Archive for July 9th, 2008
பணவீக்கம் I
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையன்றும் பணவீக்கம் பற்றி எம்மாதிரியான புள்ளி விவரம் வரும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றோம். பண வீக்கம் பற்றி பல புள்ளி விவரங்கள் வாரா வாரம் சந்தையை அலைகழித்துக் கொண்டிருக்கின்றது. உண்மையில் பண வீக்கம் என்றால் என்ன அது எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்று பார்த்தால் வெள்ளிக் கிழமைதோறும் நண்பகல் 12.00 மணிக்கு வரும் ஒரு வித பயம் தெளியும் என்று நினைக்கின்றேன். சில அடிப்படையான விஷயங்களை இத்தொடர் கட்டுரையில் விளக்க முயல்வதால், இக்கட்டுரையை Fundamental Analysis பகுதியில் சேர்க்கலாம் என்று இருக்கின்றேன்.
பல வயதான மனிதர்கள் இவ்வாறு பேசுவதை நீங்கள் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள் “அந்த நாளையிலே இரண்டு ருபாய்க்கு டவுனுக்கு போய் ஒரு சினிமா பார்த்துவிட்டு, பீம விலாஸ்ல நல்லா சாப்பிட்டுவிட்டு, மஸ்தான் கடையிலெ ஒரு மசாலா பால் சாப்டுட்டு கடலையை கொறிச்சுகிட்டே ஊர் வரைக்கும் வந்துற முடியும்”.
தற்போதைய சூழலில், இன்னும் கூட இரண்டு ருபாய் இருந்தால்தான் கடலையையாவது வாங்கமுடியும். எவ்வளவு வித்தியாசம்? இப்போதும் டவுன்,சினிமா தியேட்டர், உணவகங்கள், மசாலா பால் எல்லாம் இருக்கின்றது. விலை மட்டும் பல மடங்காகியிருக்கிறது. கேட்டால் தெரிந்தவர்கள் கூறும் காரணம், பணவீக்கம். தெரியாதவர்கள் கூறும் காரணம், அப்போ நாங்க கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்தோம், அரசியல்வாதிகள் வந்து கெடுத்து விட்டார்கள். கருப்புப் பண முதலைகள் நிறைய இருக்கின்றன. எங்கும் ஊழல். யாருக்கும் பொறுப்பு இல்லை. நாற்பது ருபாய் சம்பளத்தில் ரொம்ப சுபிட்சமாக இருந்தேன். In Nineteen Fifty Five …. என்று பயங்கரமாக ஆரம்பித்து விடுவார்கள்.
உண்மையில் பணவீக்கம் ஆதிகாலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. ஒரு அடிப்படையான விளக்கத்தினை முதலில் பார்க்கலாம். பணவீக்கம் என்றால் பணம் வீங்கி (அது என்ன கட்டியா?) போகுதல். அதாவது பெரியதாக ஆகுதல் அப்படியென்று மிகவும் அடிப்படையான பொருள் கூட கொள்ளலாம். சாதாரணமாக இருக்கிற ஒரு பகுதி தீடிரென பெரியதாக ஆகுதல். இதைப் பற்றி நாம் ரொம்ப பின்னாடி போய் பார்ப்போம்.
மன்னர் காலங்களில் பணப்புழக்கம் என்றே கிடையாது. மிகவும் அடிப்படையான பண்டமாற்ற முறையில் தான் வியாபாரம் நடக்கும். இரண்டு கோழிகளுக்கு அரை முட்டை நெல்/கால் முட்டை காய்கறிகள்/ஒரு தங்க நாணய வில்லை என்ற ரீதியில் வியாபாரம் நடக்கும். மக்கள் தங்களிடம் உள்ள உபரியாக உள்ள ஒன்றை கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தார்கள். எல்லாம் நல்லபடியாக தான் நடந்துக் கொண்டிருந்தது. ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் ஒவ்வொரு ஏரியா ராஜாக்களும் ரொம்பவும் மானமிகு, வீரமிகு சிங்கங்களாக இருந்ததுதான். என் மீசையைப் பற்றி தவறாக பேசிய அண்டை நாட்டு மன்னனின் நாக்கை வெட்டி ஊறுகாய் போட்டுவிட்டுதான் மறுவேலை என்று வெட்டிபந்தா பேசி முனுக்கென்றால் போருக்கு தயாராக இருந்தார்கள். இந்த மாதிரி வெட்டிப்போர்களால் நாட்டின் பண்டமாற்று முறை மிகவும் பாதிக்கப்பட்டது. கத்தி கபடாவுக்கெல்லாம் மவுசு ஏறிபோய்விட்டது. இதை சமநிலைப்படுத்த அப்போது ரொம்ப கிராக்கியாக இருந்த தங்கம் ( இப்போதுகூட தான்), வெள்ளி போன்ற உலோகங்களைக் கொண்டு வில்லை தயார் செய்து பண்டமாற்று முறையை மேம்படுத்திக் கொண்டார்கள். ஒரு ஏரியா ராஜா அடுத்த பேட்டையில் காலை ஊன்றியவுடன் அந்த ஏரியா காசெல்லாம் செல்லாக் காசாகிவிடும். இந்த மாதிரி தான் ஏரியா பொருளாதாரம் இருந்தது.
