Archive for June 21st, 2008

Bear Market IV

     அமெரிக்க சந்தை (Dow Jones)  வெள்ளியன்று 220 புள்ளிகளை இழந்திருக்கிறது. திங்களன்று மேலும் 200 புள்ளிகளை இழக்கும் பட்சத்தில் ஒரு வருட குறைவான (One year Low)  புள்ளிகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவுகள் ஐரோப்பிய, ஆசிய சந்தைகளில் கண்டிப்பாக எதிரொலிக்கும். நாம் ஏற்கெனவே விலைவாசி புள்ளியுடன் போராடி கொண்டிருக்கிறோம்.

     மத்திய அரசு தன்னுடைய கடைசியாண்டில் இருக்கிறது. இந்த நேரத்தில் நீண்ட நோக்கில் வர்த்தக கொள்கையை மேற்கொள்ளாமல் குறுகிய காலத்தில் ( மக்களின் ஒட்டுகளை மனதில் வைத்து) ஏதேனும் தவறான வர்த்தகக் கொள்கையை வணிகத் துறை அமைச்சகமோ, நிதித்துறை அமைச்சகமோ தேர்ந்தெடுக்க நேரிட்டால் நமது சந்தை புதிய பள்ளங்களை தொட வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் அனைத்து சந்தைகளிலும் ( பிரேசில், இரஷீயா உட்பட) கரடிகளின் ஆதிக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறன. நமது சந்தை கூட விதிவிலக்கல்ல.
     நான் இதுவரை பார்க்கின்ற சக முதலீட்டாளர்கள் ( வணிகர்கள்) அனைவரும் தங்களுடைய கையிருப்பில் உள்ள பங்குகளின் மேல் உள்ள முதலீட்டை  இரண்டு மாதங்களுக்கு மேல் வைத்திருப்பதில்லை. 99 சதவிதத்திற்கு மேல் இவ்வாறு தான் இருக்கின்றார்கள். வங்கியில் வைப்பு நிதியில் வைத்திருக்கும் தொகையை நாம் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் எடுக்காமல் பொறுமையாக காத்திருப்பது போல் பங்கு சந்தையிலும் முதலீடு செய்த தொகையை முதிர்வு நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டாமா!

    கடந்த ஒரு வருடத்தில்தான் புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்கு வர தொடங்கியுள்ளனர்.  பங்கு தரகு நிறுவனங்கள் புதிய கிளைகளை  தொடங்கியுள்ளன.பங்கு சந்தையை பற்றிய விழிப்புணர்ச்சி அதிகரித்து வருகின்றது. ஆறாம் வகுப்பிலிருந்து வருமான வரி பற்றிய பாடங்கள் வரப்போகிறது என கேள்வி. பன்னிரெண்டாம் வகுப்பில் வரி ஏய்ப்பு பற்றி பாடங்கள் கூட வர வாய்ப்பு இருக்கிறது.காப்பீடு திட்டங்களிலும், ஒய்வுதிய திட்டங்களிலும் பங்கு சந்தையுடன் இணைந்த திட்டம் என விளம்பரபடுத்தப்படுகின்றன. சினிமா டிக்கெட்களில் மட்டும் தான் இணைக்கப்பட வில்லை. சென்ற வருட காளைகளின் சந்தை ஜனவரி சரிவினை மட்டும் சந்திக்காமல் இருந்திருந்தால், சினிமா டிக்கெட்களிலும் பங்கு சந்தையுடன் இணைந்த திட்டம் வந்திருக்கும். நீங்கள் டிக்கெட் வாங்கும்போது உங்கள் பணம் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, திரைப்படம் முடிந்து நீங்கள் செல்லும் போது உங்களுக்கு வட்டியுடன் வழங்கப்பட்டிருக்கும்.  மக்களிடம் பங்கு சந்தையை பற்றி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், தவறான வழிகாட்டுதல்களின் முலம் பங்கு சந்தை பள்ளங்களை தொடும்போது மீண்டும் பங்கு சந்தையை பற்றிய பழைய கருத்து “பங்கு சந்தை என்றாலே ரிஸ்க்” திரும்ப வந்து விடும் நிலை தற்போது இருக்கிறது.  அதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் தற்போது உள்ள புதிய முதலீட்டாளர்கள் அனைவரும் காளைகள் உச்ச நேரத்தில் இருக்கும்போது வந்தவர்கள். எந்த பங்கினை வாங்கினாலும் ஒரு வாரத்திற்குள் குறைந்தது 5 சதவிதமாகவது ஏறியிருக்கும். எல்லோரும் நல்ல லாபத்தினை பெற்று வந்தனர். தீடீரென அந்த வாய்ப்பை இழக்கும்போது, அவர்கள் அனைவரும் குற்றம் சொல்வது பங்கு சந்தையை தான்.

