Archive for July 1st, 2008

Intraday Trading

     பங்கு சந்தை பற்றிய தெளிவான புரிதலுடன் சில வருடங்கள் வரை தமிழில் பத்திரிக்கைகள் இல்லை. “வளர்தொழில்” போன்று சில பத்திரிகைகள் மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. விகடன் குருப்பிலிருந்து “நாணயம் விகடன்” வந்த பிறகு தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு பங்கு சந்தை பற்றிய விழிப்புணர்ச்சி வந்தது என சொல்லலாம். ஆனால் கடந்த மே 2007 மாதத்திற்கு பிறகு பங்கு சந்தை சீறி மேலே கிளம்பிய பிறகு பங்கு சந்தையில் இறங்கினாலே பணம் என்று நிறைய பேர் வந்தார்கள். பங்கு சந்தையில் நுழைந்து பெரிய பணக்காரர்கள் ஆன வாரன் பப்பெட், சோரஸ் என பல உதாரணங்கள் காட்டப்பட்டன. பங்கு சந்தையின் அடிப்படை தெரியாமல் அல்லது தெரிந்தும் மறந்தும் நிறைய பேர் தற்போது களத்தில் உள்ளார்கள். அடிப்படை பற்றி பேசுவது இக்கட்டுரையின் நோக்கம் இல்லை. தினவணிகம் பற்றிய ஒரு பொதுவான பார்வையே.

      தற்போது பங்கு சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்களை (சிறு முதலீட்டாளர்கள் மட்டும்) முன்று வகையாக பிரிக்கலாம் :

1) மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள்

2) பங்கு சந்தையில் சரிவில் வெளியே சென்று ஏற்றத்தில் உள்ளே வந்தவர்கள்

3) கடந்த ஒரு வருடத்தில் புதியதாக பங்கு சந்தையில் நுழைந்தவர்கள்

     முதல் வகையினர் அவ்வளவாக தங்களது அனுபவங்களை பற்றி பேச மாட்டார்கள். ஆனால் சில நேரங்களில் அருமையான அறிவுரைகளை அவர்களிடமிருந்து நாம் பெறலாம். இரண்டாவது வகையினருக்கும் முன்றாவது வகையினருக்கும் பெருத்த வித்தியாசம் கிடையாது. இரண்டாம் மற்றும் முன்றாம் வகையினர் பெரும்பாலும் செய்வது தின வணிகம் தான். டெலிவரி எடுக்கும் பங்குகளை கூட ஸ்விங் செய்யும் நோக்கத்திலேயே வாங்குவார்கள்.
   

      இவர்கள் பெறும் வெற்றிகளை மிகுந்த ஆரவாரத்துடன் பறைசாற்றுவதை நான் கேட்டிருக்கின்றேன். “மச்சான், நம்ம மகா பொண்னு இல்ல, இப்ப அது என்ன ஒரு மாதிரி பார்க்குதுப்பா” என்ற ரீதியில் “நேத்து இந்த ஜே.பி அசோசியேட்ஸ் கூட ஒரு விளையாட்டு மாதிரி செய்து ஒரு இரண்டாயிரம் பார்த்துட்டேன்” இந்த மாதிரி சொல்லி சொல்லி கூட இருப்பவர்கள் மனதில் தின வணிகத்தைப் பற்றி ஒரு பெரிய பிம்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள். கேட்பவர்களுக்கு தின வணிகத்தில் பணம் சம்பாதிப்பதை விட மற்றவர்களிடம் இவ்வாறு பேசுவதில் உள்ள ஆர்வம் அதிகரித்து தின வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள்.

       குழுமங்கள் பற்றி அடிப்படை தெரியாமல் எப்படி தின வணிகத்தில் ஈடுபட முடியும்? இருக்கவே இருக்கிறது, ஏகப்பட்ட தனியார் நிறுவனங்கள் தினமும் தின வணிக பரிந்துரைகள் உங்கள் கைபேசியில். அவர்கள் கொடுக்கும் பரிந்துரைகளில் நுழையும் விலை , வெளியேறும் விலை (Exit Price) பற்றி சரியாக தெரியாமலே இறங்கி படாத பாடு படுவதை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் கொடுக்கும் பரிந்துரைகள் சரியாகவே இருந்தாலும், சந்தையை மிகச் சரியாக இதுவரை யாரும் predict செய்ததில்லை.
   
