Archive for July 6th, 2008
Intraday Trading III
இனி வரக் கூடிய பதிவுகளில் அனைத்திலும் உங்களுடைய கருத்துகள் அவசியம் எனக்கு தேவைப்படுவதால் தவறாமல் பின்னுாட்டம் இடும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
பங்கு சந்தைக்கு புதியதாக நுழையும் ஒருவர் தற்சமயத்தை பொறுத்த வரையில் குறைந்தது ஒரு மாதத்திற்குள் தின வணிகம் செய்ய ஆரம்பித்து விடுகின்றார். எனக்கும் நீங்கள் தின வணிகத்தை எதிர்த்தே பதிவுகளை போடுகின்றீர்கள் என நிறைய ஈ-மெயில்கள் வருகின்றன. பங்கு சந்தையில் நாம் நுழைவது எதற்காக? நம்முடைய பணத்தை முதலீடு செய்து, முதலீடு வளர்ந்த பிறகு பின்னர் லாபத்தை ஈட்டுவதற்காக தானே! வங்கியிலும், தபால் நிலைய திட்டங்களிலும் அப்படிதானே போடுகின்றோம்.
எத்தகைய கல்வி தகுதி கொண்டவர்களும் ஒரு வீட்டினை வாங்குவதற்கு முன் எத்தனை விஷயங்களை பார்க்கின்றார்கள்! வில்லங்க பத்திரம், சர்வேயர் சான்று, அதற்கு பக்கத்தில் உள்ள மனைகளின் தன்மை, மெயின் ரோட்டிலிருந்து எவ்வளவு துாரம் இருக்கின்றது, குடிநீர் வசதி என்று எத்தனை கவனமாக பார்த்து வாங்குகிறோம். அதே அளவுக்கு அலசி தானே முதலீடு செய்யபோகும் பங்குகளை அலசி இப்பங்குகளில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் வளருமா, எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்பதையெல்லாம் அலச வேண்டும். எத்தனை பேர் அவ்வாறு செய்கின்றார்கள்? வேகமாக விலையேறும் பங்குகளை (Momentum Stocks) முதலீட்டுக்கெற்ற பங்குகள் என நினைத்து குழு மனப்பான்மையுடன் வாங்கி விடுகின்றோம்.
ஒரு பங்கின் எதிர்கால (குறைந்தது ஒரு வருடம் கழித்து) விலை குறித்தே இவ்வளவு விஷயங்கள் சேகரித்து நாம் முதலீடு செய்ய வேண்டும் என்றபோது, தின வணிகம் என்பது ஒரு பங்கின் விலையை ஐந்து மணி நேரத்திற்குள் இந்த நிலைகளில் இருக்கும் கணிப்பது என்பது எவ்வளவு கடினம். அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளாமல், சூதாட்டத்தில் ஈடுபடுவது போல, குதிரை பந்தயத்தில் ஈடுபடுவதுபோல் இந்த குதிரை மேல் நுாறு, அந்த குதிரை மேல் ஐநுாறு என்று கட்டும் நிலை தான் இருக்கிறது.
தின வணிகத்தை பொறுத்த மட்டில் Fudamental Analysis மட்டுமில்லாது கடந்த ஏழு நாட்களில் Average volume, Market Movement போன்று பல விதமான புள்ளி விவரங்களை நன்கு ஆராய்ந்தே ஐந்து மணி நேரத்தில் அப்பங்கு எந்தெந்த நிலைகளில் இருக்கும் என சொல்ல முடியும். வேறு சில புற காரணிகளும் (External Factors) உள்ளன. அது மட்டுமின்றி, இது நுாறு சதவிதம் சரியாக கணிக்க இயலாத ஒன்றாகும்.
அப்போது தின வணிகத்தில் ஈடுபடவே கூடாதா? நான் அப்படி சொல்ல வில்லை. ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நாம் முதல் நாள் நுழையும் போது ஒரு வாரத்திற்குள் நமக்கு அர்னால்ட் உடலமைப்பு வந்துவிடுமா? இது தொடர்பாக அயராது உழைக்க வேண்டும். புதிய விஷயங்களை சலிக்காமல் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களை பார்த்து அவர்கள் மட்டும் ஈடுபடும் போது நான் ஏன் இறங்கக் கூடாது என்ற மனநிலையே வேண்டாம். ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை பங்கு சந்தையிலிருந்து சம்பாதிக்க வேண்டும் என்று ஆரம்ப நிலைகளில் இலக்கு நிர்ணயிப்பது மிகவும் ஆபத்தானது.
இப்போது ஒரு கேள்வி : தமிழ்நாட்டில் .. இந்தியாவில் உள்ள அனைத்து பங்கு தரகு நிறுவனங்களிலும் Delivery Based வணிகத்திற்கு தரகு கட்டணம் அதிகமாகவும், தின வணிகத்திற்கு குறைவாகவும் ஏன் உள்ளன?
7 comments July 6, 2008