      இந்த வலைப்பதிவினை ஆரம்பித்தபோது சந்தை See-saw ஆடிக்கொண்டிருந்தது. கரடிகள் காலடிகள் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது கரடிகள் உருவங்களை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் சிறிது காலத்தில் முழு உருவத்தையும் காண போகிறோம். தற்போதைய சூழலில் வாங்கக் கூடிய பங்குகளை குறைந்தது ஒரு வருடமேனும் கையிருப்பில் வைத்திருக்க முடியும் என்றால் வாங்கலாம். கையிருப்பிலுள்ள தொகையை பிரித்து மியுட்சுவல் நிதிகளில் ஒரு பகுதியை முதலீடு செய்யலாம். ஏனெனில் சந்தை பள்ளங்களை தொட்டுக் கொண்டிருக்கும்போது, மியுட்சுவல் நிதிகளின் ஒபன் எண்டட் (Open Ended) திட்டங்களின் யுனிட் மதிப்பு ரு.10 க்கும் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் நல்ல அனுபவம் மிக்க நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதால், யுனிட்களின் மதிப்பு குறுகிய காலத்தில் மேலே ஏற வாய்ப்பு உள்ளது.

     விலைவாசி உயர்வு பற்றிய புள்ளி விவரம்தான் தற்போது நம் சந்தையை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று சரியாக தெரியவில்லை. பெட்ரோல் விலையேற்றம் பற்றிய முடிவு போல் தாமதமாக வங்கி ரேட் குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளிவருமா அல்லது எதிர்கட்சிகளை ( இடது சாரிகளை, அவர்களும் எதிர்கட்சிகள் மாதிரிதான்) சமாதானப்படுத்த முடிவினை தள்ளி போடாமல் விரைவில் அறிவிக்குமா என்பது தெரியவில்லை. அனுசக்தி ஒப்பந்த பேச்சு வார்த்தை வேறு பாதியில் இருக்கிறது. அமெரிக்காவிற்கும் புதிய அதிபர் வரப்போகிறார். ஜான் மெக்கெயின் வர வாய்ப்பிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கச்சா எண்ணெய் அடுத்த வாரம் என்ன விலையில் இருக்கும் என்று தனியே  சந்தை ஆரம்பிக்கலாம்.
      இவ்வாறான சூழலில், தேர்தல் முடிந்து ஒரு நிலையான ஆட்சி நம் நாட்டிலும், அமெரிக்காவிலும் (அங்கே இரண்டு கட்சிகளே இருந்தாலும், போன முறை நம்நாட்டை விட குழப்பாக தேர்தல் முடிவுகள் வெளியாகின என்பதை யாரும் மறந்திருக்க முடியாது) வரும்வரை சந்தையின் பாதையை சரிவர கணிக்க இயலாது. அதற்கு குறைந்தது ஒரு வருடமேனும் காத்திருக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற போல் நம் மனநிலையை தயார் செய்து உற்சாகமாக முதலீட்டில் ஈடுபடுவோம்.

1 comment June 21, 2008

#4 Fundamental Analysis – The Company

    ஒரு குழுமத்தின் கணக்கு வழக்கு பற்றி தெரிந்து கொள்ளும் முன் குழுமம் என்பதை பற்றி சிறிது தெரிந்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

   ஒரு குழுமம் என்பது எவ்வாறு, ஏன்  தொடங்கப்படுகின்றது என்று பார்ப்போம்.

     ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் அறிவில் உதயமாகும் எண்ணங்களை (spark)  செயல்படுத்தும் போது உருவாவது தான் ஒரு குழுமம்.  ஆனால் அவர்களிடம் அச்சமயத்தில் அவ்வெண்ணங்களை செயல்திட்டத்தில் கொண்டுவர முதல் தேவையான முதல் (Capital) இல்லாமல் இருக்கலாம். அச்சமயத்தில் அவர்கள் வேறு யாரிடம் போவார்கள்? மக்களிடம் போய் அவர்களின் திட்டங்களை எடுத்துச் சொல்லி ஒரு குழுமத்திற்கு தேவையான முதலை (Initial Public Offer) திரட்டுவார்கள்.

      தேவையான முதலை சிறிய பங்குகளாக பிரித்து  பணம் திரட்டுவார்கள். அவ்வாறு திரட்டுகையில் அக்குழுமத்தின் பெரும்பாலான பங்குகளை ( 25 சதவிதம் முதல் 51 சதவிதம் வரை)  பிரமோட்டர்களின் கையிருப்பில் இருக்கும். சமயத்தில் வேறு யாரேனும் இத்திட்டங்களின் எதிர்காலத்தை கணித்து மொத்தமாகவும் முதலீடு செய்வார்கள். இன்போஸீஸ் (Infosys) மற்றும் ரிலையன்ஸ் (Reliance)  போன்ற குழுமங்கள் இவ்வாறு உருவாக்கப்பட்டவை. அக்குழுமங்களை துவக்க புரமோட்டர்களிடம் ( திரு நாராயணமுர்த்தி மற்றும் அம்பாணி)  தேவையான முதல் இல்லை. மேலும் அவ்விரு குழுமங்களும் மேற்கொள்ளவிருக்கும் வணிகம் லாபமுள்ளது என்று நிறைய பேர் அச்சமயத்தில் கருதவில்லை. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் துணிதான் தரமுள்ளது, நம்முர் துணி சாயம் போகும் என்ற எண்ணம் மக்களிடத்தில் இருந்த காலத்தில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. மணிரத்னம் இயக்கிய “குரு” திரைப்படத்தில் ஏறக்குறைய இளவயது அம்பானியை அபிஷேக் பச்சன் பிரதிபலித்திருப்பார். கணினி என்றால் என்ன என்று கிட்டத்தட்ட 95 சதவிதம் மக்கள் தெரியாமல் இருந்த காலகட்டத்தில் தொடங்கப்பட்டது இன்போஸீஸ். நம்நாட்டில் இருந்த சிறந்த வர்த்தக முன்னோடிகள் என்று நாம் அவர்களை சொல்வதற்கு காரணமே இதுதான். டாடா, பிர்லா, நந்தா போன்றவர்கள் Legends. அவர்கள் கதை தனி.