     அடுத்தப்படியாக, Fast or Momentum பங்குககளில் தினவணிகம் செய்வது. காளைகளும், கரடிகளும் விளையாடும் கால் பந்தே Momentum  பங்குகள். விளையாட்டு விதிகள் பற்றி தெரியாமல் விளையாட்டில் கலந்துகொண்டால் என்ன விளைவுகள் ஏற்படுமோ அதுதான் ஏற்படும். மேலும் ஆட்ட நேரம் குறுகிய காலம் தான். அடுத்த ஆட்டத்தில் வேறு பந்து. சமயத்தில் நாம் கிழிந்து போன பந்தை கையில் வைத்து கொண்டு அதன் அடுத்த முறைக்காக காத்திருப்போம். இதற்காக நான் தின வணிகமே செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. அதற்காக சில தகுதிகளை வளர்த்துக் கொள்வது பற்றி தான் எழுதலாம் என்று உள்ளேன்.
 
      இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் அனைவரும் தின வணிகம் செய்கின்றார்களா, அவர்களும் ஆயிர ஆயிரமாக சம்பாதிக்கின்றார்கள் என்ற கேள்விகள் எழலாம். அவர்களுடைய உற்சாகமான வெற்றிகளை பற்றிதான் சொல்வார்கள், அவர்களுக்கும் “வைதேகி காத்திருந்தாள்” போன்ற சோகம் இருக்கும். ஒரு நண்பர் தான் தின வணிகம் செய்தே இலட்சாதிபதியாக ஆகி விட்டதாக சொல்வார். அது ஒரு பாதி. மற்ற பாதி : அதற்கு முன் அவர் கோடீஸ்வரராக இருந்தவர்.

  கட்டுரை பெரியதாகி விட்டது என்று நினைக்கின்றேன். அடுத்த பகுதி தொடரலாமா என்பதை பற்றி நீங்கள் தான் சொல்லவேண்டும்.

4 comments July 1, 2008

01-07-2008

     ஆசிய சந்தைகள் ஆக flat  இருக்கின்றன. அமெரிக்க சந்தையும் அவ்வாறே முடிந்திருக்கிறது. இனி கச்சா எண்ணெய் விலை மற்றும் பண வீக்கம் மட்டும் சந்தையை பாதிக்காது.  ஆட்சி ஸ்திரமின்மை (Political Instability) என புதியதாக ஒன்றும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளது. ஒரு வருட குறைவிற்கு மிக மிக அருகில் இருக்கின்றோம். அநேகமாக இன்று புதிய பள்ளத்தை சந்தை சந்திக்கும் என்று நினைக்கிறேன். நிப்டியில் (Niffty)  4000 என்ற லெவல் இன்று உடையும் என்றே நினைக்கிறேன்.

      மத்திய ஆட்சி பற்றி இன்று இடது சாரிகளோ அல்லது ஆளுங்கட்சியோ வெளியிடும் அறிக்கைகளை பொறுத்தே சந்தையின் பாதை தெரியும். பொதுவாக மத்திய அரசுக்கு தேர்தல் வர சில மாதங்களே உள்ள நிலையில் தேவையில்லாமல் இடது சாரிகள் ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெற மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். இன்று ஏதாவது மிக நல்ல செய்தி வந்தால், சந்தை மேலெறுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. ஆனால் இது போன்ற சந்தையில் கடைசி நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கக் கூடும்.

     இன்றைய சந்தை +75 முதல் -80 வரை ஆடும் என நினைக்கின்றேன். +25 முதல் +75 வரை Positive ஆக முடிய வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன்.  நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது சில பங்குகள் மிக குறைவான விலையில் கிடைக்கின்றன. புதிய முதலீட்டாளர்கள்  தின வணிகத்தை சிறிது நாள் தவிர்ப்பது நல்லது.

 

4 comments July 1, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031