இப்ப அப்படியே தசாவதாரம் ஸ்டையில்ல 21-ம் நுாற்றாண்டிற்கு வருவோம். நிலைமை சிறிது கூட மாறவில்லை. ஏரியாவெல்லாம் பெரிசா ஆயிருக்கு. அவ்வளவுதான். அதே வெட்டி பந்தா. வெட்டிப் போர்கள். பண்டமாற்று முறை தான். சிறிய வித்தியாசம் : பண்டமாற்று முறை பணத்தை (Currency) அடிப்படையாக வைத்து நடக்க ஆரம்பித்தது. அதனை மேம்படுத்தி, வழிநடத்த வங்கி போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
இப்போது ஒரு சின்ன கற்பனை : நம்நாட்டில் பதினைந்து கோடி ருபாய் பணம் இருந்து, இருபது கோடி ருபாய்க்கு நாடு பொருட்களை உற்பத்தி செய்கின்றது (விவசாயம், தொழிற்சாலை என்று எல்லா துறைகளையும் சேர்த்து) என்று வைத்துக் கொண்டால் எது குறைவாக கிடைக்கின்றதோ அதற்கு தான் கிராக்கி இல்லையா? பணத்தின் மதிப்பு அதிகரித்துவிடும் அல்லவா. இவ்விரண்டையும் ஒரு தராசில் வைத்தால் எது குறைவோ அது மேலேறிவிடும். மேலேறிவிடுவதற்கு தான் மவுசு அதிகம். இந்த சமநிலையை புரிந்துகொண்டால் பணவீக்கத்தின் அடிப்படையை வெகு எளிதாக புரிந்துக் கொள்ளலாம்.
இந்த சமநிலையை எவ்வாறு அரசாங்கம் பேணி வருகின்றது? அரசாங்கம் எந்த முறைகளில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வருகின்றது? என்று வரும் வாரங்களில் பார்க்கலாம். பொருளாதார பாடங்களில் பண வீக்கத்தைப் பற்றி படிப்பது மிகவும் மந்தமான காரியம். (பொருளாதாரம் முழுவதுமே இப்படிதான் என்று கூறும் ஒரு சாராரும் இருக்கின்றார்கள்) . இந்த வகுப்புகள் எல்லாம் ஒரு தவ சாலை மாதிரி ஆகிவிடும். ஆசிரியர் மந்திர உச்சாடனம் சொல்வது போல் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். மாணவர்கள் எப்போதும் ஒருவித யோக நிலையில் இருப்பார்கள். இதனாலேயே யாராவது ஒருவர் பி.ஏ (பொருளாதாரம்) படிக்க போகின்றேன் என்று சொன்னால் இச்சமுகம் அவர்களை பரிதாபமாக பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இது பற்றிய அறிவு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருப்பதனால் கூடிய வரையில் எளிய வகையில் எழுத முயற்சி செய்கின்றேன்.
9 comments July 9, 2008
09-07-2008
அமெரிக்க சந்தை ஏறுமுகமாக முடிந்திருக்கிறது. ஆசிய சந்தைகளும் நன்றாகவே இருக்கின்றன. நம் சந்தை மத்திய அரசின் ஸ்திரதன்மை குறித்து எழுப்பிய நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி தடுமாறக் கூடும். நமது பிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் பல்வேறு விதமான ஊகங்கள் எழ வாய்ப்பிருக்கின்றன. சந்தையின் முக்கிய சப்போர்ட் லெவலான 3700-ஐ சோதிக்கக் கூடும் என்றே நினைக்கின்றேன்.
சந்தை ஆரம்பத்திலேயே தடுமாறக் கூடும் என நினைக்கின்றேன். மொத்தத்தில் கரடிகளுக்கு உற்சாகமான நாள் இன்று. புதியவர்களுக்கு தின வணிகம் இன்று ஆபத்தானது. சந்தை இன்று Negative ஆக முடிவதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. -175 முதல் 35 முதல் ஆடும் என எதிர்பார்க்கின்றேன்.
On the Market :
மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கிய சந்தை கடந்த இரண்டு மணிநேரமாக எந்த முன்னேற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது. ஏதேனும், நல்ல/கெட்ட செய்திகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றே நினைக்கின்றேன். எந்த பக்கமும் சரியக் கூடும் நிலை இது. மிகுந்த கவனத்துடன் வணிகம் செய்யவும். சந்தை 3700 -ஐ இந்த வாரத்திலேயே சோதிக்க நேரிடும் என்றே நம்புகின்றேன். புதிய முதலீடு செய்யும்போது கவனத்துடன் செய்யவும்.
1 comment July 9, 2008