   Initial Public Offer (IPO)  ல் அவ்விரு குழுமங்களும் முழுவதுமாக subscribe ஆக வில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? தற்போது வெளியிடப்பட்ட ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீட்டில் 2 மடங்குகளுக்கு  மேல் subscribe ஆனது. சில குழுமங்கள் ஆரம்பிக்கும்போது துவக்க செலவுகள் (Initial Costs) அதிகமாக இருக்கும். தளவாட சாமான்கள் வாங்கிய செலவுகள் அதிகமாக இருக்கும். முதல் சில காலாண்டுகளுக்கு நஷ்டத்தையே காட்டும். உதாரணத்திற்கு டாடா டெலிசர்விஸஸ் ( Tata Teleservices Maharashtra Ltd) . மகாராஷ்ட்ரா மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் தொலைபேசி மற்றும் இணைய தொடர்புகளை இக்குழுமம் கொடுத்து வருகிறது. இக்குழுமம் கணினி மற்றும் இணைய தொடர்புகளை கொடுப்பதற்காக கேபிள் மற்றும் எலக்ட்ரானிக் தளவாட செலவுகள் அனைத்தும் குழுமம் தொடங்கையில் நிரந்தர செலவாக (Fixed Cost) செய்யப்பட்டுள்ளதால், இதுநாள்வரை இக்குழுமம் நஷ்டத்தையே காட்டி வருகிறது. ஆனால், ஒவ்வொரு காலாண்டிலும் வருவாய் பெருகி, நஷ்டம் குறைந்து வருவதை அக்குழும லாப நஷ்ட கணக்கிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அடுத்த சில காலாண்டுகளில் இக்குழுமம் லாபத்தை நோக்கி நடை போட ஆரம்பித்து விடும்.
     சில குழுமங்கள் முழு வீச்சில் உற்பத்தியை ஆரம்பிக்க சில காலாண்டுகளாகவது பிடிக்கும். அக்குழும பங்குகள் அனைத்தும் சந்தை ஏற்ற இறக்கங்களில் வேகமாக ஊசலாடும். இதற்கு உதாரணம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் (Reliance Petroleum) . கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு (Refinery) செய்யும் வணிகத்தை மேற்கொண்டு பங்கு வெளியிட்டது. இக்குழுமத்தின் அதிக விலை குறைந்த விலை என்று பார்த்தால் ரு300/75. மேலும், சந்தை சரிவுகளில் மிக வேகமாக இறங்கி ஏற்றங்களில் ஏறியும் வந்துள்ளது. இந்தியாவில் அதிக அளவு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் நிறுவனமாக இன்னும் ஆறு மாதங்களில் விளங்கபோகிறது. நவம்பர் 2008 முதல் செயல்பட துவங்கும் என அதன் தலைமை நிர்வாகி அறிவித்திருக்கிறார். இதைபோலவே ரிலையன்ஸ் பவர் (Reliance Power).
     மேலே குறிப்பிடப்பட்ட இரு வகை குழுமங்களில் முதல் வகை குழுமங்கள் ஆரம்பத்தில் குறைந்த விலையில் கிடைத்தாலும் சில காலாண்டு அறிக்கைகளுக்கு பிறகு வணிகத்தை பொருட்டு லாபம் ஈட்ட ஆரம்பித்து விடும். கையிருப்பில் வாங்கி வைத்திருக்கலாம். இரண்டாம் வகை குழுமங்களை பொறுத்த வரை குழுமம் ஆரம்பிக்க போகும் காலத்திற்கு அருகில் வாங்கினால் லாபம் ஈட்டலாம். எப்படி இருப்பினும் முதல் இரண்டு காலாண்டுகளுக்காவது, நஷ்டத்தையே காட்டும். இதுபோன்றே, விமான போக்குவரத்து துறை (Aviation Transport) , எரிசக்தி (Power) துறை போன்ற துறைகளை சொல்லலாம். தகவல் தொழிட் நுட்பத் துறையை (IT)  பொறுத்த மட்டில், மனித வளத்தை (Human Resources)  நம்பியுள்ளதால், மிக குறுகிய காலங்களில் வருவாயை ஈட்ட தொடங்கிவிடும்.

     வளர்ந்த ஒரு குழுமத்தில் முதலீடு செய்வதை காட்டிலும், தற்போது ஆரம்பித்து விரைவில் வளர போகும் குழுமத்தில் முதலீடு செய்ய Fundamental Analysis உதவும். ஏனென்றால், அக்குழுமங்கள் உற்பத்தியை ஆரம்பிக்காதலால், காலாண்டு அறிக்கைகள் இருக்காது. மிகச் சரியான நேரத்தில், மிகச் சரியான விலையில் செய்யும் முதலீடே நல்ல லாபத்தை தரும். ஒவ்வொரு கரடிகள் சந்தையிலும் இதுபோன்ற குழுமங்களில் முதலீடு செய்து, சில வருடங்கள் வரை கையிருப்பில் வைத்திருந்தால் நல்ல இலாபம் பார்க்கலாம். வாரன் பபெட் (Warren Buffett)  இன் வழியும் இதுதான்.

4 comments June 21, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30