Archive for May 18th, 2008

Bear Market II

      நாம் பங்கினை வாங்கிய உடன் விலையேற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். சமயத்தில் அன்றைய தினமே விலையேற கூடாதா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. வாங்கிய விலையை விட 10-15% அதிகமானால் விற்று இலாபத்தை பெற்று விடவேண்டும் என கருதும் முதலீட்டாளர்கள் தற்போது அதிகமாக இருக்கின்றார்கள். சந்தையில்  பெரும்பாலும் காளை மனநிலையே (Bullish Mindset)  உள்ளது என்று ஒரு பிம்பத்தை நாம் மனதில் உருவாக்கி வைத்திருக்கின்றோம். அது கலையும் போது ஏற்படும் அதிர்ச்சியில் நம்மால் தெளிவாக சிந்திக்க இயலாது போகிறது.
       ஒவ்வொரு முறையும் சந்தை இறங்கும்போதும் அவர்களில் பலர் குழப்பம் அடைந்து கையிலுள்ள பங்குகளை நஷ்டத்தில் விற்று விட்டு (loss booking)  வெளியேறி விடுகின்றார்கள். பின்னர் அப்பங்குகள் விலை குறைவாக (அவர்கள் விற்ற விலைக்கும் குறைவாக) கிடைக்கும் பொழுதும், அவர்கள் வாங்கிய பழைய விலையை பற்றியே நினைத்து மீள வாங்காமல் அந்த நஷ்டத்தை உறுதிப்படுத்தி கொள்கின்றார்கள்.

      சந்தையில் அனுபவம் பெற்று மனமுதிர்ச்சி வந்த பிறகு சந்தை மேலெறினாலும், கீழிறங்கினாலும்  சரி நாம் இலாபம் பெற முடியும். பங்கு சந்தையில் கற்று கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களில் அது ஒன்று.  கரடிகள் சந்தை என்பதும் ஒரு இலாபத்தை பெருக்க ஒரு சந்தர்ப்பமே என்பதை புரிந்து கொண்டால் தேவையற்ற மனகுழப்பங்கள் எழாது. அதை கற்றுக் கொண்டவர்களில் நிறைய பேர் அதை பற்றி பேசுவதில்லை. அதை கேட்கும் மனநிலையும் தற்போதைய fast track  முதலீட்டாளர்களிடம் இல்லை.

           கரடிகள் சந்தையையும் சந்தை சரிவுகளையும் (Market Corrections)  ஒன்றாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அதாவது சந்தை சரிந்தால் கரடிகள் கையில் சிக்கி விட்டது என்று. சந்தை சரிவு (Correction)  என்பது பல்வேறு காரணங்களால் நடக்கக் கூடியது.  சரிய ஒரு வலுவான காரணமும் இருக்கும். அப்படி ஏதும் வலுவான காரணங்கள் இல்லாமல் சரிந்தால் அது மீண்டு வர நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாது. தற்போது அமெரிக்க சந்தைகளை பார்த்து நம் சந்தை react செய்வதை போன்று.  கரடிகள் சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர படிப்படியாய் தான் முயல்வார்கள். சந்தை சரிவுகள் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமே. ஒரே நாளில், ஒரே வாரத்தில் கரடிகள் சந்தையை கைப்பற்ற முடியாது. அத்தகைய மனநிலை அனைவருக்கும் வர சிறிது காலம் பிடிக்கும். வந்து விட்டால், காளைகள் அனைவரும் கரடிகள் ஆகிவிடுவார்கள். இதுபோன்ற எதிர்மறை மனநிலையானது ( Negative Mindset) பங்கு சந்தையில் மிக வேகமாக பரவக் கூடிய வாய்ப்பு எப்போதுமே உண்டு. ஏனெனில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய பங்குகளை பற்றி அடி மனத்தில் ஒரு பயத்துடனே இருக்கின்றார்கள். 

        நாம் வாங்கும் பங்குகளை பற்றிய விவரங்களை தெளிவுற அறிந்திருந்தால், குறைந்தது அது மீள தன் பழைய விலைக்கு  செல்லுமா என்று முடிவு செய்து கையில் வைத்திருக்கலாம். அல்லது அதன் குறைந்தபட்ச விலையில் வாங்கி Average பண்ணலாம். அல்லது அதன் குறைந்தபட்ச விலை அறிந்து அதற்கு முன் விற்று மீள வாங்கி இலாபம் பெறலாம். இது போன்ற சந்தர்ப்பங்களை பங்கு சந்தை எப்போதுமே அளிக்கின்றது. இரண்டாம் வாய்ப்பு கண்டிப்பாக உண்டு.

      தற்போது பரபரப்பாய் பேசப்படும் தங்க காசு திட்டத்திலும் இதுதான் நடந்தது. அத்திட்டத்தில் சேர்ந்த அனைவரும் இத்திட்டம் சிறப்பான இடத்திற்கு போகும் என நம்பி சேர்ந்தவர்கள் (Mass Bullish Mind). சில முதலீட்டாளர்கள் திடும்மென இத்திட்டத்தின் வெற்றி பற்றி சந்தேகம் கொள்ள அம்மனநிலை அனைவருக்கும் பற்றி மீதி விவரங்களை செய்தி தாள்களில் படித்திருப்பீர்கள்.  இது மட்டுல்ல பத்து வருடங்களுக்கு முன் சிட் பண்டுகளுக்கும் இதே நிலைமைதான். அடிப்படைகளை பற்றி சிந்திக்காமல் கண்டிப்பாக சிறப்பான எதிர்காலம் உண்டு நம்பும் Mass sentiment தான் காரணம்.

        உங்களின் பங்கு கரடிகள் கையில் சிக்கி இருக்கின்றதா என்பதை கண்டறிவது எப்படி என்று அடுத்த பகுதியில் பார்ப்போம். அடுத்தடுத்த பகுதிகளில் கரடிகள் கையில் சிக்க போகும் முன் கண்டறிவது எப்படி என்பதையும் பார்ப்போம்.

2 comments May 18, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031