதோடு சரி. அந்த பங்கினை பற்றி அங்குள்ள முதலீட்டாளர்களிடம் அபிப்பிராயம் கேட்பார்கள்.  அவர்களும் தெரிந்ததை சொல்வார்கள். அதனை வைத்து முடிவெடுப்பதோடு சரி என்ற நிலையைதான் நான் பார்த்திருக்கின்றேன்.

    நேற்றைய சந்தை -185-க்குள் ஆடும் என சொல்லியிருந்தேன். கிட்டத்தட்ட -260 புள்ளிகளை இழந்து மீண்டது. சில புதிய பள்ளங்களை தொட்டிருக்கிறது..  சந்தையை கீழே கொண்டு போவதற்கு இனி கரடிகள் சிரமப்பட தேவையிருக்காது. ஒவ்வொரு ஏற்றத்திலும் கடுமையான selling pressure எதிர்பார்க்கலாம்.  ஏற்றங்களும் சில மணி நேரமே நீடிக்கும் நிலை உள்ளது.

    சரி, அந்த முதலீட்டாளருக்கு என்ன பதில் சொன்னேன் என்பதை தெரிந்து கொள்ள விருப்பமா?

    “ஐடியா செல்லுலார் இப்போது நிப்டியில் இருக்கின்றதா என்ன? ” என ஆச்சரியமாக கேட்டேன். அவர் மேற்கொண்டு என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
       இந்த மாதிரி நிலையில் நான் எந்த ஆலோசனை சொன்னாலும், இவர்களை போல முதலீட்டாளர்களிடம் அது எடுபடாது. மேலும் அவர்களின் தவறுகளுக்கு யாரையேனும் பொறுப்பேற்க வைப்பதிலேயே அவர்கள் ஆர்வம் காட்டுவதால், அவருக்கு உதவி செய்வது வீண் சிக்கல்களையே உருவாக்கும்.

       விஜயதசமியை உற்சாகமாக கொண்டாட வாழ்த்துக்கள்.

1 comment October 9, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031